Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 11: ஓர் இனிய பயணத்தொடர்

அரக்குப் பள்ளத்தாக்கிலிருந்து விசாகப்பட்டினத்தை வந்தடைந்தபோது முன்னிரவு தாண்டிவிட்டது. அதிகாலை இருள்பிரிவதற்கு முன்பாகவே விசாகப்பட்டினத்து இருப்பூர்தி நிலையத்தில் இருக்க வேண்டும். கௌகாத்தி இருப்பூர்தியில் ஏறி ஸ்ரீகாகுளத்தில் இறங்க வேண்டும். அதனால் அன்றிரவும் விசாகப் பட்டினத்தின் காத்திருப்பு அறையிலேயே படுக்கை.

Exploring Odhisha, travel series - 11
நாற்பதுக்கு ஐம்பது என்ற அளவிலிருந்து அந்தக் கூடத்தில் ஒரே நேரத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இளைப்பாறலாம். மருத்துவமனையின் காத்திருப்புக் கூடத்தைப்போல வரிசை வரிசையாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இருக்கைக்கு ஒருவராகக் கால்நீட்டிப் படுத்திருந்தனர். கைப்பேசிக்கு மின்னேற்றம் செய்வதற்காக மின்துளையம் (Plug) இருக்கின்றதா என்று தேடினேன். சுவரெங்கும் மின்துளையங்கள், கூரையெங்கும் மின்விசிறிகள். கூடத்தின் ஓரத்தில் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் தனித்தனிக் கழிப்பறைகள். விசானப்பட்டினத்தின் இருப்பூர்தி நிலையத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுவேன். அப்படி அயர்த்திவிட்டார்கள்.

Exploring Odhisha, travel series - 11
ஒரு மின்துளையத்தில் கைப்பேசியைப் பொருத்திவிட்டு அப்படியே கண்ணயர்ந்தேன். மூன்று மணிக்கு விழிப்பு ஏற்பட்டது. எழுந்து கழிப்பறைக்குச் சென்று கிளம்பியாயிற்று. அதிகாலையின் மென்னிருளில் அந்நிலையம் மேலும் அழகாகத் தெரிந்தது. இருப்பூர்தி நிலையத்தின் இரவுத் தனிமைக்கு நான் எப்போதும் விருப்பினன். அத்தனிமைதான் அங்கே அடர்த்தியாய்ப் படுத்திருந்தது. இரண்டாவது நடைமேடைக்கு வரவேண்டிய இருப்பூர்தி உரிய நேரத்தில் வந்து சேரும் என்று அறிவித்தார்கள். பெரும்புழுவின் பெருமூச்சோடு இருப்பூர்தி வந்து சேர்ந்தது. வண்டியில் ஏறிப் படுத்தாயிற்று. விடிவதற்குள் ஸ்ரீகாகுளம் வந்துவிட்டது.

Exploring Odhisha, travel series - 11
ஆந்திர மாநிலத்திற்கு வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கடைசி மாவட்டம் ஸ்ரீகாகுளம். இப்போது எனக்கு ஆந்திரத்தின் எல்லா மாவட்டங்களும் நன்கு பழக்கப்பட்டுவிட்டன. ஆந்திரத்தில் எல்லா மாவட்டங்களும் பெரிய பெரிய மாவட்டங்கள்தாம். தமிழகத்தின் கன்னியாகுமரி, நீலகிரியைப் போன்ற சிறுமாவட்டங்களே இல்லை எனலாம். ஸ்ரீகாகுளம் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தைப்போல மூன்றரை மடங்கு பெரிது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பரப்பளவு 5837 சதுர கிலோமீட்டர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் பரப்பளவு 1684 சதுர கிலோமீட்டர்கள்.

Exploring Odhisha, travel series - 11
ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் ஸ்ரீகாகுளமும் ஒன்று. ஆந்திர மாவட்டங்களிலேயே மிக நீளமான கடற்கரை இம்மாவட்டத்திற்குத்தான். விஜயநகரம் என்னும் மேற்கு மாவட்டப்பகுதி இதன் மேற்கெல்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அடர் காடுகளும் வங்கக்கடலுமே வடக்கு கிழக்கு தெற்கு எல்லைகள். இம்மாவட்டத்தில் ஐந்து கடற்கரைகள் இருக்கின்றன. செயற்கைப் பாழடைவுகள் ஏதுமில்லாத, இயற்கை களங்கமடையாத ஆறு கடல் மலைகளாலான அழகு மாவட்டம்.

Exploring Odhisha, travel series - 11
மாவட்டத்திற்கு ஒன்றோ இரண்டோ ஆறுகள் இருக்கலாம். எங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல், அமராவதி என்ற ஆறுகள் இருக்கின்றன. இதில் அமராவதிதான் உயிருடன் இருக்கிறது. நொய்யலைக் கோவையும் திருப்பூரும் தின்றுவிட்டன. வெள்ளக்காலங்களில் மழைநீர் ஓடுவதுதான் விதிவிலக்கு. உப்பாறு, சம்மனை ஆறு, கௌசிகாநதி என்று சில சிற்றாறுகள் இருக்கின்றனதாம். அவற்றில் நீரோடி ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள், ஒன்பது ஆறுகள் இருக்கின்றன.

Exploring Odhisha, travel series - 11
அந்த ஒன்பது ஆறுகளில் நாகவல்லி ஆறு, வம்சதாரா ஆறு ஆகிய இரண்டும் பேராறுகள். சொர்ணமுகி, வேகவதி, மகேந்திரதனயா, கோமுகி, சம்பவதி, பாகுதா, கும்பிகோடகெட்டா ஆகியன சற்றே சிறியவை. சிறியவை என்று சொல்வது அவ்வாறுகளின் நீளத்தை வைத்தேயன்றி, நீர்ப்பெருக்கை வைத்தன்று. ஒவ்வோர் ஆறும் வற்றாத நீரோட்டத்தோடு விளங்குகின்றன.

Exploring Odhisha, travel series - 11
ஸ்ரீகாகுளம்ரோடு என்ற இடத்தில் இருப்பூர்தி நிலையம் இருக்கிறது. அங்கிருந்து பத்து கிலோமீட்டர்களுக்கு மேல் சென்றால்தான் ஸ்ரீகாகுளம் நகரத்தை அடைய முடியும். இருப்பூர்தி நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விடிந்துவிட்டது. தானிழுனி ஓட்டுநரிடம் இங்கே குளிப்பதற்கேற்ற ஆற்றுப் பகுதி எதுவோ அங்கே கொண்டுபோய் விடு என்று கேட்டுக்கொண்டோம். இருப்பூர்தி நிலையத்தைவிட்டு ஆறேழு கிலோமீட்டர்கள் இட்டுச் சென்றவர் நாகவல்லி நதிக்கரையில் விடுவித்தார். ஆற்றை எட்டிப் பார்க்கையில் உள்ளூர் இளைஞர் ஒருவர் நீராடியபடியிருந்தார். அவர் எங்கே இறங்கிக் குளிர்க்கிறாரோ அங்கே மட்டும் இறங்குக என்பது தானிழுனியாரின் அறிவுரை. ஆம், முன் குளிக்கும் உள்ளூரார் கால்வைக்கும் தடம்பற்றித்தான் ஆற்றில் இறங்க வேண்டும்.

Exploring Odhisha, travel series - 11
ஆறா அது ? காவிரியைப்போன்று அகன்றிருந்த நதிமகள். நாகவல்லிக்கொடிகள் கரையெங்கும் பொலிந்திருந்தமையால் அப்பெயர் வந்திருக்குமோ ? நறும்பூக்கள் மிதந்து செல்ல நுரைப்பூக்கள் கரையுடைய புதுத்தண்ணீரால் புரண்டுகொண்டிருந்தாள். அந்நதிக்கரையில் ஆலங்குச்சியைக்கொண்டு பல் துலக்கிவிட்டு புதுப்புனலில் போய்விழுந்தேன். குளிரில்லாத வெம்மையோடு நகர்ந்த நன்னீர். இன்னும் கதிரவன் கிழக்கில் முகிற்சிறையை விட்டு வெளிவரவில்லை. நட்டாற்றில் வெதுவெதுப்பான நன்னீரில் நீராடுகின்றேன்.

Exploring Odhisha, travel series - 11
உன்வாழ்வில் இந்நாளின் நீ அறிந்திராத, நீ கேள்வியுற்றிராத நதியின் புதுத்தண்ணீரில் புனல்நீராடுவாய் என்று முன்னறிவித்திருந்தால்கூட நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால், அது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்பதே அதுதான். நாம் நீராட எங்கோ ஒரு நதி புரண்டு சென்றுகொண்டிருக்கிறது. அதையுணராமல் இருக்குமிடத்திலேயே இருக்கை தேய்த்துக்கொண்டிருந்தால் எதையும் அடைய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக