சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு என்னும் ஊரில் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கோயம்பேடு அமைந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்" என்ற பெயர் உண்டானது. 'குசலவம்" என்றால் 'குள்ளம்" என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வது போல் காட்சி தருவது சிறப்பு.
தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.
வேறென்ன சிறப்பு?
பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா, லட்சுமி, ஞானசரஸ்வதி, நாகர் ஆகியோரும் இருக்கின்றனர்.
நவகிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, ரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.
இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரதசப்தமி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
வலப்புறம் உள்ள அம்பிகையை வணங்கினால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. கன்னிப்பெண்கள் இந்த அம்பிகையை வணங்கி திருமணத்தடை நீங்கப் பெறலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக