"டெக்னாலஜி வளருது, நாடு முன்னேறுது" என்று நாம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சம்பவம் நம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
25 வருடங்களாக ஒரே வங்கியில் உழைத்த ஒரு பெண்மணி, தனக்குத் தெரியாமலேயே தன் வேலைக்கு உலை வைக்கும் ஒரு AI (செயற்கை நுண்ணறிவு) ரோபோவிற்கு பயிற்சி அளித்துள்ளார். இறுதியில், அந்த AI ரோபோவே அவரது வேலையை பறித்துக்கொண்டது என்பதுதான் கொடுமையின் உச்சம்.
நடந்தது என்ன?
கேத்ரின் சல்லிவன், 63 வயதான இவர், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கியில் (CBA) கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
சமீபத்தில், வங்கி ஒரு புதிய AI சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் 'பம்பிள்பீ' (Bumblebee). இந்த பம்பிள்பீ வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இந்த AI-க்கு பதில் அளிக்க கற்றுக்கொடுக்கும் வேலை கேத்ரினுக்கும் அவரது குழுவினருக்கும் கொடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும், எந்த மாதிரி உரையாடல்களை உருவாக்க வேண்டும் என்று கேத்ரின் தனது அனுபவத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த AI-க்கு பயிற்சி அளித்துள்ளார்.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஒருநாள் கேத்ரினையும் அவருடன் பணியாற்றிய 44 பேரையும் வங்கி வேலையை விட்டு நீக்கியுள்ளது.
காரணம்?
அவர்கள் பயிற்சி அளித்த பம்பிள்பீ என்ற AI, இப்போது அவர்களின் வேலையை முழுமையாக செய்யத் தொடங்கிவிட்டது.
"நானே என் வேலைக்கு சங்கு ஊதிட்டேன்!"
"எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 25 வருட உழைப்பிற்குப் பிறகு இப்படி ஒரு நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்குத் தெரியாமலேயே, என் வேலையைப் பறிக்கும் ஒரு ரோபோவிற்கு நான் பயிற்சி அளித்திருக்கிறேன்" என்று கேத்தரின் கண்ணீருடன் கூறியுள்ளார்
2029-ல் ஓய்வு பெறலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த கேத்ரினுக்கு, இந்த செய்தி பேரிடியாக இறங்கியுள்ளது. முதலில் அதிர்ச்சியில் உறைந்து போனாலும், இப்போது AI மற்றும் அதன் தாக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளார். "தொழில்நுட்பத்தை நான் வரவேற்கிறேன், ஆனால் அது மனிதர்களின் வேலையைப் பறிக்கும் அளவுக்கு வளரக்கூடாது. அதற்கென்று சில கட்டுப்பாடுகள் தேவை" என்று அவர் வலியுறுத்துகிறார்.
இந்தச் செய்தி வைரலான பிறகு, வங்கித் தரப்பில் இருந்து தவறை ஒப்புக்கொண்டு, நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைத்தாலும், கேத்ரின் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். காரணம், இனி அந்த வேலையில் ஒரு பாதுகாப்பு இருக்குமா என்ற சந்தேகம் தான்.
இந்தச் செய்தி நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்: தொழில்நுட்ப உலகில் நாம் வேகமாக முன்னேறினாலும், மனித உணர்வுகளையும், உழைப்பையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாம் உருவாக்கும் தொழில்நுட்பமே நமக்கு எமனாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக