Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 மார்ச், 2018

கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 36

கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 36

கொனாரக் கோவில் கோபுரச் சிதைவுக்குக் கூறப்படும் காரணங்களில் இதுதான் விழிகளை விரிய வைக்கிறது. தஞ்சைப் பெரிய கோவில் உச்சியில் எவ்வாறு பெருங்கல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கிறதோ, அவ்வாறே கொனாரக் சூரியக் கோவில் உச்சியிலும் பருத்த கல் ஒன்று கலயமாக ஏற்றப்பட்டிருந்ததாம். ஆனால், அந்தக் கல்லானது கோவில் கட்டுமானத்திற்குப் பயன்படும் வழக்கமான கல் இல்லை. காந்தப் புல ஈர்ப்பு விசையுடைய கல். காந்தக்கல்.
Exploring Odhisha, travel series - 36
அவ்வளவு பெரிய காந்தக்கல்லை உச்சியில் வைத்ததனால் கோவிலின் அனைத்துக் கற்களையும் அஃதொன்றே ஈர்த்துப் பிடித்திருந்ததாம். அப்பெருங்கல்லின் காந்தப் புல ஈர்ப்பு கோவிலோடு நிற்கவில்லை. கடலில் செல்லும் கலங்களின் திசைகாட்டிகளையும் தொந்தரவு செய்ததாம். குணகடல் எனப்படும் அக்கடலில் செல்லும் கலங்கள் வங்காளத்தை நோக்கிச் செல்பவை. கொனாரக் கோவிலின் காந்தப்புல ஈர்ப்பினால் கலங்களின் திசைகாட்டிகள் திசைமாற்றிக் காட்டின. அதனால் குழப்பமடைந்த கடல் மாலுமியர் செல்லும் திசையிழந்து கலத்தைச் செலுத்தினர். திசைக்குழப்பத்தால் கடல்வழி தவறிய கலங்கள் கடற்பாறைகளின்மீது மோதி நொறுங்கின. வங்காளத்திற்குச் செல்லாமல் வேறு துறைகளில் சென்று நங்கூரமிட்டன. இதனால் பெரும் இழப்புகளுக்கு ஆளான வங்காளக் கடலோடிகள் கொனாரக் கோவிலின் உச்சிக் கல்லைப் பெயர்த்து வீழ்த்தினர் என்று கூறுகிறார்கள்.
Exploring Odhisha, travel series - 36
பெருங்கட்டுமானத்தின் மேல்தளத்தில் நிறுத்தப்பட்ட எடைதான் அந்தச் சுவர்களை அசையாமல் இறுக்கிப் பிடித்திருப்பது. அது வீழ்த்தப்பட்டுவிட்டால் கற்சுவர்கள் சீட்டுக்கட்டினைப்போல் சரிய வேண்டியதுதான். கொனாரக்கின் காந்தக் கல்லானது கோவிலின் பிற கற்களையும் காந்த விசையால் ஈர்த்து நின்றது. காந்தக்கல் பெயர்த்து வீழ்த்தப்பட்ட பிறகு கோவிலின் பிற சுவர்களும் பிடிமானமிழந்து விழுந்தன. கொனாரக் கோவிலின் உச்சியில் பெருங்கல் இருந்தது உறுதி. ஆனால், அது காந்தக் கல்தானா என்பதை ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். அவ்வாறு உடைக்கப்பட்ட கல்லின் சிதைவுகள் ஏதும் அங்கே கைப்பற்றப்படவில்லை. வரலாற்றில் அத்தகைய குறிப்புகளே இல்லை. "காந்தக்கல் ஈர்ப்பு, கலங்களின் வழிதவறல், கடலோடிகளால் உடைக்கப்பட்டது," ஆகிய காரணங்கள் சான்றில்லாமல் ஒதுங்கி நிற்கின்றன.
Exploring Odhisha, travel series - 36
தம்மபதத்தில் உள்ள கதையொன்று கொனாரக் கோவில் கட்டுமானத்தைப் பற்றிய இந்தப் புதிரை விடுவிக்கிறது. கோவில் கட்டுமானப் பணிகள் காலந்தாழ்த்திக்கொண்டே செல்வதைக் கண்டு வெதும்பிய அரசர் நரசிங்க தேவர் தலைமைச் சிற்பியை அழைத்தார். சிபி சமந்தரையர் என்பவர்தான் கோவிலின் தலைமைக் கட்டுமானச் சிற்பி. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோவில் கட்டுமானப் பணிகளை முடித்துத் தரவேண்டும் என்று கூறுகிறார் அரசர்.
நரசிங்கர் கூறிய காலக்கெடு முன்பிருந்ததைவிடவும் பதினைந்து நாள்கள் முன்னதாக இருந்தது. அதற்குள் எம்மால் முடிக்க இயலாது என்பதை உறுதியாகக் கூறுகிறார் சமந்தரையர். சினமுற்ற அரசர் சமந்தரையரைப் பணியைவிட்டு நீக்குகிறார். வேற்றொரு சிற்பியை தலைமைப் பொறுப்பில் அமர்த்தி அக்கோவில் பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு கட்டளையிடுகிறார். "தவறினால் அங்குள்ள ஒவ்வொருவரின் தலையும் துண்டிக்கப்படும்," என்று கூறிச் செல்கிறார் அரசர். அக்காலக்கெடுவுக்குள் தலைகீழே நின்றாலும் கோவில் பணிகளை முடிக்க இயலாது. கோவிலைப் பற்றிய அனைத்தையும் அறிந்தவர் சமந்தரையர்தான். அவரின்றி எப்படி முடிப்பது ?
Exploring Odhisha, travel series - 36
வேறு வழியின்றி எல்லாரும் முயல்கிறார்கள். இரவும் பகலும் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அந்நேரத்தில் அங்கே பன்னிரண்டு அகவையே நிரம்பிய சிறுவன் வருகிறான். கோவில் பணிகள் முடியும்வரை எந்தச் சிற்பியும் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பது அரசகட்டளை. தான் பிறப்பதற்கு ஒரு திங்கள் முன்பாகவே தன் தாயை விட்டு நீங்கி கோவில் பணிக்கு வந்துவிட்ட தந்தையைக் காண வந்திருக்கிறான் அந்தச் சிறுவன். தந்தையைக் கண்டபோது அவர் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் திளைக்கவில்லை. கோவில் கலயம் ஏற்றுவதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்த வருத்தத்திலும் தலைபோய்விடுமே என்ற அச்சத்திலும் இருக்கிறார். தந்தையின் வருத்தத்தைப் பார்த்த சிறுவன் கோபுரச் சாரத்தில் ஏறிப் பார்க்கிறான். சிற்பியின் மகனாயிற்றே... கட்டுமானக்கலையறிவு அவன் குருதியில் கலந்திருக்கிறது. சாரத்தில் ஏறி உச்சிப் பகுதியை பார்த்ததும் கட்டுமானத்தில் நேர்ந்த பிழைகள் அவனுக்குத் தென்படுகின்றன. அவற்றைக் களையச் சொல்கிறான். பாலகன் சொன்னவாறே பிசிறுகளை நீக்கிக் குறிப்பிட்ட கெடுவுக்குள் கலயம் வைத்து கோவில் கட்டுமானப் பணிகளை முடிக்கின்றார்கள். இப்போதும் சிற்பிகள் மகிழ்ச்சியாயில்லை. வருத்தத்தில் இருக்கின்றனர். "பணிகள் அனைத்தும் நிறைவாக முடியப் போகின்றனவே... ஏன் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றீர்கள் ?" என்று கேட்கிறான். "ஒரு சிறுவனுக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியவில்லையா என்று அரசர் மேலும் சினப்பாரே..." என்னும் வருத்தத்தைச் சொல்கிறார்கள். "அவ்வளவுதானே... நான் வந்ததே அரசர்க்குத் தெரியாமல் போகட்டும்..." என்றபடி கோவில் சாரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்து உயிர்விடுகிறான். கோவில் பணிகளை முடித்துத்தர இறைப்பொருளே சிறுவனின் உருத்தாங்கி வந்து உதவிற்று என்பது அந்தக் கதை.
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக