விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தினசரி வாழ்க்கையில் "சந்தோஷத்திற்கு பணமா, இல்லை பணத்தால் சந்தோஷமா" என்று தெரியாமல் செலவு செய்கிறோம். இதனாலேயே பல பேர் என்னால் சேமிக்க முடியவில்லை. நிறைய பணம் செலவு செய்கிறேன். இதற்கெல்லாம் காரணம், பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் போன்பே, ஜீபே போன்ற ஆப்கள்தான் என குற்றம் சாட்டுகின்றனர். இது சரியா, செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்.
''பணத்தை செலவு செய்வது ஒரு தனி நபரின் விருப்பம் ஆகும். அதாவது, பணத்தை நீங்கள் உங்களது அக்கவுண்டில் (வங்கி கணக்கில்) வைத்திருந்தாலும் அதை ஜீபே, போன்பே போன்ற யூபிஐ ஆப்களில் செலவு செய்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதற்காக இதுபோன்ற செயலிகளைக் குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில், பணத்தை ரூபாய் நோட்டுகளாக கையில் வைத்திருந்தாலும் நாம் அதிகமாகதான் செலவு செய்கிறோம்.
உதாரணமாக, பணத்தை ரூபாய் நோட்டுக்களாக செலவு செய்யும்போது சில்லறையாக இருக்கும் பணத்தையும் சேர்த்து செலவு செய்கிறோம் 415 ரூபாய் தேவை இருக்கும் இடத்தில் 500 ரூபாய் என ரவுண்டாக பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்கிறோம். அப்போதே 415 ரூபாயை செலவு செய்து விட்டு மீதி அந்த 85 ரூபாயையும் எப்படி செலவழிக்கிறோம் என்று தெரியாமலேயே நாம் செலவழிக்கிறோம்.
இதுபோன்று 85 ரூபாய் தானே என்று பலமுறை செலவு செய்தால் இதுவே நம் சேமிப்பிலிருந்து ஒரு பங்கைக் குறைக்கிறது. ஜீபே, போன்பே போன்ற ஆப்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் போது நாம் உரிய பணம் அதாவது 415 என்றால் 415 மட்டுமே செலுத்துவோம்.
ஜீபே, போன்பே போன்ற ஆப்கள் மூலம் பணத்தை செலவு செய்வது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கலாம். காரணம் அவர்கள் நோட்டுக்களாகவே செலவு செய்து பழகி இருப்பர். செலவினங்களை எழுதி வைப்பது பழக்கமாக இருக்கும்பட்சத்தில் அனைத்து செலவினங்களையும் மறக்காமல் கணக்கு பார்த்து விடுவோம். ஆனால் புதிதாக செலவினங்களைக் கணக்கு பார்க்க நினைப்பவர்கள் சில நேரங்களில் செலவு கணக்குகளை எழுத மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஜீபே, போன்பே போன்ற செயலிகளைப் பயன்படுத்துவதால் நாம் தனியாக செலவுகளைக் குறித்து வைக்க தேவையில்லை. அது மட்டுமல்லாமல் இது எப்போதும் அழியாத ஒன்று எந்த நேரத்திலும் நம் செலவு கணக்குகளை பார்த்துக் கொள்ளலாம்.
ஜீபே, போன்பேவை அதிகம் பயன்படுத்துபவர்களால் சேமிக்க முடியவில்லை என்பது தவறு. சேமிப்பு என்பது சேமிக்க நினைப்பவர்களைப் பொருத்தது. சேமிப்பை நாம் எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம். பொதுவாக, பணம் ஜீபே, போன்பே போன்ற செயலிகளில் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் பணத்தை வேறு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்டுக்கும் மாற்றலாம். அதற்கு பொதுத் துறை வங்கிகளில் பல சேமிப்புத் திட்டங்களும் உண்டு.
ஆப்கள் மூலம் பணத்தை செலவிடுவது மிகவும் சிறந்த ஒன்று. காரணம் நம் கைகளில் நோட்டுகளாக வைத்திருந்தால் அதை திருடு போகலாம். கணக்குகளை எங்கேயும் தவற விடுவதற்கும் வாய்ப்புண்டு. இதே இந்த மாதிரி செயலிகள் மூலம் வரவு செலவு கணக்குகள் வைத்துக் கொண்டால் மிகவும் பாதுகாப்பாகவும் செலவு செய்யும் பணத்திற்கான கணக்கும் தெரிந்துவிடும்.
பணம் ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி ஆப்களில் இருந்தாலும் சரி அதிகம் செலவு செய்வது ஒரு தனிநபரையைச் சார்ந்தது. ஒரு தனி நபர் நினைத்தால் செய்யும் செலவுகளை கணிசமாக குறைத்துக் கொள்ளலாம். தேவையானவற்றிற்கும், செலவு கணக்குகளை எழுதி வைத்தும், முன்னரே பிளான் செய்தும் செலவுகளை செய்யலாம். இப்படி செய்வதால் நம் செலவுகளைக் குறைக்கவும் முடியும்.
இவற்றை மறந்துவிட்டு இந்த மாதிரி ஆப்கள் இருப்பதாலேயே நான் அதிகம் செலவு செய்கிறேன் என்று சொல்வது தவறு, இனியாவது பணத்தை அதிகம் செலவு செய்வதற்கு ஆப்கள் தான் காரணம் என்று சொல்லாமல் அந்த பணத்தை சுய கட்டுப்பாட்டுடன் குறைவாக எப்படி செலவு செய்வது, முறையாக எப்படி சேமிப்பது என்பதை பற்றி யோசிப்பதே சிறந்தது என்று கூறி முடித்துள்ளார் ஆத்விக் டெக் சொலுயூஷன் சர்வேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக