பூரி நகரமானது நாற்புறமும் இயற்கை அரண்கள் சூழ அமையப்பெற்றிருந்தாலும் அதன் வரலாற்றில் தொடர்ந்து அந்நியர் படையெடுப்பினால் சொல்லவொண்ணாத இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஒருபுறம் கடலும் மறுபுறம் கிழக்குத் தொடர்மலைக் குன்றுகளும் சிலிக்கா ஏரியும் மகாநதிக் கிளையாறுகளுமாய்ச் சூழப்பட்டிருந்தாலும் அந்நகரின் நாடளாவிய புகழ் காரணமாக அந்நியர் கண்களைத் தொடர்ந்து உறுத்தியிருக்கிறது.
குஜராத்தின் சோமநாதபுரத்துக் கோவில்மீது நிகழ்த்தப்பட்ட கஜினி முகம்மதுப் படையெடுப்பைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். பூரி நகரமானது பதினெட்டு முறைகள் அந்நியர் முற்றுகைகளுக்கு ஆளாகியிருக்கிறது. பதினெட்டு முறைகள் கொள்ளைப் படையெடுப்புகளுக்கு ஆளான இந்தியக் கோவில் நகரம் வேறொன்று உண்டா என்று தேடவேண்டும். அவ்வாறு படையெடுத்தவர்களில் பிற மதத்தவர்களே பெரும்பான்மையானவர்கள் என்றாலும் இராட்டிரகூட அரசர்களும் படையெடுத்துள்ளனர்.
அந்நியர் படையெடுப்புக்கு ஆளான ஒவ்வொரு முறையும் கருவறைத் திருவுருவங்களான ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை ஆகியோரின் சிலைகள் அடியார்களால் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டன. கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலும், வேறு கோவில்களின் மறைவிடங்களிலும், சிலிக்கா ஏரியின் தனிமைத் தீவுகளிலும் அவ்வுருக்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஒளிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் அத்தகைய கொடுங்கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்பட்டு முடிவுக்கு வந்தன. அக்கோவிலின் சமயப் பெற்றியை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதற்கென்று ஓர் அலுவலரை அமர்த்தி முறைப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு கொள்ளைப் படையெடுப்பின்போதும் ஒளித்து வைக்கப்பட்ட சிலைகள் பிறகு அமைதியேற்பட்டவுடன் முறையான சடங்குகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளன. மரத்தாலான சிலைகள் என்பதால் அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றீடு செய்து நிறுவும் வழக்கமும் தொன்றுதொட்டு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகளை ஆண்ட பற்பல அரச குடும்பத்தினரின் வாரிசுகளும் உறவுத் தொடர்ச்சிகளும் இல்லாமற் போய்விட்ட நிலையில், பூரியை ஆண்ட அரச மரபினர்தான் இன்றும் அந்நகரில் வாழ்கின்றனர். ஒவ்வொரு தேர்த்திருவிழாவின்போதும் பூரியின் அரச மரபினர் தேரோடும் வீதியைச் சுத்தம் செய்து தந்த பின்னரே தேர்கள் நகர்த்தப்படுவது வழக்கம். அவர்களுடைய முன்னோர்கள் பேரரசர்களாக விளங்கியபோதே தம்மை ஜகந்நாதரின் அடியார்களாக ஒப்புக்கொடுத்ததை உறுதிப்படுத்தும் நிகழ்வு அது.
பூரிக்கோவில் தேர்வீதியின் நீள அகலங்கள் பற்றி வியக்கும் வேளையில் அத்தெருக்களில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றித் திரியும் மாடுகளைப் பற்றியும் கூறவேண்டும். அவை கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாடுகளாக இருக்க வேண்டும். தனியொருவர்க்கு உடைமைப்பட்டதாகத் தெரியவில்லை. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லை. திரண்ட உடலமைப்போடு மனிதத் திரளிடையே இயல்பாக நடந்து சென்றன அவை. ஒவ்வொரு மாட்டின் நெற்றியிலும் சிவப்புக் குங்குமம் தீற்றப்பட்டிருக்கிறது. வருகின்ற போகின்ற கோவில் பக்தர்கள் சிலர் அம்மாடுகளுக்குக் குங்குமம் வைத்து விடுகிறார்கள். ஒரு மாடு நம்மை நோக்கி அருகில் வந்தால் சற்றே மிரட்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் புசுபுசுத்த மூச்சுக்காற்றோடு அருகில் வருகின்ற மாடு நம்மை ஒன்றும் செய்வதில்லை. நம்மை உரசியபடியே நடந்து போகிறது. அதுசரி, நம்மைப்போல் எம்மாம்பெரிய கூட்டத்தையெல்லாம் பார்த்திருக்குமே...
சில மாடுகள் அதிகாலைக் குளிர் நீங்கிய இதத்தில் வெய்யிலில் அசைபோட்டபடி படுத்திருந்தன. சாலையின் நடுவிலும் அவை அசையாமல் படுத்திருக்கின்றன. அகன்ற சாலைதான் என்றாலும் கோவிலுக்கு வெகு தொலைவிலேயே தடுப்பு இருக்கிறது. ஈருருளிகளைத் தவிர, பிற வண்டிகள் நுழைவதற்கு வழியில்லை. நாம் தொலைவிலேயே இறக்கிவிடப்பட்டமையால்தான் பூரிக்கோவில் தேர்வீதியின் தனியழகில் திளைக்க வாய்த்தது. படுத்திருக்கும் மாடுகள்மீது மோதாதபடி ஈருருளியை மடித்து நுழைத்துச் செல்கின்றனர். எதையும் கண்டுகொள்ளாமல் முற்றும் அறிந்த ஞானியரின் அமைதி தவழும் முகத்தோடு வாழ்கின்றன பூரித் தேர்வீதியின் மாடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக