Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜனவரி, 2018

கலிங்கம் காண்போம் - பகுதி 16: ஓர் இனிய பயணத்தொடர்


 
இரவுக் கடலைப் பார்த்துவிட்டு விடுதியருகே வந்தோம். பூட்டுவதற்கு அணியமாக இருந்த ஓர் உணவகத்தில் சிற்றுணவு எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். படுக்கையில் விழுந்ததுதான் தெரியும். காலையில்தான் விழிப்பு தோன்றியது. கடற்கரையருகே இருக்கையில் எழுஞாயிற்றைக் காணாமல் உறங்குவதா ? உந்தியெழுந்து முகங்கழுவிக்கொண்டு கடற்கரையை நோக்கி நடக்கையில் இருள் விலகத் தொடங்கியிருந்தது.
கடற்கரையில் எழுஞாயிற்றையும் விழுஞாயிற்றையும் கண்குளிரக் காணவேண்டும் என்றால் அன்றைய வானம் மேகமூட்டமற்று இருக்க வேண்டும். தொடுவானத்து மேகங்கள் எழுகதிரை மறைத்துவிட்டால் அன்று கடலின் சாம்பல் நிறத்தைத்தான் காணவேண்டியிருக்கும். அரபிக் கடலில் முழப்பிளங்காடு கடற்கரையில் கண்ட விழுஞாயிற்றை என்னால் மறக்க முடியாது. மணல் புதையாத கடற்கரையான அதில் மகிழுந்துகளை அலையுரச ஓட்டிச் செல்லலாம். அத்தகைய அந்தி மயக்கப் பொழுதில் மேற்கில் இறங்கிய சுடரோனை அலைகடலில் நீராடியபடி கண்ட அந்நாளின் நினைவு வந்தது.
Exploring Odhisha, travel series - 16
இரவில் பார்த்த கடற்கரைக்கு இருந்த ஒரு மர்ம அழகு இப்போது நீங்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணற்பரப்பாக இருக்க, ஐந்நூற்றடிகள் நடந்தால் கடலைத் தீண்டலாம். கடற்கரையில் நேற்றைய மணல் அலைப்பின் மிச்சங்களும் சிறு குப்பைகளும் அங்கங்கே காணப்பட்டன. நமக்கும் முன்னரே ஆங்காங்கே சிறு கூட்டம் வந்து சேர்ந்திருந்தது. பூரிக் கடற்கரையில் ஆண்டுதோறும் கடற்கரைத் திருவிழா நடத்தப்படுகிறதாம். அப்போது எழுப்பப்படும் மணற்சிற்பங்களைத்தாம் நாம் பல்வேறு பதிவுகளில் பார்க்கின்றோம். இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகமும் கிழக்கு மண்டல சுற்றுலா மேம்பாட்டுத் துறையும் ஒடிய மாநிலத்தரசுடன் இணைந்து அந்நிகழ்வை நடத்துகின்றன. கைவினைச் செயல்களும் கலைகளும் பூரிக் கடற்கரையில் கொண்டாடப்படுகின்றன. பூரி நகரம்தான் ஒடிசி நடனக் கலைக்கும் புகழ்பெற்றது.
Exploring Odhisha, travel series - 16
கரைமணல் புதையுமாறு நடந்து அலைகடல் அருகில் வந்து சேர்ந்தேன். தொடுவானில் எழுகதிர் எழுந்திருந்தான். கடல் மட்டத்தில் தெரியும் அடிவானத்தில் முகிற்கூட்டங்கள் சேர்ந்திருந்தமையால் கதிரவனை நீரிலிருந்து எழும் அரைச்சுடராகப் பார்க்க முடியவில்லை. கடலிலிருந்து எழுந்து செம்முழு வட்டமாய் ஒளி வீசிய நிலையில்தான் முகில் மறைவிலிருந்து வெளிப்பட்ட கதிரவனைப் பார்க்க முடிந்தது. முழு நிலவின் அளவு என்னவோ அவ்வளவே எழுகதிரின் அளவு. ஆனால், நிலவுக்குள்ள குளிர்ச்சி கதிருக்கில்லை. கதிருக்குள்ள உயிர்ப்பு நிலவுக்குமில்லை.
Exploring Odhisha, travel series - 16
எழுஞாயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரவுக் கருமை துலக்கமாக விலகி பகலொளி பரவிவிட்டது. மிதமான வேகத்தில் அலைகள் புரண்டன. கடற்கரையில் மணற்றுளை நண்டுகள் நிறையவே காணப்பட்டன. எந்தச் சீர்கேட்டுக்கும் ஆளாகாத உயிர்ப்பான கடற்கரைகளில் பூரிக் கடற்கரையும் ஒன்று என்பது புரிந்தது. ஏனென்றால் பூரிக் கடற்கரையின் இருபுறமும் மகாநதியும் அவற்றின் கிளையாறுகளும் தொடர்ந்து நன்னீராய்க் கலந்துகொண்டிருக்கின்றன. மகாநதியிலிருந்து பிரிந்து வரும் பார்கவி ஆறு பூரிக்கு மேற்கே சென்று சிலிக்கா ஏரியில் கலக்கிறது. கடலின் உவர்நீரோடு கலக்கும் நல்ல தண்ணீர்தான் உயிர்கள் தோன்றுவதற்கும் வாழ்வதற்கும் உதவுகின்ற மிகச்சிறந்த இயற்கைச் சூழல் என்கிறார்கள் புவியியலாளர்கள். அதனால் கடலில் ஆற்று நீர் கலப்பதே சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதில் அவர்கள் உறுதி காட்டுகிறார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணியர் கூட்டம் ஆங்காங்கே திட்டு திட்டாய் நின்றிருந்தனர். குழந்தைகள் கரைமணலில் ஓடியாடி விளையடினர். சுடர்காண் படலம் முடிந்து ஒவ்வொருவரும் அளவளாவலில் ஈடுபட்டனர்.
Exploring Odhisha, travel series - 16
கடற்கரையை ஒட்டிய பகுதியில் சில கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை மாலை நேரத்தில் ஏதேனும் உண்பண்டங்களை விற்கும் இடமாக இருத்தல் வேண்டும். அக்கடைகளை ஒட்டி மரக்கட்டை இருக்கைகளும் இருந்தன. ஒரு மரக்கட்டை இருக்கையில் நான் அமர்ந்தபோது எனக்குப் பின்னே சில செம்மி நாய்க்குட்டிகள் உலவிக்கொண்டிருந்தன. காலடியில் வந்து அன்போடு நோய்ந்தன. அண்ணாந்து நோக்கின. கடற்காற்றின் விசுவிசுப்பான குளிரில் அவை தடுமாறின. அவற்றில் ஒரு நாய்க்குட்டியை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதன் குளிர்நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது. வெகுநேரம் அணைத்தபடி வைத்திருந்தில் அதற்கு வெப்பூட்டு நிகழ்ந்து நடுக்கம் தீர்ந்தது. கீழே இறக்கிவிட்டதும் என்னையே சுற்றி வந்தது. அதன் உடன்பிறப்புக் குட்டிகளும் வந்து சேர அதற்கு விளையாட்டு வந்துவிட்டது. மணலில் படுத்தும் புரண்டும் விளையாடத் தொடங்கின. நான் அமர்ந்திருந்த கட்டைக்குப் பின்னேதான் அக்குட்டிகளின் தாயும் படுத்திருந்தது. அதன் தூக்கம் இன்னும் கலையவில்லை. எனக்கு ஜகந்நாதரைக் காணும் நாள் இன்று.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக