கலிங்கம் காண்போம் - பகுதி 32
பைகளை வைத்துச் செல்வதற்கு நாம் பட்ட பாட்டைப் பார்த்த கடைக்காரர் ஒருவர் அழைத்தார். நாம் ஒவ்வொரு கடையாகச் சென்று கேட்பதையும், கடைக்காரர்கள் தவிர்த்து அனுப்புவதையும் பார்த்திருந்தார் போலும். வலிய வந்து அழைத்து என்ன வேண்டும் என்று சைகையால் கேட்டார்.
"பைச்சுமைகளை வைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்து வரவேண்டும்... பணம் தருகிறோம்...," என்றதற்கு "பாம் ?" என்று நகைச்சுவையாகக் கேட்டார். என்னைப் பார்த்தால் குண்டு வைப்பவரைப்போலவா தெரிகிறது என்று நினைத்துக்கொண்டேன். கேட்கவா முடியும்? "அதெல்லாம் இல்லை" என்று சிரித்துக்கொண்டே மறுத்ததை ஏற்றுக்கொண்டு தம் கடையின் அடுக்குத் தட்டுக்கு அடியில் வைத்துச் செல்லும்படி சொன்னார். "இங்குள்ள ஆயிரம் கடைகளில் நீ ஒருவர்தான் ஐயா தெய்வத்தின் தெய்வம்" என்று நினைத்துக்கொண்டு பைகளை வைத்துச் சென்றோம். மீதிக்கதையையும் இங்கேயே சொல்லிவிடுவதுதான் சிறப்பு. ஏனென்றால் அதில்தான் மனிதத்தின் மாறா விழுமியம் ஒன்று தேங்கியிருக்கிறது.
மணிக்கணக்கில் கோவிலைப் பார்த்துவிட்டு ஏறத்தாழ இருட்டாகத் தொடங்கியபோதுதான் வெளியே வந்தோம். வந்தபோது கடைத்தெருவின் கடைகள் சில பூட்டப்பட்டிருந்தன. நாம் பைகளை வைத்துச் சென்ற கடையும் பூட்டப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தோடு அங்கே சென்றால், காலத்தினால் ஓர் உதவியைச் செய்த அந்தக் கடைக்காரர் நமக்காகக் காத்திருந்தார். நல்ல வேளை, இவரும் பூட்டிவிட்டுச் செல்லாமல் இருந்தாரே என்று மகிழ்ந்து பைகளை எடுத்துக்கொண்டு காசை நீட்டினோம். அவரும் பூட்டிச் சென்றிருக்க வேண்டியவர், நமக்காகக் காத்திருந்தார். வாழும் மகான் என்றே சொல்லவேண்டும்... "பணம் வேண்டா..." என்றார். நீட்டிய பணத்தாளை உறுதியாக மறுத்தார். ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்கிறோம் என்றபோதும் "அப்படிக்கூட வாங்க வேண்டியதில்லை..," என்று கேட்டுக்கொண்டார். எல்லாவற்றையும் வளைத்து வளைத்துப் படமெடுத்த நான் அவருடைய செய்கைகளைப் பார்த்து நெகிழ்ந்து நின்றுவிட்டேன். அவரைப் படமெடுக்கக்கூட இல்லை. சூரியக்கோவில் முன்னால் இருக்கும் ஒருவர்க்கு ஞாலங்காக்கும் நல்லொளியாய்ப் பொழியும் மனம் வாய்த்ததில் வியப்பென்ன ! அவரை வணங்கினேன்.
பைகளை அவர் கடையில் வைத்தாயிற்று. கோவில் நுழைவை நோக்கிச் சென்று நுழைவுச் சீட்டு பெற்றாயிற்று. கொனாரக் சூரியக் கோவிலானது ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் 'ஞாலத் தொல்மரபுக் களம்' (World Heritage Site) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. வரலாறு, பண்பாட்டுப் பழைமை என்பதன் அடிப்படையில் இந்தப் பெற்றியைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ - United Nations Educational, Scientific and Cultural Organization) ஏற்றுக்கொள்ளப்பட்டுk காக்கப்படுகின்ற இந்தியாவின் இருபத்தெட்டுத் தொல்லிடங்களில் கொனாரக் சூரியக் கோவிலும் ஒன்று. அந்த இருபத்தெட்டில் பூரி, இராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள் இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
வரலாற்றுத் தொன்மை மட்டுமின்றி இயற்கைத் தொன்மையும் அவ்வமைப்பினால் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி காப்பிடப்பிடவேண்டிய தொன்மையான இயற்கைக் களங்களும் யுனெஸ்கோவின் பட்டியலில் இருக்கிறது. யுனெஸ்கோவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காக்கப்படுகின்ற வரலாற்றுக் களங்கள் இருபத்தெட்டு. இயற்கைத் தொல்லிடங்கள் எட்டு. ஆக, மொத்தம் முப்பத்தாறு. அவற்றுள் தமிழகத்தில் உள்ளவை : 1). மாமல்லபுரச் சிற்பங்கள் 2). தஞ்சைப் பெரிய கோவில் 3) கங்கைகொண்ட சோழீச்சுவரம் 4) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் 5) உதகை மலை இருப்பூர்தி. இவற்றைத் தவிர இயற்கைத் தொல்லிடமாக மேற்குத் தொடர்ச்சி மலையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஞாலத் தொல்மரபுக் களமாக வரலாற்றிடமொன்று யுனெஸ்கோவில் அறிவிக்கப்பட வேண்டும் என்றால் அதற்குரிய தகுதிகள் என்னென்ன ? அவற்றை அறிந்தால்தான் நமக்குக் கொனாரக் சூரியக் கோவில் மட்டுமில்லை, மாமல்லபுரத்தின் அருமையும் தெரியவரும். யுனெஸ்கோவின் வரையறைகள் இவைதாம் :-
1. மனிதப் படைப்பாற்றலின் பெருவல்லமை காட்டப்பட்ட இடமாக வேண்டும்.
2. பெருங்காலப்பரப்புக்குள் அவ்விடத்தில் மனித மாண்புகள், குறிப்பிட்ட பண்பாடுவாழ் மக்களிடையே பரவி நிலைபெற்றதன் விளைவாய் கட்டுமானம், தொழில்நுட்பம், நகரமைப்பு, நிலச்செம்மை என்று ஈடுபட்டிருக்க வேண்டும்.
3. தனிச்சிறப்பான கலை பண்பாட்டு மரபுடைய நாகரிகமாக நிலைபெற்றோ மறைந்தோ இருக்க வேண்டும்.
4. மனிதகுல வரலாற்றின் தனிச்சிறப்பான கட்டடங்களோ தொழில்நுட்பங்களோ நிலவமைப்புகளோ அவற்றின் சான்றுகளாக மீந்திருக்க வேண்டும்.
5. தன்னிகரற்ற குடிவாழ்க்கையின் பயனாக நிலவழிகள், கடல்வழிகள் இடையே பெரும் நாகரிகப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். காலப்போக்கில் மறைந்தவற்றின் எச்சங்களாகவும் இருக்கலாம்.
6. விழாக்கள், கொண்டாட்டங்கள், உலகை மாற்றிய எண்ணங்கள், மனித நம்பிக்கைகள், கலைகள், இலக்கியங்கள் ஆகியவை உலகில் எங்குமில்லாத தனித்துவத்தோடு அங்கே தோன்றியும் நிகழ்ந்தும் இருக்க வேண்டும்.
7. இயற்கைப் பேரழகும் அழகின் உயர்செம்மை மிகுந்தும் இருக்க வேண்டும்.
8. பூமியின் வரலாற்றையும் உயிர்களின் வரலாற்றையும் கூறும்படியாய் மகத்தான சூழலியல் நிலைப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றுக்கான இடமாக இருத்தல் வேண்டும்.
9. பரிணாமத்தின் வழிப்பட்ட தன்னிகரற்ற சூழலியல் மற்றும் புவியியல் வாழ்வுக்கு அடிப்படையானவற்றின் நன்னீர், கடற்கரை, கடல்வளங்களோடு தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றின் உயிர்ச்சூழல் மிகுந்திருக்க வேண்டும்.
10. சூழலியல் பன்முகத்தன்மையுடையதும் இன்றியமையாததுமான பழக்கவழக்கங்களை உடைய அழியும் உயிர்களின் கடைசிப் புகலிடமாக இருத்தல் வேண்டும்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக