1950ல் இதே நாளில் விமான விபத்து - உலகின் மோசமான விமான விபத்துக்கள்
சென்னை : இன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1950ஆம் ஆண்டு இதே நாளில் வேல்சில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் கொல்லப்பட்டனர்
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துருக்கி நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று 11 பேருடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்றது. ஈரான் நாட்டு மலைப்பகுதியில் விமானம் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேபாள தலைநகர் காட்மண்டுவில் விமானம் தரையில் மோதி தீ பிடித்ததால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமான நிலையத்தில் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்துகள் என்பது கடந்த 10 வருடங்களில் மிக அதிகமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. கடந்த சில வருடங்களில் உலகையே உலுக்கிய சில முக்கிய விமான விபத்துகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை இதோ:
பெரிய விபத்து
2005 ஆகஸ்ட் 14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலியாகினர். 2005 ஆகஸ்ட் 16: வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் விபத்தில் சிக்கியது. இதில் 160 பேர் பலியாயினர்.
நைஜீரியாவில் அடுத்தடுத்து
அக்டோபர் 22: நைஜீரியாவில் சர்வதேச விமான நிலையத்தில், விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலியாகினர். டிசம்பர் 10ஆம் தேதியன்று நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்ய விமானம்
2006 மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர். ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனில் விபத்து
ஆகஸ்ட் 22: துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியாயினர். 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில்
ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர். 2008, ஆகஸ்ட் 20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.
ஏர் பிரான்ஸ்
2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் உயிரிழந்தனர். ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழப்புகள் அதிகம்
2010 மே 12: லிபியா நாட்டு, தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் உயிரிழந்தனர். மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.
மிக மோசமான விபத்து
ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் உயிரிழந்தனர்.
விமானம் என்னவானது
மலேசிய விமானம் 2014 மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதில் இருந்தவர்கள் நிலைமை புரியவில்லை.
298 பேர் மரணம்
ஹாலந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.
ஏர் ஏசியா
ஜூலை 24 அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் உயிரிழந்தனர். டிசம்பர் 28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் ஏர் ஏசியா
2015 பிப்ரவரி 5: தைவானில் "டிரான்ஸ் ஆசியா' நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி 18: இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமானம் நடு வானில் சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் உயிரிழந்தனர்.
எகிப்தில் விபத்து
மார்ச் 24: ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 31: ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.
விமானிகள் மரணம்
கடந்த 2015ஆம் ஆண்டு ஆண்டு ஜூன் 8ம் தேதி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் இருந்தனர். விமானத்தில் பயணம் செய்த மூவருமே உயிரிழந்தனர்.
2018 விபத்துகள்
கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் உலக அளவில் 20க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. பிப்ரவரி 11ஆம் தேதியன்று ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 77 பேர் உயிரிழந்தனர். அதே மாதம் 18ஆம் தேதியன்று ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு 66 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 66 பேர் பலியாகினர். மார்ச், 8 ஆம் தேதியன்று ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள் என்றும் 6 பேர் விமான சிப்பந்திகள் என்றும் கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக