தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட பெற்றோர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும் என்ற கட்டாயம் உள்ள இந்த நவீன காலத்தில், குழந்தையை டேகேர் அல்லது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
உங்களது குழந்தையை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, வேலை அல்லது ஏதாவது எமெர்ஜென்சி காரணமாக சில மணிநேரங்களாவது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற தவிர்க்க முடியாத நேரத்தில் அவர்களை வீட்டில் தனியாக இருக்க தயார்படுத்துவது சிறந்தது. நீங்கள் தொலைவில் இருக்கும் போது சுதந்திரமாக செயல்பட, உங்களையே நம்பியிருப்பதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உதவும். அதே போல குழந்தைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி அவர்களுக்கு கற்பிப்பது முக்கியம்.
உங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக இருக்க விடும் முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே...
எமர்ஜென்சிக்கு சில நம்பர்கள்..
ஒரு குழந்தை தனியாக இருக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் உங்களது மொபைல் நம்பர் உட்பட 3 முதல் 5 அவசரகால தொடர்பு நம்பர்களையாவது மனதளவில் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் பெற்றோர், நெருங்கிய உறவினர் மற்றும் நம்பகமான அண்டை வீட்டாரின் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். தவிர அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை போன்ற பிற அவசர தொடர்பு எண்களை பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லி அவற்றை எழுதிய டைரியை அவர்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். வெளியில் இருந்தாலும் வீட்டிற்கு அடிக்கடி கால் செய்தோ அல்லது அக்கம்பக்கத்தினரை அடிக்கடி கண்காணிக்கவோ கேட்கலாம்.
சில ரூல்ஸ் அவசியம்:
குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் போது நாள் முழுவதும் டிவி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அதை கட்டுப்படுத்த சில அடிப்படை ரூல்ஸ்களை கடைபிடிக்க வைப்பது மிகவும் முக்கியம். எனவே நீங்கள் சில பேசிக் ரூல்ஸ்களை உருவாக்கி, அதை கடைபிடிப்பது ஏன் அவசியம் என்பதை அவர்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் டிஜிட்டல் ஸ்கிரீன்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க கலைபொருட்கள் செய்வது அல்லது புதிர் விளையாட்டுகளில் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்கலாம்.
பாதுகாப்பு முக்கியம்:
ஒரு குழந்தை வீட்டில் தனியாக இருக்கும் போது அதன் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தை அடுப்பு, தீப்பெட்டி, கத்தி, பிளேடுகள், மருந்துகள் உள்ளிட்ட இன்னும் பல அபாயகரமான பொருட்களை தனியே இருக்கும் போது பயன்படுத்தாமல் பார்த்து கொள்வது அவசியம். தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உங்கள் பிள்ளையின் கை மற்றும் பார்வைக்கு எட்டாதவாறு வைப்பது நல்லது. அதே போல தீ, கொள்ளை, மருத்துவ நெருக்கடிகள் அல்லது வேறு ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அவர்களுக்கு கற்று கொடுப்பதும் முக்கியம். தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது, முதலுதவி பெட்டியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை கற்று கொடுக்க வேண்டும்.
அத்தியாவசிய உணவுகள்..
குழந்தையை தனியாக விட்டு செல்லும் முன் அவர்கள் அணுகுமாறு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில பழங்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் அல்லது உணவுகளை அவர்கள் லிதில் எடுத்து சாப்பிடும் வகையில் வைத்து செல்ல வேண்டும். கரண்ட் போகும் சூழலை அவர்கள் சமாளிக்க மின் விளக்குகளையும் அவர்களுக்கு கொடுத்து வைக்க வேண்டும்.
கதவை திறப்பதில் கவனம்..
வீட்டில் யாரும் இல்லாத போது கதவு தட்டும் சத்தம் அல்லது காலிங் பெல் சத்தம் கேட்டால் கதவை திறப்பதற்கு முன், வெளியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் குழந்தை கேட்டறிந்து பின் கதவை திறப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தெரியாத புது நபர்கள் வந்தால் கட்டாயம் கதவை திறக்கவே கூடாது என்பதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்.
இல்லறவியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக