Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 டிசம்பர், 2017

ஒன் + ஒன் = ஜீரோ Part 6

என்ன பாஸ்...! நாகஸாகி, ஹிரோஷிமாவில் அமெரிக்காக்காரன் அணுகுண்டு போட்ட ரேஞ்சுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு நீங்க பாட்டுக்கு கௌதம புத்தர் மாதிரி காரை ஒட்டிக்கிட்டு இருக்கீங்க...? திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை இல்லையா?"
விஷ்ணு அதிர்ச்சியோடு கேட்க விவேக் காரின் வேகத்தை சிக்னலுக்காக குறைத்துக் கொண்டே தலையசைத்தான்.
"ஆமா ரெண்டு பேரும் வெளியுலகத்துக்கு அண்ணன் தங்கை மாதிரி நடிச்சிருக்காங்க ?"
" இந்த 'மொகஞ்சாதோரா' உண்மை உங்களுக்கு எப்படி தெரிஞ்சது பாஸ்...? நானும் உங்க கூடவேதானே அந்த வீட்ல இருந்தேன் ?"
"நீ அந்த வீட்ல சீன் ஆஃப் க்ரைம் எத்தனை தடவை பார்த்தே....?"
"ரெண்டு தடவை"
"என்ன க்ளூ கிடைச்சது?"
"ஒரு பெரிய சைபர் பாஸ்... எதுவுமே என்னோட பார்வைக்குத் தட்டுப்படலை"
"உனக்கு கருடபார்வைன்னு உன்னோட தாத்தா சொன்னதாய் சொன்னியே...?"
"இன்னைக்கு சாயந்திரம் ஒரு கண்டாக்டரைப் பார்த்துடறேன் பாஸ்... திலீபனும் சுடர்கொடியும் அண்ணன் தங்கையாய் இருக்க முடியாதுன்னு உங்களோட லேசர் பார்வைக்கு மட்டும் எப்படி தட்டுப்பட்டது பாஸ்?"
"உனக்கு முன்னாடி இருக்கிற காரோட டேஷ்போர்டைத் திற..."
விஷ்ணு திறந்தான்.
"சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் பேக் தெரியுதா ?"
"தெரியுது பாஸ்..."
"அதை வெளியே எடு"
எடுத்தான்
"உள்ளே என்ன இருக்கு பாஸ்....?"
"பிரிச்சு பாரு"
விஷ்ணு அந்த பிளாஸ்டிக் பேக்கைப் பிரித்தான். உள்ளே சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை பட்டையும், மினி டூத்பேஸ்ட் சைஸில் ஒரு ஆயின் மென்ட் டியூப்பும், கூடவே சிறிய பிளாஸ்டிக் டிவைஸும் ஒரு அட்டைப் பெட்டியும் பார்வைக்குத் தட்டுப்பட்டன.
"இதெல்லாம் என்ன பாஸ்?"
"மொதல்ல அந்த மாத்திரைப் பட்டையை எடு"
விஷ்ணு எடுத்தான். மாத்திரைப் பட்டையின் மேல் I- PILL என்கிற மருந்தின் பெயர் சிவப்பு நிறத்தில் மின்னியது.
"அது என்ன மாத்திரைன்னு தெரியுதா விஷ்ணு?"
"தெரியலை பாஸ்.... 'ஐ - பில் ' ன்னு போட்டிருக்கு "
விவேக் காரை நிதானமான வேகத்தில் ஓட்டிக்கொண்டே சொன்னான். "இது ஒரு கருத்தடை மாத்திரை. போன வாரம் கூகுளில் ஒரு மெடிசன் பேரைத் தேடிகிட்டு இருந்தபோது இந்த 'ஐ - பில்' என்கிற வார்த்தை என்னோட பார்வைக்குத் தட்டுப்பட்டது. அது எது மாதிரியான மருந்துன்னு நான் படிச்சுப் பார்த்தப்ப அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. "
"அந்த அதிர்ச்சியை எனக்கும் கொஞ்சம் குடுங்க பாஸ்"
"இந்த 'ஐ - பில்' என்கிற கருத்தடை மாத்திரை சமீபத்தில்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. இந்த மாத்திரை டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் வாழும் இளம் பெண்களுக்கு ரொம்பவே பரிச்சியம். மருந்துக்கு கடைகளில் இந்த மாத்திரையை வாங்குபவர்களின் 50% சதவீதம் கல்யாணமாகாத இளம் பெண்கள்தானாம். ஒரு இளம் பெண் இந்த மாத்திரையை எடுத்துக்கிட்டு ஒரு வாரத்துல எத்தனை தடவை வேண்டுமானாலும் தப்பு பண்ணலாமாம்."
"இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியுது பாஸ். இந்த பிளாஸ்டிக் பேக் 'திலீபன் சுடர்க்கொடி' வீட்டிலிருந்து நீங்க எடுத்து இருக்கீங்க.... இல்லையா பாஸ்..?"
"அதேதான்... மாத்திரைப் பட்டையைத் தவிர ஒரு மினி டூத் பேஸ்ட் அளவுக்கு ஆயின்மெண்ட் ட்யூப் ஒண்ணு இருக்கே அதை வெளியே எடுத்து அந்த ஆயின்மெண்ட்டோட பேரைப் படி!"
விஷ்ணு எடுத்து படித்தான்.
"ஸ்பெர்மிசைடு "
"இந்த ஆயின்மெண்ட் எதுக்கு தெரியுமா !"
"மேட்டர் சூப்பராய் இருக்கு... நீங்களே எனக்கு 'க்ளாஸ்' எடுங்க பாஸ்"
"ஒரு ஆணோ ஒரு பெண்ணோ தப்பு பண்ணின பிறகு பின்னாடி பிரச்னை ஏதும் வராமல் இருக்கறதுக்காக அப்ளை பண்ணிக்க வேண்டிய ஆயின்மெண்ட்...."
"ஆஹா...! ரெண்டு பேரும் ஏகப்பட்ட முன்னேற்பாடுகளோடு 'அண்ணன் தங்கை' நாடகத்தை வெற்றிகரமாய் அரங்கேற்றியிருக்காங்க பாஸ். மூணாவதா இது என்ன பாஸ் அரை உள்ளங்கை பரப்புக்கு ஒரு பிளாஸ்டிக் டிவைஸ்?"
"ஐ.யு.டி ."
"இது எதுக்கு பாஸ்...?"
"ஒரு பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பொருத்தப்படும் சாதனம்."
"பாஸ்! நீங்க சொல்றதையெல்லாம் கேக்கும்போது ஒரு சினிமா படத்தோடு தலைப்பு தான் ஞாபகத்துக்கு வருது. திருடா.. திருடி....!"
"அந்த அட்டைப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்த்தியா?"
"பார்த்துட்டேன் பாஸ்... காண்டம்...! இது மாதிரியான அற்புதமான விஷயமெல்லாம் என்னோட பார்வையில்தான் படும். இன்னைக்கு அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. இந்த பிளாஸ்டிக் பேக்கை அந்த வீட்ல எந்த இடத்திலிருந்து எடுத்தீங்க பாஸ்... நான் ரெண்டு தடவை அந்த வீட்டை சுற்றி எஸ்.ஓ.ஸி. பார்த்தும் என்னோட பார்வைக்குத் தட்டுப்படலையே?"
விவேக்கின் உதடுகளில் ஒரு சின்ன சிரிப்பு இழையோடியது. "இந்த பிளாஸ்டிக் பேக் எந்த இடத்துல இருக்கணுமோ அந்த இடத்துல இருந்தது. அதாவது பெட் ரூம்ல ஒரு தலையணை உறைக்குள்ளே சரியா உள்ளே போகாமே கொஞ்சமாய் வெளியே எட்டிப் பார்த்துகிட்டு இருந்தது."
"இந்த கண்ணாமூச்சி விளையாட்ல நீங்க எக்ஸ்பெர்ட் பாஸ். நான் எப்பவுமே லொட லொடா. நீங்க என்னிக்குமே அட அடா...!"
"டேய் ... போதுண்டா.... மேற்கொண்டு இந்த கேஸ்ல எப்படி ட்ராவல் பண்ணலாம்ன்னு சொல்லு... டி.ஜி.பி.யோட பி.ஏ. தியோடர் போன்ல என்கிட்டே சொன்ன மாதிரி விசாரணை நுனிப்புல் மேயற மாதிரியும் இருக்கணும்.... அதே சமயத்துல வேகமாகவும் ஆழமாகவும் இருக்கணும்.... கொலையாளியை பூனை நடை போட்டு நெருங்கணும்!"
"அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு பாஸ்"
"என்னான்னு சொல்லு...."
"சுடர்கொடியோட ஃப்ரண்ட் ஜெபமாலைக்கு சுடர்கொடியோட கோர மரணம் டி.வி. நியூஸ் மூலம் தெரிஞ்சிருக்கும். வளையோசை பத்திரிக்கையின் எடிட்டர் மீனலோசனி ஜெபமாலையைப் பார்த்து இருக்காங்க. அந்த அம்மாவைப் பார்க்க ஜெபமாலை மறுபடியும் வரலாம்ன்னு நினைக்கிறேன். அப்படி வரும்போது நமக்கு தகவல் கொடுக்கச் சொல்லி....!"
விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.
ஒரு புது எண்.
ஒரு மரத்தின் அடியில் காரை ரோட்டோரமாய் நிறுத்தினான் விவேக். ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.
"ஹலோ "
மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல். பதட்டம் நிரம்பிய குரல்.
"பேசறது யாரு விவேக் ஸாரா ?"
"ஆமா..."
"ஸார்.. என்னோட பேரு ஜெபமாலை. சுடர்கொடியோட ஃப்ரண்ட். இப்பதான் டி.வியில் நியூஸ் பார்த்தேன். ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்... கொலை நடந்த ஸ்பாட்டை டி.வி. யில் காட்டும்போது உங்களையும் காட்டினாங்க... ஸார்... சுடர்க்கொடி இவ்வளவு கோரமாய் கொலை செய்யப்பட என்ன காரணம்ன்னு எனக்குத் தெரியும். உங்களைப் பார்த்து பேசணும் ஸார். க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸுக்கு வரட்டுமா ஸார்?"
விஷ்ணு கிசு கிசுப்பாய் சொன்னான்.
"பாஸ்... கும்பிடப் போன தெய்வம் இப்படி 'குடு குடு' ன்னு ஓடி வந்து நம்ம முன்னாடி நிக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நம்ம ஆபீஸுக்கு வரச் சொல்லுங்க பாஸ்."
விவேக் விஷ்ணுவை லேசாய் முறைத்துவிட்டு செல்போனில் ஜெபமாலையிடம் பேசினான்.
"ஆபீஸுக்கு வேண்டாம் ஜெபமாலை."
"வேற எங்கே வர்றது ஸார்?"
"நீ இப்ப எந்த ஏரியாவிலிருந்து பேசறே?"
"பெசன்ட் நகர்"
"அப்படீன்னா பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் இருக்கற 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு சரியா ஆறு மணிக்கெல்லாம் வந்திடு... மீட் பண்ணிப் பேசிடலாம்."
" ஸ....ஸ... ஸார்...!"
"என்ன...?"
"எனக்கு பயமாயிருக்கு ஸார்..."
"எதுக்கு பயம்....?"
"சுடர்கொடிக்கு ஆனா மாதிரி எனக்கும் ஏதாவது ஆயிருமோன்னு....!"
"பயப்படாதே !" விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெபமாலையின் செல்போன் இணைப்பு சட்டென்று அறுந்து போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக