Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 2

சென்னையிலிருந்து விஜயவாடா இராஜமுந்திரி வழியாகச் செல்கின்ற இருப்பூர்தி அது. முன்பதிவுக்கான முயற்சியில் அந்நாளில் படுக்கை வசதியுள்ள பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், இருக்கை வசதியுள்ள பெட்டியில் இடமிருந்ததால் அதைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம். இதைப் போன்ற நீள்நெடும் தொடர் வண்டிகளில் இருக்கை வசதிகளைக் கொண்ட பெட்டிகளை ஏன் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
எழும்பூரிலிருந்து திருச்சி வழியாகவே கரூர், ஈரோடு, திருப்பூரை அடைந்து மங்களூர் வரை செல்கின்ற ஓர் இருப்பூர்தியும் உண்டு. அன்றாடம் இரவு பத்தே காலுக்கு அவ்வண்டி எழும்பூரில் கிளம்புகிறது.
அதிலும் இவ்வாறு இருக்கை வசதியுடைய பெட்டிகள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன. முன்பு ஒருமுறை எழும்பூர் - மங்களூர் இருப்பூர்தியில் வேறு வழியின்றி இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டேன். அமர்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று உண்மையாகவே நம்பினேன்.
இரவு பத்தே காலுக்குக் கிளம்பும் அவ்வண்டி மறுநாள் ஒன்பதரைக்குத்தான் என்னூருக்கு வந்து சேரும். விடிய விடிய உறங்காமல் உட்கார்ந்துகொண்டு கொட்ட கொட்ட விழித்தபடி வர முடியுமா ? ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் முடியவில்லை. கீழே செய்தித் தாளை விரித்து என் கால்களை இருக்கைச் சந்துக்குள் நுழைத்துப் படுத்துவிட்டேன். நான் கீழே படுத்ததால் அருகிலிருந்த பெரியவர்க்கும் அவ்விருக்கையில் சாய்ந்து படுத்துக்கொள்ள வாய்த்தது. அன்றிலிருந்து இருக்கை வாய்ப்பு மட்டுமேயுள்ள நெடும்பயணத் தொடர்வண்டியில் ஏறுவதே இல்லை என்று உறுதி பூண்டிருந்தேன்.
ஆனால், இந்தப் பயணத்தில் இவ்வாறு வாய்த்துவிட்டது.
நீங்கள் ஏன் விமானத்தில் செல்லவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். பயணத்தின் இலக்கணம் என்பது என்னவென்று அன்னார்க்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பயணம் என்பது போய்ச் சேருமிடத்தை நோக்கமாகக் கொண்டதன்று. கிளம்பும் இடத்திலிருந்து போய்ச் சேரும் இடம் வரைக்கும் கிடைக்கும் எண்ணற்ற அனுபவங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஊர்போய்ச் சேர்ந்துவிட்டால் அந்தப் பயணம் முடிந்து விட்டது என்பதை நினைவிற்கொள்க. நீங்கள் காண்கின்ற அரிய நிலக்காட்சிகளும் நீங்கள் அடைகின்ற புதிய உணர்ச்சிகளும்தாம் உங்களைச் செழுமைப்படுத்தும். கிளம்பிச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வருவதில் எதையும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலை நாடுகளுக்கு விமானம் மூலம் சென்று இறங்குவதைவிட, கப்பல் வழியாகச் செல்வதை மனமுவந்து வரவேற்பேன். அப்படியொரு பயணத்தை மேற்கொள்ளவே விரும்புவேன். நிற்க.
இருக்கை வசதிகொண்ட இருப்பூர்திப் பெட்டியில் இன்னொரு கூத்தும் நடந்துவிட்டது. பொதுப்பெட்டி ஒன்றினை வண்டியோடு இணைத்து அதன்மேல் D1 என்று சுண்ணாம்புக் கட்டியில் எழுதி விட்டார்கள். அதனால் முன்பதிவு எண்படியமைந்த இருக்கைகளில் முன்பதிவாளர்களும் மேலடுக்குப் படுக்கைப் பரணில் பொதுவகுப்பினரும் ஏறிக் குவிந்துவிட்டனர். நீங்கள் உங்கள் இருக்கைக்குத்தான் உரிமை கோரமுடியும். பரணிருக்கையில் அமர்ந்துள்ளவர்களை என்ன செய்ய முடியும் ? அவர்கள் கேரளத்திலிருந்தோ கொங்குப் பகுதியிலிருந்தோ வங்காள, வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள். சென்னையிலிருந்து மேலும் ஒரு கூட்டம் நெருக்கிக் கசக்கி ஏறிக்கொள்ள... பெட்டிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவே ததும்பிக்கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
என்னருகில் நின்ற தம்பியிடம் எங்கே செல்ல வேண்டுமென்றேன். நாகாலாந்து என்றான். தானும் தனைச் சார்ந்தோரும் இல்லையென்னாது உண்ண வேண்டும் என்கின்ற ஒரே கடன்மை உணர்ச்சிதான் ஒருவனை கண்ணுக்கெட்டாத தொலைவு நகர்த்திச் செல்கிறது. நம் ஊரை நோக்கி வருபவன் நம்மிடமுள்ள அறங்கெடா மாண்புகளை நம்பித்தான் வருகின்றான். அவர்களில் பலர்க்கும் இப்போதுதான் அகவை இருபதை எட்டியிருக்கும். அவ்வயதில் பிறந்த ஊரைவிட்டுப் பிழைப்பதற்காகப் பெயர்வது வெறும் வலியாக மட்டுமிராது. வாதையாகத் தொடர்ந்து அழுத்தும்.
என் தோள்மீதும் முதுகோடும் இருவர் மூவர் மோதி நசுக்கியபோதும் அவர்கள்மீது இரக்கம்தான் பிறந்தது. "தம்பி.... நாமெல்லாரும் சேர்ந்தே சேருமிடம் செல்வோமடா..." என்று கூறினேன்.
விளங்கினால்தானே ? எந்தப் பையனும் சிரிக்கவில்லை. இருப்பூர்தி விரைவாகச் செல்ல செல்ல நெருக்கம் தளர்ந்தது. வெளிக்காட்சிகளில் மனம் செலுத்தினேன்.
ஆந்திரத்தின் கடற்கரைப் பகுதியானது நதிக் கழிமுகங்களின் தொகுப்பான நிலம். நாட்டுக்கே அரிசி விளைவித்து சோறூட்டக்கூடிய வளமான பகுதி. தமிழ்நாட்டில் ஒன்றரைக் கிலோமீட்டர்களுக்கு ஒரு
சிற்றூரைக் காண நேரும். ஆந்திரத்தில் பத்திருபது கிலோமீட்டர்களுக்கிடையே ஓர் ஊரைக்காண்பது கூட அரிது.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சை வயல்களே. வேறு பயிர்களையாவது விளைவிக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. யாவும் நெல்லம் பயிர்களே.
"இவ்வளவு பயிரை விளைவித்தவனின் வீடு எங்கே இருக்கும்?" என்று பெட்டியின் இருபுறக் காலதர்களிலும் தேடிப் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சையன்றி ஒன்றுமேயில்லை.
பச்சை இல்லாத நிலங்களில் அடுத்த விளைச்சலுக்கு உழுது வைத்திருக்கிறார்கள்.
இப்பயணத்திடையே ஆயிரம் பாலங்களைக் கடந்திருப்பேன் என்று எண்ணுகிறேன். எந்தப் பாலத்தினடியிலும் வறண்டு கிடக்கவில்லை. தண்ணீர் தெளுதெளு என்று ஓடிக்கொண்டிருந்தது. அல்லது தண்ணீர் ஓடிய ஈரத்தோடு இருந்தது. அருகில் இருப்பது கடல்தானே ? ஓடுகின்ற தண்ணீர் மொத்தமும் கடலில்தான் கலக்கப் போகிறது. அவர்களுடைய நீர்வளத்தைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு நெஞ்சு கனத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக