Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 10: ஓர் இனிய பயணத்தொடர்

பொர்ராக் குகைகளில் மணிக்கணக்கில் செலவிட்டாயிற்று. குகை திறக்கப்பட்டதும் நுழைந்த முதல் கூட்டத்தில் இருந்தமையால் குகையை அதன் தனிமையோடு பார்க்க வாய்த்தது. உள்ளே நிலவிய மிதமான குளிரும் பேரமைதியும் என்றென்றும் நினைவில் நிற்கும். 

குகைக்குள்ளிருந்து திரும்பத் தொடங்கினேன். உள்ளே சென்ற அதே பாதையில்தான் திரும்ப வேண்டும். பிலம் குகைகளைப்போல் உள்ளே சென்று வட்டமாகத் திரும்புவதற்கில்லை. 

குகைக்குள் செல்கையில் பார்க்காமல் கடந்துபோன சந்து பொந்துகள் சிவலிங்கங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்தேன். குகைக்குள் நுழைந்தபோது இருந்த தயக்கமும் அச்சமும் விலகியிருந்தன. பழகிய வீட்டுக்குள் உலவுவதைப்போன்ற நெருக்கம் ஏற்பட்டிருந்தது. 

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் இங்கேதான் பிறந்து வளர்ந்து மகிழ்ந்து பிள்ளை பெற்றுக் கறிசுட்டுத் தின்று மறைந்தனர் என்பதை நினைக்கவே சிலிர்த்தது. குகையின் வாய்ப்பகுதிக்கு வந்தேன். 

வெளியே வானத்தின் மேகக்கலைவுகள் தெரிந்தன. வெளியில் அமைக்கப்பட்டிருந்த கல்மேடையில் சற்றே அமர்ந்திருந்துவிட்டு வெளியேறினேன். இப்போது குகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகக்தொடங்கிவிட்டது. 

சீறுந்துகளும் மகிழுந்துகளும் நிறுத்தம் தேடி முன்னும் பின்னுமாய் அலைந்தன. பொர்ராக் குகையிலிருந்து தானிழுனி ஒன்றைப் பிடித்து அரக்குப் பள்ளத்தாக்கு செல்லும் சாலைக்கு வந்தோம். 

ஒரு தேநீர் அருந்திவிட்டு நின்ற நேரத்தில் அரக்குக்குச் செல்லும் பேருந்து வந்தது. ஆந்திரத்தின் சிலவகைப் பேருந்துகளில் நடத்துநர் இல்லை. ஓட்டுநரே கட்டணம் பெற்றுக்கொள்கிறார். ஆந்திரப் பிரதேசமானது பரந்து விரிந்த மாநிலம்தான், ஆனால், அம்மாநிலத்திற்கு மலைவாழிடங்கள் எங்கும் இல்லை. தமிழ்நாட்டுக்கு உதகை, கோடைக்கானல், வால்பாறை, ஏலகிரி, ஏற்காடு, கல்ராயன் மலைகள், குரங்கணி என்று எண்ணற்ற மலைவாழிடங்கள் இருக்கின்றன. 

ஏறுவதற்குக் கடினமான கொல்லிமலையைத் தனிமாவட்டமாகவே அறிவிக்கலாம். அங்கே அவ்வளவு மக்கள் வாழ்கின்றார்கள். ஆந்திரத்திற்கு அவ்வாறு எந்த மலை வாழிடங்களும் அமையவில்லை. நல்லமலைத்தொடர்கள், ஏழுமலைத் தொடர்கள் என்று பல மலைத்தொடர்கள் இருப்பினும் அவற்றைக் காப்பிடப்பட்ட காடுகளாகவே வைத்திருக்கிறார்கள். 

அக்காடுகளை அழித்து குடியேற்றங்களை அமைத்தால்தான் ஒரு மலைப்பகுதி மலைவாழிடமாக மாறும். அதை அவர்கள் செய்யாமலிருப்பதற்காகப் பாராட்டலாம். ஆந்திரத்தின் இராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி வட்டத்தில் ஹார்ஸ்லி ஹில்ஸ் (Horseley Hills) என்று அழைக்கப்படுகின்ற 'யானக மல்லம்ம கொண்ட' என்னும் சிறுமலைத்தொடர் இருக்கிறது. ஐந்தாறு கொண்டை ஊசி வளைவுகளில் வண்டியை விட்டு ஏற்றினால் அம்மலைத்தொடரை அடைந்துவிடலாம். ஹார்ஸ்லி மலைமீதிருந்து பார்க்கையில் எதிரே பெரிய பள்ளத்தாக்கும் மடிப்பு மடிப்பான மலைகளின் தோற்றத்தையும் ஒருங்கே கண்டுகளிக்கலாம். 

இராயலசீமைப் பகுதியின் கடுமையான வெய்யிலுக்கு ஹார்ஸ்லீ மலையில் நிலவும் இதமான தட்பவெப்பம் நல்ல மாற்று என்பதால்தான் ஹார்ஸ்லீ என்னும் ஆங்கிலேய ஆட்சியர் அதைக் கோடைவாழிடம் ஆக்கினார். இப்போது அங்கே எந்தக் குடியிருப்புமில்லை. மலையில் ஏறி இறங்கிவிட வேண்டும். ஹார்லி மலைகளைவிட்டால் அடுத்தது அரக்குப் பள்ளத்தாக்குத்தான். அரக்குப் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும் என்கின்ற அவா மேலிட்டது. ஆந்திரத்தின் உயர்ந்த சிகரமான காளிகொண்டலு இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதுவே மாநிலத்தின் தலைமையான மலைவாழிடம் என்று கொள்ள வேண்டும். 

நம் ஏற்காடு எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறது அரக்குப் பள்ளத்தாக்கு. அரக்கில் ஊசியிலை மரங்களைப்போன்ற எந்த ஒவ்வாத தன்மையும் இல்லை. மும்மாநிலங்களின் எல்லையோரச் சிற்றூர். சமவெளி மக்களைப்போலவே மலைமேலும் இயல்பான வாழ்க்கை நிலவுகின்ற ஊர். அரக்கில் ஓர் இருப்பூர்தி நிலையமும் இருக்கிறது. 

விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள கொத்தவலச என்கின்ற ஊர்க்கும் சத்தீஸ்கரத்திலுள்ள கிரண்டூலுக்கும் இடையே செல்லும் இருப்புப்பாதை அரக்கின் வழியாகத்தான் செல்கிறது. அரக்கு இருப்பூர்தி நிலையத்திற்குச் சென்று பார்த்தோம். ஒரேயொரு இருப்பூர்தி வந்து திரும்பிச் செல்லும் என்றனர். கொல்லிமலையில் நிலவும் தட்பவெப்பம், மலைமடிப்புகள் என்று அரக்குப் பகுதியைச் சொல்லலாம். 

ஆங்கிலேயர் ஆட்சியில் இப்பகுதியில் நல்ல காடுகள் இருந்திருக்கின்றன. 'குளம்பி வாரியம்' (Coffee Board) இங்கே குளம்பிக் கொட்டைகளை விளைவிப்பதில் ஊக்கம் காட்டியதால் இப்போது 'குளம்பிக்கொட்டைத் தோட்டங்களை' அமைத்துவிட்டார்கள். 

ஆந்திரத்திற்கு மலைகளே இல்லாததால் அருவிகளும் இல்லை. அரக்கு மலைகளின் உட்பகுதியில்தான் காட்டிகி, தம்பிகுடா, சப்பாறை ஆகிய பெயர்களில் அருவிகள் இருக்கின்றன. நீரோடைகளின் காட்டாறுகளின் பாறை வழிவுகளை அருவி என்று கொண்டாடுகிறார்கள். அரக்கின் இன்னொரு காட்சியின்பம் அங்குள்ள தாவரவியல் பூங்காதான். பூங்காவிற்குள் அருமரங்கள் வைத்து வளர்க்கிறார்கள். பூங்கா முகப்பிலிருந்த புல்வெளியில் அரங்கசயன நிலையில் சிறிது நேரம் படுத்துக்கொண்டேன். இருட்டத் தொடங்கிவிட்டது. அரக்குப் பேருந்து நிலையத்திற்கு வந்து விசாகப்பட்டினத்திற்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக