Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம்... ஒரு புத்தம் புதிய பயணக் கட்டுரைத் தொடர்! Part 1

ஆண்டுதோறும் இரண்டோ மூன்றோ இந்தியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை என் நோக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஒரு மாநிலத்தைச் சுற்றிப் பார்ப்பதாக இருக்க வேண்டும். அந்தப் பயணம் பத்து முதல் பதினைந்து நாள்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம். எந்த நெருக்கடிகள் இருந்தாலும் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் பயணத்திட்டத்தை மாற்றவே கூடாது என்பது என் உறுதி. இப்படித்தான் ஒவ்வொரு மாநிலமாகப் பார்த்துக்கொண்டே வருகிறேன்..
சொன்னால் நம்பமாட்டீர்கள், பத்திருபது ஆண்டுகளுக்கு முன்புவரை நான் தமிழ்நாட்டுக்கு வெளியே எங்கேனும் சென்று பார்ப்பேன் என்று கற்பனைகூடச் செய்ததில்லை. ஆனால், வாழ்வின் பிற்பாதி ஊர் சுற்றுவதிலும் உலகைக் கண்ணாரக் காண்பதிலும் உள்ள உவகையை உணர்த்திவிட்டது.
நாமறியாத நிலப்பகுதியில் நாம் தனியராய் நிற்கும்போது ஓர் அச்சம் வரத்தான் செய்யும். ஆனால், இன்றைக்கு எல்லாம் தொலைத்தொடர்பு மயமாகிவிட்டன. யாரும் எங்கிருந்தும் எத்தகைய உதவியையும் செய்தியையும் பெற்றுக்கொள்ளலாம். நாம் எங்கே இருக்கிறோம் என்று கூகுள் வரைபடமும் 'புவிநில்லிட அறிமுறை'யும் (GPS) தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அவற்றைக்கொண்டே நாம் போகவேண்டிய வரவேண்டிய இடங்களை அறியலாம்.
ஓரிடத்திற்குச் சென்றால் அங்கே காண வேண்டியவை என்னென்ன என்பதையும் பயண வலைத்தளங்கள் சீராகப் பட்டியலிட்டுத் தருகின்றன. ஒரு பகுதிக்குச் சென்றுவிட்டால் அங்கே காணத்தக்க அருகிலுள்ள தலங்களை அவை காட்டுகின்றன. நம் வேலை அவ்விடம் நோக்கிச் செல்வதுதான். நம் மாநிலத்திற்கு வெளியே செல்லச் செல்ல மொழி ஓர் இடையூறாக இருக்குமோ என்ற அச்சம் தோன்றுவதும் இயல்பே. என் பட்டறிவில் நம் நாட்டுக்குள் செல்வதற்கு மொழியே தேவையில்லை என்பதே உண்மை. நகர்ப்புறங்களில் ஓரளவு ஆங்கிலம் அறிந்தவர்கள் இருக்கின்றார்கள். பின்தங்கிய பகுதிகளில் நாம் சிரித்தும் சைகை காட்டியும் வேண்டியதை உணர்த்தலாம் என்னுமளவுக்கு நம் மக்களின் முகக்குறிகளும் உடற்குறிகளும் ஒன்றாக இருக்கின்றன.
இவ்விடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள அடித்தட்டு மக்கள் ஒன்றுமறியாத வெண்மனத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டார்கள். நாமும் செல்லுமிடம் சென்று, நூலகப் புத்தகத்தைச் சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுப்பதைப்போல் காணவேண்டியவற்றைக் கண்டு திரும்பிவிட வேண்டும்.
பயணம் என்பது இருக்குமிடத்தின் தளைகளிலிருந்து பெறும் தற்காலிக விடுதலை. புதிய நிலத்தின் பண்பாடு, கலை, வாழ்முறை, மொழி, மக்கள் நடத்தை, உணவு ஆகியவற்றைக் கண்டு கேட்டு உண்டு உணர்ந்து திரும்பும் அறிவார்ந்த செயல். இன்றைக்கு நமக்குள்ள பயண வாய்ப்புகள் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை. ஆயிரம் கிலோமீட்டர்கள் சென்றுவிட்டுத் திரும்புவதற்குப் பன்திங்கள்கள் தேவைப்படும். திரும்பி வருவதற்கு எந்த உறுதியும் இல்லை. வழியில் உண்பதற்கு எதுவும் கிடைக்காது. கட்டுசோற்றைக் கட்டிக்கொடுப்பார்கள். இழவில் அழுவதைப்போல் அழுது அனுப்புவார்கள். ஆனால், இன்றைக்குக் கதையே வேறு. ஒரே பயணத்தில் பூமியைச் சுற்றிவிட்டு ஊர்வந்து சேரலாம்.
இம்முறை ஒடிசா மாநிலத்திற்குச் செல்வது என்பது தீர்மானமாயிற்று. கலிங்கத்திற்கும் தமிழகத்திற்கும் தொன்மையான தொடர்புகள் இருக்கின்றன. கலிங்கர்களும் தமிழர்களும் போர்முகத்தில் நின்றிருக்கின்றார்கள். இந்தப் பயணமானது கிழக்குக் கடற்கரைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையிலுள்ள ஆற்றுக் கழிமுக நிலங்களின் வழியாகச் செல்லுவதாக அமைந்தது. செல்லும் வழியில் இடையிலுள்ள சிலவூர்களிலும் காண வாய்ப்பதைக் கண்டுவிடுவது என்றும் முடிவு.
திருப்பூரிலிருந்து சென்னை நடுவ இருப்பூர்தி நிலையத்திற்கு நீலகிரி விரைவு வண்டியில் வந்து சேர்ந்தேன். சென்னையிலிருந்து கிளம்புவதற்கு எர்ணாகுளம்-கௌகாத்தி விரைவு வண்டி வரவேண்டும். முன்பதிவில் படுக்கை வசதி கிடைக்கவில்லை, இருக்கை வசதியே கிட்டிற்று. அந்த வண்டியும் வந்து சேர்ந்தது. முன்பதிவுப் பெட்டி என்பதுதான் பெயரே தவிர, பெட்டியின் சந்து பொந்து எங்கும் வங்க, வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர். எடுத்த எடுப்பிலேயே பெரிய சோதனையாகப் போயிற்று. ஒருவரோடு ஒருவர் மூச்சுக்காற்று உண்ணும் காதலரைப்போல் நெருக்கி நிற்க, சென்னையிலிருந்து இருப்பூர்தி கிளம்பிற்று.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக