கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34
கொனாரக் கோவில் இடிந்து விழுந்ததற்கு மேலும் பல காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. கோவில் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மணல்நிரப்பு முறையில் ஏற்பட்ட பிசகு என்னும் பொறியியல் காரணம் அவற்றுள் ஒன்று. அந்தக் காலக் கோவில் கட்டுமானத்தின்போது இருநூற்று இருபது அடிகளுக்குக் கோபுரத்தை எழுப்பி நிறுத்தியது எப்படி ?
இன்றைக்குள்ள கட்டுமான வாய்ப்புகள் எவையுமில்லாத அக்காலத்தில் அவர்களால் எப்படி அவ்வளவு உயரத்திற்குக் கோபுரம் எழுப்ப முடிந்தது ? கோபுரத்தின் உள்கூட்டிலும் கோபுரத்தின் வெளிப்பரப்பிலும் மணலை நிரப்பியவாறு கட்டிக்கொண்டே செல்லும் முறைதான் அது.
தற்போது சாரம் கட்டி கட்டுமானங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால், சாரம் கட்டிக் கட்டும் முறையில் பேரெடை மிக்க கற்களை ஏற்றிச் செல்ல இயலாது. அதனால் கோபுரத்தின் உள்ளும் வெளியும் மணலை நிரப்பி நிரப்பி கட்டுமானத்தை ஏற்றுவார்கள்.
கோபுரத்திற்கான கற்களை அடுக்கிக் கட்டுவதும் அதை மூடும்படி உள்ளும் வெளியும் மணற்பாங்காய் நிரப்புவதும் தொடர்ந்து நடக்கும். அவ்வாறு பெரும் மணற்குவியலாக ஒரு கோபுரத்தைக் கட்டி உயர்த்துவார்கள். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு, கோபுரத்திற்கு வெளியே உள்ள மணலை முதலில் அகற்றுவார்கள். அவ்வாறு அகற்றும்போது பழத்தோல் உரிக்கப்பட்ட சுளைபோல் கோபுரப் பெருங்கட்டுமானம் வெளிப்பார்வைக்கு வரும். அதன் பின்னர் கோபுர வாயிலின் வழியாக உள்ளே அடைந்திருக்கும் மணலை அகற்றுவார்கள். மூடிய மணலை அகற்றிய பின்னர் கோபுரத்தின் முழுமையான உருவம் காண்பதற்குக் கிடைக்கும். அதைப் பார்க்கும்போது கட்டியவர்களுக்கு எப்படியெல்லாம் மெய்சிலிர்த்திருக்கும் என்று கற்பனை செய்வதற்கே இனிக்கிறது. அந்த நொடியில் அவர்கள் பரப்பேரின்பத்தை அடைந்திருப்பார்கள்.
கொனாரக் கோவிலையும் அவ்வாறு மணல் நிரப்பி நிரப்பிக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிச் சென்ற கோபுரத்தின் உயரம் வரம்பை மீறியதாய் விண்முட்டும் தன்மையினதாய் இருந்தது. மணற்சுற்றை அகற்றியதும் எடை தாளாமல் கோபுரம் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். கட்டுமானத்தில் நேர்ந்த பெரும்பிழையானது கோவில் இடிவுக்குக் காரணம் என்பது அவர்களின் கருத்து. ஆனால், பிற்காலத்தில் இடிபாடுகளுக்கிடையே சூரியக்கடவுளின் சிலையும் அதற்கு அணிவித்திருந்த ஆபரணங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கோவில் பணிகள் நிறைவடைந்து சூரியனுக்குரிய வழிபாடுகளும் நிகழ்ந்திருக்கையில்தான் அத்தகைய தடயங்கள் கிடைக்கும். மேலும் கொனாரக் சூரியக் கோவிலில் இடையறாத வழிபாடுகள் நிகழ்ந்தவற்றைக் கூறும் பதிவேடுகளும் காணப்படுகின்றன. அதனால் இக்கோவிலின் கட்டுமானத்தின்போதே இடிந்து விழுந்தது என்ற கருத்துக்கு வலிவு கூடவில்லை.
வேறெப்படி இடிந்து விழுந்திருக்க முடியும் ? ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்குமோ ? அவ்வாறு ஏற்பட்டிருந்தால் எவ்வளவு பெரிய கட்டுமானமும் சரிந்து விழுந்திருக்க வேண்டும்தானே? அந்த வழியிலும் ஆராய்ந்து பார்த்துவிட்டார்கள். கொனாரக் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட கடும்நிலநடுக்கம் கோவில் இடிவுக்குக் காரணமாகியிருக்கலாமோ ? கொனாரக் பகுதியில் கோவிலைத் தரைமட்டமாய்ச் சாய்க்குமளவுக்கு எவ்வித நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அப்படி ஏற்பட்டிருந்தால் அந்நிலநடுக்கம் கோவிலை மட்டுமின்றிச் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பெருஞ்சேதத்தை விளைவித்திருக்க வேண்டும். அதற்கான எவ்விதத் தடயங்களும் இல்லை.
அத்தகைய கடுஞ்சேதத்தை விளைவித்த நிலநடுக்கத்தைப் பற்றி அவ்வூர் மக்களின் நினைவுகள் இன்றுவரை வாய்மொழியாகப் பரவியிருக்க வேண்டும். அவ்வாறு எவ்விதக் கதைகளும் அங்கே வழங்கப்படவில்லை. நிலநடுக்கம் என்னும் காரணத்தை முழுமையாக மறுப்பதற்கு உறுதியான சான்றும் உள்ளது. கொனாரக் கோவில் அடிப்புறப் பகுதியானது சிறிது கூட குலையவில்லை. கோவிலின் அடித்தளமாய் விளங்கும் மேடையில் எந்த விதமான விரிசலும் விலகலும் இல்லை. ஆகவே கோவிலின் இடிவுக்கு நிலநடுக்கக் காரணத்தைக் கற்பிக்க ஏலாது. எனில், வேறு எப்படித்தான் அந்தக் கோவில் இடிந்திருக்கக்கூடும் ?
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக