விவேக்கை வியப்பாய்ப்
பார்த்தான் விஷ்ணு. குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.
"பாஸ்...! பழைய
வண்ணாரப்பேட்டை பொன்னம்மா இட்லிக் கடையில் நாலு இட்லியை கெட்டிச் சட்னியோடு சூடாய்
சாப்பிடறதுக்கும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட
சுடர்கொடியோட கொலைக்கும் என்ன சம்பந்தம்?"
விஷ்ணு கேட்க விவேக்
புன்னகை செய்தான்.
"இந்த மோனலிஸா
புன்னகைக்கு என்ன அர்த்தம் பாஸ்?"
"அர்த்தம் இருக்கு.
நீயும் நானும் இட்லி கடைக்குப் போனா தெரியும்."
"என்னை தெளிவாய்
குழப்பறீங்க பாஸ்...."
"விஷ்ணு ! நீ
எப்பவாவது அந்தக் கடைக்குப் போயிருக்கியா...?"
"அந்த ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலுக்கெல்லாம் போய் சாப்பிடற வசதி எனக்கு இல்லை பாஸ்...," விஷ்ணு
கேலியாய் சொல்லி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு டாக்ஸிக்கு வெளியே வேடிக்கைப்
பார்த்தான்.
சென்னை நகரம் சோடியம்
வேபர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் பூசி குளித்துக் கொண்டிருக்க,
பிளாட்பாரத்தில் சகலவிதமான வியாபாரங்களும் இயங்கின. ஒரு டாஸ்மாக் கடையில் ரஜினி
படத்தின் முதல் 'ஷோ' வுக்கு இணையான கூட்டம் தெரிந்தது.
"விஷ்ணு!"
விவேக் கூப்பிட்டான்.
"பாஸ்"
"நீ இப்போ உடனடியாய்
ஒரு வேலை செய்யணும்"
"சொல்லுங்க பாஸ்....
நான் என்ன இப்போ ஒபாமாவோடு முக்கியமான பேச்சு வார்த்தையில் இருக்கேனா என்ன...?
சும்மா ரோட்டை வேடிக்கைப் பார்த்துட்டு வர்றேன். நான் இப்ப என்ன பண்ணனும்?"
"விவேக் தன் சட்டைப்
பையிலிருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தான். "விஷ்ணு! இதுல ஒரு
நெம்பர் எழுதப்பட்டு இருக்கு....."
"இந்த நெம்பருக்கு
போன் பண்ணி மறுமுனையில் இருக்கற நபர்கிட்ட நான் என்ன பேசணும்?"
"ஒண்ணும்
பேசவேண்டாம்?"
"என்ன பாஸ்
சொல்றீங்க.....?"
"நீ 'மிஸ்டு கால்'
கொடுத்தா போதும்...."
விஷ்ணு விவேக்கை ஒரு
உஷ்ணப் பெருமூச்சோடு பார்த்தான். விவேக் அவனை ஒரு புன்னகையில் நனைத்தான்.
"என்ன என்மேல
உனக்குக் கோபமா?"
"சேச்சே! உலக மகா
சந்தோஷம் பாஸ்... என்னோட போனிலிருந்து முகம் தெரியாத ஒரு நபரோட செல்போன்
நெம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கறது சாதாரண வேலையா என்ன...? என்ன ஒரு மகத்தான
பணி?"
விஷ்ணு சொல்லிக்கொண்டே
தன் செல்போனை எடுத்து அந்தத் துண்டுப் பேப்பரில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு
கொண்டான்.
மறுமுனையில் ரிங்
போயிற்று.
விஷ்ணு செல்போனை தன்
காதோடு ஓட்ட வைத்துக் கொண்டு காத்திருந்தான். விவேக் அவனுடைய தோளைத் தட்டினான்.
"உன்னோட போன் காலை
யாரும் அட்டெண்ட் பண்ண மாட்டாங்க.... கட் பண்ணு...."
செல்போனை கோபமாய் அணைத்த
விஷ்ணு பவ்யத்தோடு கேட்டான்.
"இனிமேல் என்னோட
வேலையை நான் பார்க்கலாமா பாஸ்?"
"உனக்கு என்னடா
வேலை?"
"டாக்ஸி ஜன்னல்
வழியே வீதியை வேடிக்கைப் பார்க்க வேண்டாமா...? நீங்க சொல்ற அந்தக் கடைக்குப் போய்
மகத்தான அந்த டின்னரை ரசிச்சு சாப்பிடற வரைக்கும் வேற வேலை எனக்கு என்ன இருக்கு
பாஸ்....?"
"ஒரு அரைமணி நேரம்
பொறு விஷ்ணு. அதுக்கப்புறம் உனக்கு எல்லாமே புரியும்...!"
"அடப் போங்க
பாஸ்" என்று சொன்னவன் ட்ராஃபிக் சிக்னல் அருகே காரில் உட்கார்ந்திருந்த ஒரு
பெண்ணிடம் மல்லிகை சரத்தை முழம் போட்டு விற்றுக் கொண்டிருந்த அந்தப் பூக்கார
பெண்ணை 'அட....அசப்புல பார்த்தா திரிஷா மாதிரி இருக்காளே?" என்று ரசனையுடன்
பார்க்க ஆரம்பித்தான்.
.......................................................
சரியாய் அரைமணி நேரம்.
பழைய
வண்ணாரப்பேட்டைக்குள் டாக்ஸி நுழைந்தது. குழாயடியில் சண்டை போட்டுக் கொண்டிருந்த
நான்கைந்து பெண்கள் சென்னைத் தமிழை மணக்க மணக்க பேசி வாழ
வைத்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்ஸி ஒரு குறுக்கு
சந்தை கடந்தபோது மூத்திர நாற்றம் இரண்டு வினாடி மூச்சை நிறுத்தியது. வயதான தெரு
விளக்குகள் அழுக்கான வெளிச்சத்தை தெளித்து வைத்து இருக்க டாக்ஸியின் வேகத்தைக்
குறைத்தார் டிரைவர். ஓர் ஓரமாய் ஒதுக்கி நிறுத்தினார். கைகாட்டிக்கொண்டே சொன்னார்.
"அதான் ஸார்...
நீங்க சொன்ன இட்லிக் கடை. நான் டாக்ஸியை இப்படி ஓரமாய் போட்டுக்கறேன். நீங்க போய்
சாப்பிட்டு வாங்க ஸார்...!"
விவேக் சொன்னான்.
"வர கொஞ்ச
நேரமாயிடும்..... பரவாயில்லையா?"
"நீங்க போயிட்டு
நிதானமாய் சாப்பிட்டு வாங்க ஸார். இந்நேரத்துக்குப் போனாதான் அந்தக் கடையில்
எல்லாமே சூடாய் கிடைக்கும். புரோட்டாவுக்கு கோழி ஈரல் குழம்பு சூப்பராய்
இருக்கும். அதை மிஸ் பண்ணிடாதீங்க ஸார். இன்னும் ஒன் அவர்ல எல்லாமே
காலியாயிடும்...!"
விஷ்ணு டிரைவரின் தோள்
மீது கை வைத்தான்.
"என்ன ராமஜெயம்....
பொன்னம்மா இட்லி கடைக்கு நீங்கதான் அம்பாசிடர் போலிருக்கு?"
"அம்பாசிடரா....அப்படீன்னா?"
" கல்யாண்
ஜுவல்லரிக்கு பிரபு மாதிரி..." விஷ்ணு டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே
டாக்ஸியிலின்றும் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
" பாஸ்"
" விஷ்ணு....
சீக்கிரம் வா....!"
விஷ்ணு ஓட்டமும்
நடையுமாய் போய் விவேக்கோடு இணைந்துக் கொண்டான். சற்று தூரத்தில் ஒரு ஓட்டு வீடு
இட்லி கடையாய் மாறி டியூப்லைட் வெளிச்சத்தில் ஒரு சிறிய கும்பலோடு தெரிந்தது.
"இப்பவாவது
சொல்லுங்க பாஸ்.... நாம எதுக்காக இங்கே வந்திருக்கோம்......?"
"நாலு
இட்லியும்....," விவேக் சொல்ல விஷ்ணு கையமர்த்தினான்.
"இந்த அலிபாபாவும்
நாற்பது திருடர்களும் கதையெல்லாம் என்கிட்டே வேண்டாம் பாஸ்...! கேட்டு கேட்டு
ரெண்டு காதும் அவுட் ஆஃப் ஆர்டர்..."
விஷ்ணு
சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் ரிங்க்டோனை வெளியிட்டது. விஷ்ணு
செல்போனை வெளியே எடுத்து டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்த எண்ணை ஆட்காட்டி விரலால்
தேய்த்துவிட்டு காதுக்கு கொடுப்பதற்கு முன்பாக ரிங்க்டோன் வாயைச் சாத்திக்
கொண்டது.
"ஹலோ... ஹலோ"
என்று இரண்டு தடவை குரல் கொடுத்தவன் விவேக்கைப் பார்த்தான்.
"யார்ன்னு தெரியலை
பாஸ்"
"அது ஒரு மிஸ்டு
கால். நீ டாக்ஸியில் வரும்போது நான் கொடுத்த ஒரு நெம்பருக்கு மிஸ்டு கால்
கொடுத்தியே....?"
"ஆமா...."
"அந்த நபர் உனக்கு
பதில் கொடுத்திருக்கார்.... மரியாதைக்கு மரியாதை....!"
" பாஸ்....
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா....? உலகத்திலேயே மிஸ்டு கால்
மூலமாய் தெளிவாய் பேசிக்கிட்டது நானும் அந்த நபருமாய்த்தான் இருக்கணும்....!"
ஒரு பெருமூச்சோடு சொல்லி
முடித்த விஷ்ணு அப்போதுதான் கவனித்தான். விவேக் நிதானமாய் அந்தக் கடையைத் தாண்டி
நடந்து கொண்டிருந்தான்.
"பாஸ்.... பொன்னம்மா
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இந்த பக்கம் இருக்கு...."
"அது எனக்குத்
தெரியாதா என்ன?"
"அப்படீன்னா நாம
இப்போ எங்கே போயிட்டிருக்கோம் பாஸ்...."
"மினி பாரடைஸ்"
"புரியலை பாஸ்"
"அது எங்கே
இருக்கு?"
"இந்தப் பக்கமாய்
வா...!" சொன்ன விவேக் இட்லிக் கடையை ஒட்டியிருந்த ஒரு சந்துக்குள் நுழைந்து
குறுக்கிட்ட சின்னச் சின்ன சாக்கடைகளைத் தாண்டிக் கொண்டே நடந்தான்.
சாக்கடை எட்டு
திசைகளிலும் மூக்கமாய் நாறியது. விஷ்ணு தன்னுடைய கர்சீப்பை எடுத்து மூக்கைப்
பொத்திக் கொண்டே கேட்டான்.
"பாஸ்! உங்களுக்கு
'மூக்கு' ங்கற ஒரு உறுப்பு இருக்கா இல்லையா....? சாக்கடை 360 டிகிரி கோணத்தில்
இப்படி நாறுது. ஏதோ பூ மார்க்கெட்டுக்குள்ளே ' பொக்கே' வாங்க போற மாதிரி
நடக்கறீங்க?"
"பேசாமே வா
விஷ்ணு... கடமையைச் செய்யும்போது இதையெல்லாம் பார்க்கக் கூடாது....!"
"இப்ப கடமையைச்
செய்யறது நீங்க மட்டும்தான் பாஸ்! மினி பாரடைஸ் ன்னா 'குட்டிச் சொர்க்கம்'ன்னு
அர்த்தம். அந்த குட்டிச் சொர்க்கத்துக்கு போற வழியே இப்படி இருந்தா அந்த குட்டிச்
சொர்க்கம் எப்படியிருக்குன்னு தெரியலையே ?" விஷ்ணு புலம்பிக் கொண்டிருந்த
வினாடி - ஒரு சாக்கடையைத் தாண்டிய விவேக் சட்டென்று நின்றான். ஐந்து வினாடிகள்
அப்படியே நின்றான். திரும்பிப் பார்க்காமல் கூப்பிட்டான்.
"விஷ்ணு!"
"என்ன
பாஸ்....?"
"பின்னாடி யாரோ
ஃபாலோ பண்றாங்கன்னு நினைக்கிறேன்.... நீ அப்படியே கீழே உட்கார்ந்து 'ஷூ லேஸ்'
கட்டற மாதிரி நிதானமாய் திரும்பிப் பாரு.....!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக