ஸ்ரீகாகுளத்திலிருந்து பூரி செல்வதற்கு நாம் ஏற வேண்டிய இருப்பூர்தி குஜராத்திலிருந்து வரவேண்டும். நாட்டின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கின்ற இருப்பூர்தி அது. எப்படியும் மணிக்கணக்கில் காலந்தாழ்ந்து வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றுதான் நினைத்தேன். இருப்பூர்தியின் வருகை நிலவரத்தைப் பார்த்தால் அந்த 'நீலநிறத்து நீளக்குட்டி' மணித்துளி பிசகாமல் துல்லியமாக வந்துகொண்டிருந்தான். ஸ்ரீகாகுளத்திலிருப்பது சிறிய இருப்பூர்தி நிலையம் என்பதால் 'பயபுள்ள' ஒரேயொரு மணித்துளிதான் நிற்பான். அதற்குள் அடித்துப் பிடித்து ஏறிவிட வேண்டும்.
நிலையத்திற்குள் சென்றதும் அவ்வண்டிக்கான நடைமேடை அறிவிப்பும் வந்தது. நடைமேடையில் சென்று நிற்கவும் குஜராத்தான் தலைதெறிக்க வந்து நின்றான். அவனுடைய முகத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. 'நான் காலந்தாழ்த்தி வருவேன் என்று நினைத்தது நீதானே...?' என்பதைப்போல் இருந்தது நீளக்குட்டியின் ஒய்யார நுழைவு. 'விடுறா...விடுறா..' என்பதைப்போல் இருப்பூர்திக்குள் நுழைந்து அமைதிப்படுத்தினேன்.
வண்டிக்குள் கூட்டமே இல்லை. முன்பதிவுப் பெட்டிகளில் பாதிக்குப் பாதிதான் பயணிகள் இருந்தனர். ஏறிப் படுப்பதும் கதவோரத்தில் நின்றபடி காற்று வாங்குவதுமாய்க் கழிந்த அந்த மாலைப்பொழுதை மறக்க முடியாது. இருப்பூர்தித் தடத்தின் இருமருங்கும் வயல்கள் சிறுகாடுகள் கடற்கரைகள் என்று காட்சியின்பத்திற்குக் குறைவில்லை. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கடைசி ஊரான இச்சபுரம் என்ற நிலையத்தில் ஆந்திரம் முடிவடைகிறது. அடுத்து ஒடியா மாநிலத்திற்குள் நுழைகிறோம். ஒடியாவுக்குள் நுழைந்ததும் இருப்பூர்தித் தடத்தின் ஓரத்திலேயே நாம் 'சிலிக்கா ஏரியை' எதிர்கொள்கிறோம்.
உலகின் மிகப் பெரிய உவர்நீர் ஏரிகளில் இரண்டாமிடத்தைச் சிலிக்கா ஏரி பெற்றிருக்கிறது. அறுபத்தைந்து கிலோமீட்டர் நீளம்கொண்ட அவ்வேரியானது கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதிக்குள் தனிக்கடல்போல் பரவியிருக்கின்ற அவ்வேரி கடலோடு சிறிய வாய்ப்பகுதிபோன்ற நீரிணைப்பினால் இணைந்திருக்கிறது. கடலுக்கும் ஏரிக்குமிடையே இணைப்பு உண்டே தவிர, இவ்வேரியானது முழுக்க முழுக்க நிலத்தால் சூழப்பட்ட தன்னேரில்லாத உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. எண்ணற்ற பறவைகளுக்கும் நீர்நிலம்சார் விலங்குகளுக்கும் வாழ்வளிக்கும் புகலிடம். காஸ்பியன் கடலில் வசிக்கும் பறவைகள்கூட சிலிக்கா ஏரிக்குள் வலசை வருகின்றன.
ஐந்துக்கும் மேற்பட்ட ஆறுகள் கலப்பதால் நன்னீர்த் தன்மையும், கடல்வாய்த் தொடர்பிருப்பதால் உப்புத்தன்மையும் கலந்து உயிர்ப்பான உவர்நீர் ஏரியாக இருப்பதுதான் இதன் சிறப்பு. ஆறுகளில் நீர்பெருகிப் பாய்ந்து நிரம்பும்போது சிலிக்கா ஏரியின் நீர்ப்பரப்பு 1165 சதுரக் கிலோமீட்டர்களாக இருக்கும். நீர்ப்பாய்வு மட்டுப்பட்ட கோடைக்காலங்களில் இவ்வேரியின் நீர்ப்பரப்பு 900 சதுரக் கிலோமீட்டர்களாகக் குறைந்துவிடும். இவ்வேரியைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் தீவுகளிலும் வாழும் இரண்டு இலட்சம் மீனவர்களூக்குச் சிலிக்கா ஏரிதான் வாழ்க்கை தருகிறது.
கடலோடு ஒட்டியிருக்கும் பரந்த ஏரி என்பதால் ஆழமானது என்று கருதவேண்டா. சிலிக்கா ஏரியின் மிகையளவு ஆழமே 13.8 அடிகள்தாம். ஆழமில்லாத உவர்நீர்ப் பெரும்பரப்பு என்பதால் இதனைக் கடற்காயல் எனலாம். அங்கங்கே முழங்காலளவுத் தண்ணீர்ப் பரப்பில் நீர்ப்பறவைகள் குச்சிக் கால்களோடு நின்றுகொண்டிருப்பதைப் பார்க்க முடியும். நட்ட நடுப்பகுதி ஏரிக்குள் இடுப்பளவுத் தண்ணீரில் நின்றுகொண்டு வலைவீசும் மீனவர்களையும் பார்க்கலாம். செங்கால் நாரைகளும் செவ்வுடல் நண்டுகளுமாய் எங்கெங்கும் திரிகின்றன. ஏரிமுழுக்க ஆங்காங்கே புல்திட்டுகளும் சிறுதீவுகளும் இருக்கின்றன.
தொண்ணூறுகளில் இவ்வேரியின் நீரளவு குறைந்து தன் உயிர்த்தன்மையிழந்து இறந்துகொண்டிருந்தது. ஏரியில் கலக்கும் ஆறுகளின் நீர்வரத்து எதிர்பாராத வகையில் குறைந்ததே காரணம். ஏரிப்பகுதியை நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியானது. அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்குப் பிறகு வங்கக் கடலிலிருந்து ஏரிக்குள் நீர்பாயுமாறு மணல் திட்டுப் பகுதியை வெட்டிவிட்டார்கள். கடல்நீர் ஏரிக்குள் புகுந்து நிரம்பியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆறுகளிலும் நீர்வரத்தொடங்கின. உள்ளே புகுந்த கடல்நீர் ஆற்று நீரால் தள்ளி வெளியேற்றப்பட்டு மீண்டும் உயிர்பெற்றது சிலிக்கா ஏரி.
இருப்பூர்தித் தடமானது சிலிக்கா ஏரியை உரசியபடியும் செல்கிறது. சிலிக்கா ஏரியைக் காண்பதற்கென்றே தனியாக ஒரு பயணத்திட்டம் வகுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். சிலிக்கா ஏரியைக் கடந்ததும் பூரிக்குத் திரும்பவேண்டிய தடத்தில் பச்சை கிடைக்காமல் சற்றே காத்திருந்தது. இருளத் தொடங்கிய பிறகு பூரியை நோக்கி நகர்ந்தது இருப்பூர்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக