பூரிக் கோவில் தேர்வீதியின் வியக்கை வைக்கும் பேரழகிலிருந்தே என்னால் மீள முடியவில்லை. முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே நடந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவில் ஜகந்நாதர் கோவிலின் கருவறைக் கோபுரம் தெரிந்தது. கலிங்கக் கோவில் கட்டடக் கலையில் கருவறையின்மீது எழுப்பப்படும் கோபுரமே உயரத்தில் பெரிதாக இருக்கும். தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களில் நுழைவாயிலில் இருக்கும் கோபுரங்கள் கருவறைக் கோபுரத்தைவிடவும் வானளாவி இருப்பவை. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற முற்காலக் கோவில்கள்தாம் இவ்வாறு கருவறைப் பேருயரங்களாக இருப்பவை. ஆனால், கலிங்கக் கோவில்கள் எல்லாமே இவ்வாறு உள்நடுப் பெருங்கோபுரங்களாகவே இருக்கின்றன.
ஜகந்நாதர் கோவிலின் கருவறைக் கோபுரத்தின் முடியில் கட்டப்பட்டிருந்த கொடி காற்றில் அசைந்தது. அது காற்றடிக்கும் திக்குக்கு எதிராகப் பறக்கும் என்று எங்கோ படித்த நினைவு வந்தது. கோபுரத்தின்மேல் கொடிக்கருகில் பதிக்கப்பட்டிருந்த சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்ப்பதுபோலவே இருக்குமாம். பெரிய சக்கரத்தைத் தொலைவிலிருந்து பார்க்கையில் அவ்வாறு தோன்றுவது இயல்பே. நாம் கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் இரவலர்கள் அணியணியாய் அமர்ந்து யாசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசையில் அமர்ந்து கையேந்த வேண்டும் என்று அங்கே ஓர் ஏற்பாடு இருக்கும்போலும்.
"பூரி நகரத்தில் என் இறுதிக் காலத்தில் பிச்சையெடுத்து வாழ விரும்புகிறேன்," என்று ஒருமுறை என் நண்பர் கூறினார். பிச்சை என்ற சொல்லால் குறிப்பிடுவது சரியா என்று தெரியவில்லை. இரந்துண்டு வாழ்வது என்று குறிக்கலாம். இறைவனுக்குத் தன்னைக் காணிக்கையாக்கிவிட்டு துறவு மனநிலையில் அங்கேயே அண்டி வாழ்வது. அவ்வாழ்க்கையில் நமக்கு வேண்டியது தரப்பட்டுவிடும். "பூரியில் உள்ள இரவலர்கள் பலரும் துறவு பூண்டவர்கள். இரத்தல் என்பது துறவு வாழ்வில் ஒரு படிநிலை. எப்படித் திருவண்ணாமலையில் கையேந்துபவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று கூறிவிட முடியாதோ, அவ்வாறே பூரியில் உள்ள இரவலர்களையும் கருத வேண்டும். அவர்கள் ஆளறிந்துதான் கையேந்துவார்கள். யாரிட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்றார். நமக்குப் பிடிபடாத பெரும்பொருளைப் பேசுகின்றார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. நாம் சென்றது இளங்காலை நேரம் என்பதால் கோவிலை நோக்கி அடியார்களின் கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. காவல் பணிகளில் ஈடுபடும் காவலர்களும் கோவிலுக்கு வந்தபடியிருந்தனர்.
கேரளத்துக் கோவில்களைப்போல வெற்றுடலோடுதான் உள்ளே நுழையவேண்டும் என்பதைப் போன்ற விதிப்பாடுகள் ஏதேனும் இருக்குமா என்று பார்த்தேன். அப்படியெந்தக் கட்டுப்பாடும் இல்லை. கோவிலுக்குள் பைகளையோ, கைப்பேசியினங்களையோ எடுத்துச் செல்ல இயலாது. வெறும் ஆளாகத்தான் நுழைய வேண்டும். நுழைவாயிலருகில் பாதுகாப்புக்காக நாம் சோதனையிடப்படுவோம். உள்ளே நுழைந்ததும் அது நம் கோவில் என்கின்ற மனநிலைக்கு வந்துவிடுவோம். சுமார் பத்தே முக்கால் ஏக்கர் பரப்பளவில் அமைந்த (420000 சதுர அடிகள்) ஜகந்நாதர் கோவிலை இளவெய்யில் தழுவியிருந்தது. இப்போது உள்ளே நுழைவதன்மூலம் காலை நேரத்து வழிபாட்டில் கலந்துகொள்ள முடியும். மிகச்சரியான நேரத்திற்கு வந்திருக்கிறோம் என்பது விளங்கிற்று.
ஜகந்நாதர் கோவிலுக்கு நான்கு திசைப்பட்ட பெருமதிற்சுவர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதில் நடுவிலும் மிகப்பெரிய நுழைவாயில் இருக்கின்றது. கிழக்கு மதில்மீதமைந்த சிம்மத்துவாரம் எனப்படுகின்ற 'அரிமா நுழைவாயில்' வழியாகத்தான் மக்கள் செல்கின்றார்கள். தெற்கிலுள்ளது குதிரை வாயில் என்றும் மேற்கிலுள்ளது புலி வாயில் என்றும் வடக்கிலுள்ள யானை வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன. சிம்மத்துவாரா, அஸ்வத்துவாரா, வியாக்ரத்துவாரா, ஹஸ்தித்துவாரா என்பவை அவற்றுக்கான பெயர்கள். சிம்மத்துவாரத்தின் முன்னால் மிகப்பெரிய கற்கம்பம் இருக்கிறது. முப்பத்தாறு அடிகள் உயரமுள்ள அதைச் சூரியக்கம்பம் என்று அழைக்கின்றார்கள்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக