Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜனவரி, 2018

ஒன் + ஒன் = ஜீரோ 10

ரூபலா குரலை உயர்த்திக் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷ்ணுவின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. 
எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். டாக்ஸி டிரைவர் ராமஜெயம். விஷ்ணு பேசினான். 
"என்ன ராமஜெயம்?" 
"ஸார் டாக்ஸி வந்தாச்சு...."
"வீட்டுக்கு பின்னாடிதான்?" "ஆமா...ஸார்... விநாயகர் கோயிலுக்குப் பக்கத்துல வண்டியை நிறுத்தியிருக்கேன்....." "வெயிட் பண்ணு... இப்ப வந்துடறோம்" செல்போனை அணைத்த விஷ்ணு விவேக்கை ஏறிட்டான். "பாஸ்! டாக்ஸி ரெடி...!" "கிளம்பு" விவேக் எழுந்தான். "என்னங்க!" "சொல்லு ரூபி" "எனக்கு பயமாயிருக்கு" "எதுக்கு பயம்?" "இந்த சுடர்கொடி கேஸ்ல இவ்வளவு இன்வால்வ்மெண்ட் வேணுமா...? பேசாம இதை சி.பி.சி.ஐ.டி. போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடுங்களேன்..." "அது சரிப்பட்டு வராது. இந்த கேஸ்ல ஒரு டீப் இன்வஸ்டிகேஷன் வேணும். இல்லேன்னா சுடர்கொடி, திலீபன் கொலைகளோட சம்மந்தப்பட்ட கொலையாளி கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குப் போயிடுவான். கொலைகளுக்கான காரணங்களும் காணாமே போயிடும்." "அந்த ஜெபமாலை உங்ககிட்டே ஏதோ பேச வந்தா... பெசன்ட் நகர்ல இருக்கற 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரெண்ட்டுக்கு நீங்கதான் அவளை வரச் சொன்னீங்க. ஆனா ரெஸ்டாரெண்ட்டுக்குப் போகாமே 'அவ வரமாட்டா' ன்னு வீட்லயே உட்கார்ந்துட்டீங்க... ஒரு வேலை அவ ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்திருந்தா....!" "அப்படி அவ ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்திருந்தா நான் ஏன் வரலைன்னு கேட்டு போன் பண்ணியிருப்பாளே....? என்னோட போன் நெம்பரும் விஷ்ணுவோட போன் நெம்பரும் ஜெபமாலைகிட்ட இருக்கே... ஏன் போன் பண்ணலை?" "அவளோட உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோன்னு நினைக்கறீங்களா?" "இதோ பார் ரூபி... இந்த கேஸ்ல நான் கால் பதிச்சு முழுசா இன்னும் ஒரு நாள் கூட ஆகலை. உன்னோட மனசுக்குள்ளே என்னென்ன சந்தேகங்கள் இருக்கோ அதை விட ரெண்டு மடங்கு சந்தேகங்கள் எனக்குள்ளே இருக்கு...." "எனக்கு மூணு மடங்கு பாஸ்," என்றான் விஷ்ணு. "சரி.... ஜெபமாலை நல்லவளா.... தப்பானவளா?" "நான் இப்ப ஒருத்தரை பார்க்கப் போறேன். நீ கேட்ட கேள்விக்கு அவர்கிட்டதான் பதில் இருக்கு. ராத்திரி நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். நீ எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். சாப்பிட்டு படுத்துரு. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா நானே உனக்கு பண்றேன். நீ எனக்கு போன் பண்ணாதே!" "என்னங்க நீங்க என்னை பயப்படுத்தற மாதிரியே பேசறீங்க..?" "நீ பயப்படக் கூடாதுங்கறதுக்குக்காகத்தான் இதையெல்லாம் சொல்லிட்டிருக்கேன்." சொன்ன விவேக் விஷ்ணுவிடம் திரும்பினான். "என்ன புறப்படலாமா?" "நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன் பாஸ்" 

விநாயகர் கோயில் அருகே அரையிருட்டில் காத்திருந்தது, பச்சையும் மஞ்சளும் கலந்த பெயிண்ட் பூச்சில் குளித்திருந்த அந்த டாக்ஸி. விவேக்கும் விஷ்ணுவும் காரை நெருங்க ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த ராமஜெயம் இறங்கி கைகளைக் குவித்தான். நடுத்தர வயது. வெள்ளை யூனிஃபார்ம். "வணக்கம் ஸார்" விஷ்ணு அவனுடைய தோளில் கை வைத்தான். "என்ன ராமஜெயம்... வண்டி புதுசு போலிருக்கு?" "ஆமா... ஸார். ஒரு பேங்க் மானேஜர் லோன் கொடுத்தார். வாங்கிட்டேன். பழைய வண்டியில் ஏகப்பட்ட பிரச்னை ஸார்" "பொண்டாட்டி பழசானாலும் சரி, கார் பழசானாலும் சரி ஆண்களுக்கு பிரச்னைதான்னு ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கார்." "அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் ஸார்" "எப்படி சொல்லறே?" "ஷேக்ஸ்பியர் காலத்துல கார் ஏது ஸார்?" "ராமஜெயம்! நீ இன்னும் அதே புத்திசாலித்தனத்தோடுதான் இருக்கே. சும்மா உன்னை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்...." ராமஜெயம் காரின் இக்னீசியனை உசுப்பிக்கொண்டே கேட்டார், "எங்க ஸார் போகணும்?" விஷ்ணு விவேக்கின் முகத்தைப் பார்க்க விவேக் ராமஜெயத்தைக் கேட்டான். "பழைய வண்ணாரப் பேட்டையில் பொன்னம்மா இட்லி கடை தெரியுமா?" "தெரியும் ஸார்" "அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே அங்கே இருக்கணும்" "போயிடலாம் ஸார்" காரை நகர்த்தினார் ராமஜெயம். கார் அந்த சந்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பிரதான சாலைக்கு வந்ததும் வேகம் பிடித்தது. விஷ்ணு உட்காரமுடியாமல் நெளிந்து கொண்டே கிசு கிசுப்பான குரலில் கேட்டான். "பாஸ்! இப்ப எதுக்கு பொன்னம்மா இட்லி கடை?" "கெட்டிச் சட்னியோடு சூடாய் நாலு இட்லி சாப்பிடணும்ன்னு ரொம்ப நாளாய் ஒரு வேண்டுதல்!" விவேக் சொல்லி விட்டு டாக்ஸியின் பின்சீட்டில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான். சென்னையின் அந்த முன்னிரவு போக்கு வரத்தில் டாக்ஸி வீசி எறியப்பட்ட ஈட்டியாய் பழைய வண்ணாரப் பேட்டையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக