Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 மார்ச், 2018

கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35

கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35


இடித்தாக்குதலில் கொனாரக் கோவில் கோபுரம் வீழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறதா ? ஏனென்றால் இருநூற்று இருபது அடிகள் உயரமாக இருந்த அக்கோபுரம் எளிதில் இடிமின்னல் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியது. பன்னூற்றாண்டுகளில் ஒருநாள் வலிமையாய் வானம் இடித்தபோது விழுந்திருக்கலாம். ஆனால், கோபுரத்தின் சுவர்க்கல்லானது இருபது முதல் இருபத்தைந்து அடிகள்வரை பருமன் கொண்டது. அவ்வளவு வலிய கல்லடுக்கினை இடியினால் தகர்க்க முடியாது என்று கூறுகிறார்கள். அதனால் இடி தாக்கியதில் கொனாரக் சரிந்தது என்று கொள்வதற்கில்லை.

கொனாரக் கோவிலானது கடற்கரையோரத்தில் அமைந்திருப்பதால் அது அந்நிலப்பரப்பானது மணற்பாங்காகவே இருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் அவ்விடம் ஆற்றுப் படுகையாகவோ பள்ளத்தாக்காகவோ இருந்திருக்கலாம். மணற்பாங்கான பள்ளத்தாக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட கோவிலின் அடித்தளம் சிறிது சிறிதாக வலுக்குன்றியதால் கொனாரக் கோபுரம் சாய்ந்ததா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

Exploring Odhisha, travel series - 35
கொனாரக் கோவிலின் அடித்தளம் விளையாட்டுத் திடல் அளவுக்கு அகன்ற பரப்புடையது. அவ்வளவு பெரிதாய் அகன்றிருக்கும் அடித்தளம் ஓரிடத்தில்கூட தரையில் இறங்கியதற்கான எந்தச் சுவடும் இல்லை. கட்டியபோது அமைக்கப்பட்ட அடித்தளம் இன்றுவரை எவ்விதச் சரிவுமின்றி உறுதியாகவே இருக்கிறது.
பொதுவாக, கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிப் போடப்படும் அடித்தளங்கள் ஒரே கல்லுடலாக மாறிவிடும். அவ்வாறு ஒரே கட்டமைப்பாய் மாறிய பிறகு ஏதேனும் ஒரு பகுதியில் அடித்தளம் இறங்க முயன்றாலும் கட்டுமானத்தின் பிற கட்டுகள் அதனைக் கீழிறங்க விடாமல் தாங்கிப் பிடித்துக்கொள்ளும். எவ்வளவு பெரிய கட்டுமானங்கள் என்றாலும் உறுதியான கற்களை அடித்தளமாகப் போட்டுவிட்டால் அஞ்சத் தேவையில்லை.

Exploring Odhisha, travel series - 35
இவ்வுலகில் வரலாற்றுக்கு முந்திய தொன்மையான படைப்புகளில் கற்களால் செய்யப்பட்டவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இன்றைக்கு எழுப்பப்படும் கட்டடங்கள் காலத்தை மிஞ்சி வாழவேண்டுமென்றால் முழுமையாகவே கற்களால் அமைக்கப்படவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இன்றைய நம் பன்மாடிக் கட்டடங்களுக்கும் வீடுகளுக்கும் வாழ்நாள் அறுபது முதல் எண்பது ஆண்டுகள் மட்டுமே என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நம் கட்டடங்களை நன்கு கட்டி முறையாகப் பழுது பார்த்துப் பராமரித்தால் மேலும் ஐம்பதாண்டுகள் உறுதியாக நிற்கும். அதற்கு மேல் இன்றைய கட்டுமானங்களைக் கைவிடவேண்டும். அன்றேல் தகர்த்துவிடவேண்டும். இது கசக்கும் உண்மை. ,
அன்றைய கோவில்களும் பிற கட்டுமானங்களும் கற்களைக்கொண்டே, கற்களைப் பயன்படுத்தியே, கற்களைச் செதுக்கியே எழுப்பப்பட்டவை. அந்த ஒரே காரணத்தால்தான் அக்கட்டுமானங்கள் நூற்றாண்டுகள், ஆயிரமாண்டுகள் தாண்டியும் செம்மாந்து நிற்கின்றன. கொனாரக் கோவிலின் மேற்பகுதிதான் சரிந்ததே தவிர, அதன் அடிக்கட்டுமானம் அப்படியே இருக்கிறது. கோவிலின் கட்டுமானத்தில் எவ்விதக் குலைவும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்திவிட்டார்கள்.

Exploring Odhisha, travel series - 35
கோபுரச் சரிவிற்குக் கூறப்படும் இன்னொரு காரணம் பொருட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது. கொனாரக் கோவிலின் முன்முகப்பில் பறக்கும் சிங்கங்களைப் போன்ற பேருருவான கற்செதுக்கங்கள் காணப்படுகின்றன. பறக்கும் குதிரையைப்போல அச்சிங்கங்கள் காற்றில் தேரை இழுத்துக்கொண்டு பறக்கின்றன. கலிங்கக் கோவில் கோபுரங்கள் பலவற்றிலும் அவ்வாறு காற்றில் பறப்பதைப்போன்ற சிங்கச் சிலைகள் இருக்கின்றன. பிற கோவில்களில் அத்தகைய சிலைகள் சிறிதாக இருக்கின்றன. கொனாரக் கோவில் கோபுரத்தில் பதித்து நிறுத்தப்பட்ட சிங்கச் சிலைகள் அளவிற்பெரியதாய் இருந்தன. அச்சிலைகளின் பேரெடை தாங்க முடியாத கோபுரச் சுவர்கள் திடீரென்று சரிந்து விழுந்திருக்கலாம். கோவில் சிதிலங்களை அப்புறப்படுத்தியபோது ஆங்காங்கே கீழே விழுந்து நொறுங்கிய சிங்கச் சிலைகளின் சிதைவுப் பகுதிகளையும் கண்டெடுத்திருக்கிறார்கள். இந்தக் காரணம் ஏற்கும்படி இருந்தாலும் அவ்வளவு பெரிய கோவிலைக் கட்டியவர்களின் முழுத்திறத்தையே கருத்தில் கொள்ளாமல் கூறுவதாகும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர். கணிப்புக்கு உட்பட்ட இத்தகைய காரணங்களுக்கு அப்பால் மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். அது என்ன ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக