பூரி நகரத்துக்குள் இருள் கவியத்தொடங்கும்போது சென்றிருக்க வேண்டும். ஆனால், நகர்க்குள் நுழைவதற்கு இருப்பூர்திக்கு நில்செல்குறி (Signal) கிடைக்கவில்லை. அதனால் அடர்ந்த இருளில் எங்கோ நடுக்காட்டில் வண்டி நிறுத்தப்பட்டது. இரவில் வெளியே காண்பதற்கும் எதுவுமில்லை என்பதால் ஒன்றுக்கு இரண்டு தேநீராக அருந்திவிட்டு தூங்குபலகையில் சாய்வதும் பெட்டியில் உலாத்துவதுமாக நேரம் கடத்தினேன்.
எல்லா ஊரிலும் தேநீர் பத்து உரூபாய் என்றால் ஒடியாவுக்குள் தேநீர் ஐந்து உரூபாய்தான். அதிலும் இருப்பூர்திக்குள் கொணர்ந்து விற்பவர் அவ்விலைக்குத் தருவதைப் பாராட்டவேண்டும். நம்மூரைப்போல பெரிய குவளையில் தேநீர் தருவதில்லை. ஓரிரு மடக்கில் குடிக்கக்கூடியவாறு சிறிய குவளையில் தருகிறார்கள். ஓரளவு வடிவமான அகல்விளக்குக்கு எவ்வளவு எண்ணெய் ஊற்றுவோமோ அவ்வளவு. நமக்குப் போதவில்லை என்றால் ஒன்றுக்கு இரண்டு குவளையாக வாங்கிக் குடித்துக்கொள்ள வேண்டியதுதான். ஒருவழியாக நில்செல்குறி பச்சைக்கு மாறியது. மெதுவாக நகரத் தொடங்கிய வண்டி பூரிக்குள் நுழைந்தது. ஒன்றரை மணிநேரக் காலத்தாழ்ச்சியால் எட்டரைக்கு மேலாகிவிட்டது.
பூரி இருப்பூர்தி நிலையம் தொடங்குமுனையம் (Terminal) என்னும் தகுதியிலுள்ளது. பூரியை வந்தடைந்ததும் எல்லா வண்டிகளும் திரும்பிச் செல்ல வேண்டும். மேற்கொண்டு எங்கும் செல்வதற்கில்லை. நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் வந்து போகின்ற இடம். பூரி முனையத்தை அடைந்த அந்த வண்டியிலிருந்து உதிரிகளாகத்தான் பயணியர் இறங்கினர்.
விசாகப்பட்டினத்தளவுக்குப் பூரி இருப்பூர்தியகம் தூய்மையானது என்று சொல்ல முடியாதுதான். அகன்று பரந்திருப்பதால் ஓரளவு தூய்மையாகவே இருந்தது. ஓர் இருப்பூர்தியகத்தின் தூய்மையை அறிய அதன் பயணியர் காப்பறையைப் பார்த்தால் போதும். அவ்விடம் பேணப்படும் தன்மையை வைத்தே அந்நிலையத்தின் 'முகரைக்கட்டையை' அறிந்துவிடலாம். பயணியர் காப்பறையும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், தளர்வாக இல்லாமல் கூட்டம் மிகுந்திருந்தது. பூரியைப் போன்ற நாட்டின் தலையாய வழிபாட்டுக் கோவில் இருக்குமிடத்தில் அவ்வளவு தூய்மை பேணுவதே கடினம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.
நிலையத்திலிருந்து வெளியே வரும்போது ஒவ்வொருவரிடமும் பயணச்சீட்டு கேட்கின்றனர். சீட்டெடுக்காமல் வண்டியில் வருவோர் மிகுதியாக இறங்குகின்ற ஊராக இருக்க வேண்டும். வெளியே வந்ததும் தானிழுனியர்கள் சுற்றிச் சூழ்ந்துகொள்கின்றனர். பூரி நகரம் முற்று முழுமையாக ஜகந்நாதர் கோவிலைக் காண வரும் அடியார்களைச் சார்ந்தே இருக்கிறது. திருப்பதியைப்போல அந்தக் கோவிலைச் சுற்றியே உருவான நகரம். நகரமெங்கும் தங்கும் விடுதிகள்தாம் இருக்கின்றன. ஒரு தானிழுனியார் வாய்ப்பைப் பெற்றார்.
விடுதிக்குச் செல்லும் வழியில் திருமணத்து ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அவ்வூர்வலத்தில் ஆயிரம் பேரேனும் சென்றிருப்பர். அவ்வூரின் செல்வர் குடும்பத்துத் திருமணமாக இருக்க வேண்டும். போக்குவரத்து, காவல்விதிமுறைகள் என எவற்றையும் அவ்வூர்வலம் கண்டுகொள்ளவில்லை. மூன்று சக்கரமுள்ள மிதிவண்டிகளில் ஒளிவிளக்குகள் கட்டப்பட்டிருந்தன. கொட்டு முழங்குகின்ற ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட வண்டிகளும் இடையிடையே இடம்பெற்றன. அவற்றிலிருந்து காதைப்பிளக்கும் ஒலியில் கொட்டிசை முழங்க ஊர்வலக் கூட்டத்தினர் ஆடிக்கொண்டே செல்கின்றார்கள்.
ஊர்வலத்தோடு ஊர்வலமாக உள்நுழைந்து சென்றார் தானிழுனியார். "பூரியில் நாம் இங்கே பழகியவாறு, நினைக்கின்றவாறு தனியாள் நாகரிகங்கள், பணிவுகள் இருக்கும் என்று நம்பிச் சென்றுவிடாதீர்கள், ஆளாளுக்கு உரக்கக் கத்துவார்கள், மிரட்டிப் பேசுவார்கள், இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் காவலர்கள் எதையும் கேட்கமாட்டார்கள், கேட்டாலும் உள்ளூர்வாசிகள் ஒன்று கூடிவிடுவார்கள், நாம் மொழி தெரியாத அயலூரினர் என்பதால் நாம் முறையிட்டாலும் நம்பக்கம் எதையும் திருப்ப முடியாது," என்று என் நண்பர் கூறியிருந்தார். அந்த முரட்டு ஊர்வலத்தைப் பார்த்தபோது அதுதான் தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக