சிம்மத் துவாரத்திற்கு அருகிலேயே உள்ள மூலைக் கடை ஒன்றில் செல்பேசிகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் நம்முடைய பயணப்பையையும் கொடுத்துவிடலாம். தனியாரால் நடத்தப்படும் அத்தகைய கடைகள் அங்கங்கே இருக்கின்றன. ஒரு கைப்பேசிக்கு ஐந்து உரூபாய் என்று கைப்பேசிகளையும் ஒப்படைத்துச் செல்லலாம். ஒவ்வொரு கைப்பேசியையும் வாங்கி அதில் உடைவுகள், கீறல்கள் உள்ளனவா என்று பார்க்கிறார்கள். பிறகு எல்லாவற்றையும் ஒரே கட்டாகக் கட்டி அடுக்குத் தட்டுகளில் வைக்கிறார்கள். ஐந்நூற்றுக்கு வாங்கிய சீனக் கைப்பேசியும் ஐம்பதாயிரத்துக்கு வாங்கிய ஐப்பேசியும் அவர்களுக்கு ஒன்றே. அடுத்தடுத்த தட்டுகளில் கட்டப்பட்டுக் கிடக்கும். ஆண்டவன் முன்னம் அனைவரும் சமம்.
அந்தக் கட்டின்மீது ஓர் எண்ணிட்ட அட்டையைச் செருகி, அதன் இன்னோர் அட்டையை நமக்குத் தந்துவிடுகிறார்கள். நம் கைப்பேசிக்கு அதுதான் அடையாளம். இந்த வேலையை எவ்வளவு நெரிசல் ஏற்பட்டாலும் துல்லியமாகச் செய்கிறார்கள். பிசகுக்கு வழியே இல்லை. இதைச் செய்கின்றவர் ஒடியலான உடலினராய்ச் சற்றே நிறம் மங்கிய சட்டையை அணிந்திருக்கிறார். அக்கடையின் அடிப்படைத் தொழிலாளியாக இருக்க வேண்டும். ஆனால், அவருடைய பணிக்கூர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரிடம் கைப்பேசிகளை ஒப்படைத்துவிட்டு சிம்ம வாயிலில் நுழைந்தோம்.
விழாக் காலங்களில் நேரடியாகச் சிம்ம வாயிலின் படிக்கட்டுகளை எட்டிவிட முடியாது. உள் நுழைவுக்கான அடியார்களின் வரிசை நான் முன்பு படத்தில் காண்பித்திருந்த பூரிக் காவல் நிலையக் கட்டடம் வரைக்கு நீண்டிருக்குமாம். அங்கிருந்து வரிசையாய் ஊர்ந்து வந்து அணுவகுப்புத் தட்டிகளை அடைய வேண்டும். அதில் மடிந்து மடிந்து வந்துதான் சிம்ம வாயிலை அடையும்படி ஆகும். ஆனால், நாம் சென்ற நாள் திருக்குறிப்புகள் எவையுமற்ற இடைப்பட்ட நாள் என்பதால் சிம்ம வாயிலிலேயே நுழைய முடிந்தது. சிம்ம வாயிலின் அருகே வைக்கப்பட்டிருக்கின்ற காவல் சோதனைப் பெட்டி வழியில் நுழைந்தால் கீகீகீ என்று ஏற்கிறது. அடுத்துள்ள காவலர் நம் உடலை மேலிருந்து கீழாகத் தடவிப் பார்க்கிறார். மறுப்புக்குரிய பொருள்கள் எவையும் நம்மிடமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு உள்ளனுப்புகிறார்.
சிம்மப் படிக்கட்டுகளைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட்டோம். உள்ளே நுழைந்ததும் நாம் பார்ப்பது நம் நாட்டின் பழந்தொன்மையான மிகப்பெரிய சமையற்கூடத்தை. பெரிதும் சிறிதுமான மண்சட்டிகளில் விறகுகளைக்கொண்டு தீமூட்டி பேரடுப்புகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சமைத்துக்கொண்டிருக்கின்றனர். நாற்பெரும் இறைத்தலங்களில் பூரி ஜகந்நாதரின் இடம் திருவூண் (பிரசாதம்) தலம் என்று பெயரெடுத்திருக்கிறது. பூரி ஜகந்நாதருக்கு ஐம்பத்தாறு வகையான திருவுணவுகள் படைக்கப்படுகின்றன. அவற்றிற்கான சமையற் களத்தைத்தான் கண்டேன்.
இளங்காலையின் வெய்யிலில் ஏறத்தாழ பாதி சமையல் முடிந்திருந்தது. சமைத்து முடித்திருந்த அடியார்கள் சூரிய வெய்யிலில் உடல் காய்ந்துகொண்டிருந்தனர். மேலும் சிலர் அடுப்பில் வெந்து வருவதைக் கிளறிக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான அடுப்புகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறிதும் பெரிதுமான கலங்களை வைத்துச் சமைத்துக்கொண்டிருந்த அந்தக் காட்சியைக் கண்டதும் கண்கள் நிறைந்துவிட்டன. பெரும் பெரும் மண்சட்டிகளில் அரிசியும் குழம்பும் கலந்த சாதங்கள் ததும்பும் நிலையில் சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இறைவன் திருமுன் படைக்கப்பட்டவுடன் அவ்வுணவுகள் அடியார்கள் அனைவர்க்கும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற்றுண்ண எல்லாரும் விரும்புகிறார்கள். இம்மனித குலத்தைத் தொடர்ந்து ஆட்டுவிக்கும் பசிப்பிணியைப் போக்கும் அருவினையின் தொடர்நிகழ்வு அது. பூரியிலும் புவனேசுவரத்திலும் நான் கண்ட அனைத்துக் கோவில்களிலும் தொடர்ந்து சமைத்துக்கொண்டிருந்தார்கள். புவனேசுவரத்தில் ஒரு கோவிலின் நான் கண்ட சமையற்காட்சி வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே இருந்தது. அதைப் பற்றியும் பிறகு கூறுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக