மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரில் அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் தேரழுந்தூர் உள்ளது. தேரழுந்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல மூலவர் சாளக்கிராம கல்லால் கிழக்கு நோக்கி 13 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இறைவனுக்கு வலது புறம் பிரகலாதன் சிலையும், இடது புறம் கருடன் சிலையும் காணப்படுகின்றன.
கருவறையில் கருடன் அமைந்துள்ள ஒரே திவ்ய தேசம் இதுதான். இத்தல உற்சவர் அமருவியப்பன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளார்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23வது திவ்ய தேச தலமாகும்.
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற அமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை அமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்.
வேறென்ன சிறப்பு?
இத்தல ஊரில் கம்பர் அவதரித்ததால், வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலது புறத்தில் கம்பரும், அவருடைய மனைவியும் தனிச்சன்னதில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளன. இக்கோயிலின் எதிரே குளம் உள்ளது.
கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றின் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. இடது புறத்தில் ஆண்டாள் சன்னதி உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கால்நடை தொழில் செய்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
திருமணத்தடை நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக