Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 ஏப்ரல், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 25

விவேக் உச்சபட்ச வியப்போடு வானதியைப் பார்த்தான்.
"என்னது, இந்த லெட்டரை உன்கிட்ட கொடுத்தது திலீபனா?"
"ஆமா ஸார்"
"திலீபனை உனக்கு எப்படித் தெரியும்?"
வானதி லேசாய் தலை குனிந்தாள். "ஸார்.... அது....வந்து......"
"என்ன சொல்லு...."
"நானும் அவரும் கடந்த ஆறுமாச காலமாய் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிட்டிருந்தோம். சுடர்கொடி தனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு பிடிவாதமாய் இருந்ததால எங்க கல்யாணமும் தள்ளிப் போயிட்டே இருந்தது. இந்த நிமிஷம் சுடர்கொடியும் உயிரோட இல்லை. திலீபனும் உயிரோடு இல்லை. எங்க காதலும் உயிரோடு இல்லை....," கடைசி வரியை சொல்லும் பொழுது வானதியின் குரல் கம்மிப் போய் கண்களில் நீர் பளபளத்தது.
விவேக் சற்று நேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கேட்டான்.
"இப்படியொரு மிரட்டல் கடிதம் வந்தது சுடர்கொடிக்குத் தெரியுமா....?"
"தெரியும்...... ஆனா இந்த லெட்டரை சுடர்கொடி ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை. திலீபன்தான் பயந்து போனவராய் இந்த லெட்டரை என்கிட்டே கொண்டுவந்து கொடுத்து சுடர்கொடிக்கு புத்திமதி சொல்லும்படியாய் கேட்டுக்கிட்டார்."
"நீ புத்திமதி சொன்னியா?"
"இல்லை... இந்த போட்டோவையும் லெட்டரையும் திலீபன் என்கிட்டே கொடுத்துட்டு போன பின்னாடி சுடர்கொடியை நான் பார்க்கவேயில்லை. அவ யார் யாரையோ பேட்டி எடுக்கவும், பட்டி மன்றங்களில் போய் கலந்துக்கவும் வெளியே போயிட்டு இருந்தா... நான் ஒருதடவை போன்ல கான்டாக்ட் பண்ணி பேச முயற்சித்தேன். அவளோட நெம்பர் ரொம்ப நேரம் பிஸியாய் இருந்தது"
"சுடர்கொடி வளையோசை பத்திரிக்கையில் 'கோணல் கோடுகள்' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத இருந்த விஷயத்தைப் பத்தி உன்கிட்ட ஏதாவது பேசியிருந்தாளா....?"
"இல்லை ஸார்..."
"அது என்ன கோணல் கோடுகள்?"
"தெரியாது ஸார்"
"சுடர்கொடி அந்தக் கட்டுரையை எழுதக்கூடாது. மீறி எழுதினால் போபால் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் எப்படி வெட்டி கொலை செய்யப்பட்டாளோ அதே நிலைமைதான் அவளுக்கும் ஏற்படும்ன்னு சுடர்கொடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது இல்லையா?"
"ஆமா ஸார்...."
"அந்த எச்சரிக்கையையும் மீறி சுடர்கொடி அந்தக் கட்டுரையை எழுத முற்பட்டதால்தான் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெச்சு படுகொலை செய்யப்பட்டாள். அதாவது கொலையாளியோட நோக்கம் அவளைத் தீர்த்துக் கட்டுவதுதான்.... இல்லையா வானதி?"
"ஆமா.... ஸார்"
"அப்படீன்னா இந்த விவகாரத்தில் திலீபன் ஏன் கொலை செய்யப்படணும்.....?"
இப்போது வானதியின் குரலோடு அவளுடைய அழுகையும் சேர்ந்து கொண்டது. விம்மலோடு பேசினாள்.
"எ...எ... என்னோட மனசுக்குள்ளே இருக்கிற கேள்வியும் இதுதான் ஸார்.... நான் சரியா சாப்பிட்டு ஒழுங்கா தூங்கி ஒரு வாரமாச்சு. நான் திலீபனை காதலிக்கற விஷயம் என்னோட பேரண்ட்ஸ் உட்பட வெளியே யார்க்கும் தெரியாது ஸார். ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி ராத்திரி நான் மொட்டை மாடிக்குப் போய் தனியா அழுதிட்டிருந்ததை என்னோட அப்பா பார்த்திட்டு பதறிப்போய் விபரம் கேட்டார். நானும் வேற வழி இல்லாமே திலீபனுக்கு எனக்கும் இருந்த காதல் விவகாரத்தைச் சொல்ல வேண்டியதாயிடுச்சு."
"சுடர்கொடிக்கு வந்த இந்த மிரட்டல் கடிதம்?"
"நான் அதையும் மறைக்கலை.... எல்லாத்தையும் சொல்லிட்டேன்"
"அப்பா என்ன சொன்னார்?"
"என்னோட ரெண்டு கையையும் பிடிச்சுட்டு தயவு பண்ணி போலீசுக்கு போயிடாதேம்மா... அப்படி போயிட்டா அதுக்கப்பறம் எல்லா மீடியாஸ் ரிப்போர்ட்டர்ஸும் காமிராவும் மைக்குமாய் நம்ம வீட்டுக்கு முன்னாடி 24 மணி நேரமும் நின்னுட்டு இருப்பாங்க.... நாளைக்கு உனக்கொரு கல்யாணம் நடக்கும்ங்கறதை நினைச்சுப் பார்க்க முடியாத ஒரு விஷயமா போயிடும்ன்னு சொன்னார். அப்பா சொன்னது ஒருவகையில் நியாயமாய் இருந்ததால அப்போதைக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஆனா இன்னிக்கு நீங்க இந்த பத்திரிக்கை ஆபீஸுக்கு வந்து மேடத்தை என்கொயரி பண்ணிட்டிருந்ததைப் பார்த்தேன். ஏதாவது ஒரு தடயம் கிடைக்காதான்னு நீங்க தவிக்கிற தவிப்பு எனக்குப் புரிஞ்சது. சுடர்க்கொடி, திலீபன் இந்த ரெண்டு பேரோட படுகொலைகளுக்கு காரணமான நபர் எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் சட்டத்தோட பிடியிலிருந்து தப்பிச்சுட்டு போயிடக்கூடாதுன்னு நினைச்சேன். இப்ப எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டேன்!"
விவேக் மெலிதாய் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
"தேங்க்ஸ் வானதி.... நீ இப்ப என்கிட்டே கொடுத்த இந்த லெட்டர் விஷயமும் சரி, உனக்கும் திலீபனுக்கு இருந்த காதல் விவகாரமும் சரி, கொலையாளி பிடிபடுகிற வரை வெளியே தெரியாது. இந்த நேரத்துல நீ தைரியமாய் இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம். நீ என்கிட்டே ஏதாவது பேசணும்னா என்னோட பர்சனல் நெம்பருக்கு எந்த நேரத்திலும் நீ போன் பண்ணலாம்"
வானதி கண்ணீரோடு தலையாட்டினாள்.
விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.
"பாஸ்...'சுடர்கொடியும், திலீபனும் உண்மையிலேயே சிஸ்டர் பிரதர். ஆனா அந்த உறவை கொச்சைப் படுத்தத்தான் சுடர்கொடியோட வீட்டுப் படுக்கையறையில் காண்டத்தையும், கருத்தடை மாத்திரைகளையும் கொலையாளி மறைச்சு வெச்சிருக்கணும்."
"கரெக்ட் விஷ்ணு.... நான்தான் அவசரப்பட்டு அவங்க ரெண்டு பேருமே தப்பானவங்கன்னு முடிவு பண்ணிட்டேன்."
"நீங்க அப்படி முடிவு பண்ணினது 'பிரம்ம ஹத்தி' தோஷத்துக்கு சமம் பாஸ். இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. திருவிடைமருதூர் கோயிலுக்குப் போய் மகாலிங்கேஸ்வரருக்கு வில்வ இலையால அர்ச்சனை பண்ணி....."
"டேய்...!"
"ஸாரி பாஸ்.... நேத்திக்கு தந்தி டி.வி.யில் சிவல்புரி சிங்காரம் எது எது பிரம்ம ஹத்தி தோஷம்ன்னு சொல்லி அதுக்கான பரிகாரங்களை சொல்லிட்டு இருந்தார். அது நியாபகத்துக்கு வந்தது....."
விவேக் மீனலோசனியை ஏறிட்டான்.
"மேடம்.... இங்கே வந்து என்கொயரி பண்ணினதுல இந்த கேசுக்குள்ளே இருந்த சில குழப்பங்கள் விலகியிருக்கு. வானதிக்கும் திலீபனுக்கு இருந்த காதல் விவகாரம் இப்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம்....."
மீனலோசனி கலவர விழிகளோடு தலையாட்ட விவேக் அறையினின்றும் வெளிப்பட்டான்.
.........................................
மேற்கு மாம்பலம் கணபதி தெருவின் மையத்தில் இருந்தது அந்த அமராவதி பதிப்பகம்.
அதன் உரிமையாளர் ஜெகந்நாதன் முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் தோற்றம் காட்டி விவேக்கையும் விஷ்ணுவையும் ஒரு புன்னகையோடு வரவேற்றார். விவேக் தன் அடையாள அட்டையைக் காட்டியதும் சற்றே முகம் மாறினார். நெற்றி உடனே ஒரு வியர்வை கோட்டிங்கிற்கு உட்பட்டது.
"ஸ... ஸார்...."
"டென்ஷன் ஆகாதீங்க. ஒரு சின்ன விசாரணை அவ்வளவுதான் "
"உ...உ... உட்காருங்க ஸார்" நாற்காலிகளைக் காட்டி விட்டு அவரும் உட்கார்ந்தார். விஷ்ணு தன் கையில் வைத்து இருந்து புத்தகத்தை நீட்டியபடி கேட்டான்.
"இந்த ஸ்ரீ அஷ்ட வராஹி காலபைரவி மகா மந்திரம் புத்தகத்தை பதிப்பிச்சது நீங்கதானே.....?"
ஜெகந்நாதன் வாங்கிப் பார்த்துவிட்டு மெல்ல தலையாட்டினார்.
"ஆமா... ஸார்"
"இந்த புக் எப்படி ஸேல் ஆகுது?"
"அவ்வளவா மூவிங் கிடையாது ஸார்... மாசத்துக்கு ரெண்டு இல்லேன்னா மூணு புக் விக்கும்"



"போன மாசம் ஏழாம்தேதி ஒரு பெண் இந்த புத்தகத்தை வாங்கிவிட்டு போயிருக்கா. நீங்க பில் போட்டு கொடுத்து இருக்கீங்க.... இதோ அந்த பில்...!"
ஜெகந்நாதன் அந்த பில்லை வாங்கிப் பார்த்தார். அவர் முகம் மாறுவதை உன்னிப்பாய் கவனித்துவிட்டு விவேக் கேட்டான்.
"சுடர்கொடியை உங்களுக்கு தெரியும் போலிருக்கு?"
"ரெகுலர் கஸ்டமர் ஸார்... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் அந்தப் பெண் கொடூரமாய் வெட்டி கொலை செய்யப்பட்டதை டி.வி.யில் பார்த்துட்டு ஷாக் ஆயிட்டேன் ஸார்..."
"சுடர்கொடிக்கு கடவுள் பக்தி கிடையாது. ஆனா இது மாதிரியான மந்திர வாசகங்கள் உள்ள ஒரு புத்தகத்தை வாங்கியிருக்காங்க. காரணம் என்னவாய் இருக்கும்ன்னு நினைக்கறீங்க....?"
"ஸார்.... நானும் சுடர்கொடிக்கிட்டே என்னம்மா வழக்கமாய் கவிதை புத்தகம், கதை புத்தகம் வாங்குவே, இன்னிக்கு இது மாதிரியான புத்தகம் வாங்கறேன்னு கேட்டேன் ஸார். அதுக்கு அந்தப் பொண்ணு சொன்ன பதில் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது...!"
விவேக்கும் விஷ்ணுவும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக