Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 ஏப்ரல், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 36

மாடியினின்றும் எழுந்த அந்தச் சத்தத்தைக் கேட்டதும் விவேக்கின் செவித் திறன் கூர்மையாகி பார்வை மேலே போயிற்று.
நாற்காலியையோ மேஜையையோ நகர்த்திய தினுசில் ஒரு சத்தம்.
"வேலைக்காரிதான்... ரூமை சுத்தம் பண்ணிட்டிருப்பா" என்று சொன்ன மீனலோசனி மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
"சரோஜா! நீயா என்னோட ரூம்ல இருக்கே ?"
அடுத்த விநாடியே மாடி வராந்தாவின் கோடியில் இருந்து ஒரு பெண்ணின் முகம் நெற்றியில் பெரிய பொட்டோடு எட்டிப் பார்த்தது.
"அம்மா... நான் பாக்யம். சரோஜா சமையல்கட்ல இருக்கா.. ஏதாவது வேணுமாம்மா ?"
"ஒண்ணும் வேண்டாம். ரூம்ல இருக்கிற எதையும் நகர்த்திப் போடாமே சுத்தம் பண்ணு...!"
"சரிங்கம்மா"
வேலைக்காரியின் தலை மறைந்தது. விவேக்கிடம் திரும்பினாள் மீனலோசனி.
"என்னோட கணவர் இறந்த பின்னாடி இந்த வீட்ல நான் மட்டும்தான். வீட்டு வேலைகளை பண்றதுக்கும் சமையல் வேலையை கவனிக்கிறதுக்கும் ரெண்டு வேலைக்காரிகள் இருக்காங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் செக்யூரிட்டி வருவார். காலை ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டுப் போயிடுவார். சரி... இப்ப எதுக்காக இந்த விசாரணை எல்லாம்.?'
விவேக் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு நிதானமான குரலில் மீனலோசனியிடம் கேட்டான்.
"டாக்டர் ரஞ்சித்குமாரை உங்களுக்குத் தெரியுமா ?"
சட்டென்று அவளுடைய முகம் மாறியது.
"யூ மீன் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்?"
"ஆமா..."
"ஹி ஈஸ் மை ப்ரதர்."
"அவர் இப்போ எந்த ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்றார்ன்னு தெரியுமா ?"
"தெரியும். ஃபாதர் ஞானகடாட்சத்தோட நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிற ஆசீர்வாதம் என்கிற ஹாஸ்பிடலில்."
"நீங்க அந்த ஹாஸ்பிடலுக்கு போயிருக்கீங்களா?"
"போயிருக்கேன்... ஒரே ஒரு தடவை..."
"எதுக்காக போனீங்கன்னு சொல்ல முடியுமா ?"
மீனலோசனியின் முகத்தில் இப்போது அதிகப்படியான ரத்தம் கோபத்தோடு பாய்ந்தது. ஆத்திரத்தில் வார்த்தைகள் தெறித்தது.
"மிஸ்டர் விவேக் ஐ வில் நாட் டாலரேட் இட் எனி மோர். ஏதோ ஒரு குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி என்னை விசாரிக்கறீங்க? இப்ப எதுக்காக திடீர்ன்னு என் வீட்டுக்கு வந்து இப்படியெல்லாம் விசாரிக்கறீங்க..? அதிலும் என்னோட தம்பி ரஞ்சித்குமாரைப் பற்றின விசாரணை எதுக்காக?"
விவேக் மெலிதாய் புன்னகைத்தான்.
"காரணம் இருக்கு மேடம்"
"என்ன காரணம்?"
"சுடர்கொடியின் ஃப்ரண்ட் ஜெபமாலையை ஒரு ஹோட்டல் பேரர் விஷ குளிர்பானம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்ததும், ஆனா அதிர்ஷ்டவசமாய் ஜெபமாலை உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லாமல் சுய உணர்வற்ற நிலைக்கு போய் இப்ப ஹாஸ்பிடலில் இருக்கிற விஷயமும் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்."
"நல்லாவே தெரியும்"
"ஆனா ஜெபமாலை சுய உணர்வு அற்ற நிலைக்கு போறதுக்கு முன்பு என்கிட்டே மூணு வார்த்தைகளைத் திணறித் திணறி சொன்னா. அந்த மூணு வார்த்தைகள் எது எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?"
"தெரியாது"
"அந்த மூணு வார்த்தைகள் இதுதான் கூர்நோக்கு, ஜே.சி.எச், ஆசீர்வாதம்.. சுடர்கொடியின் மரணத்துக்கும் ஜெபமாலை சொன்ன மூணு வார்த்தைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கணும் என்கிற எண்ணத்தில் நானும் விஷ்ணுவும் விசாரணையை ஆரம்பிச்சோம். இப்போ விசாரணையோட இறுதிக்கு வந்துட்டோம்.... அதாவது உண்மையைக் கண்டுபிடிச்சுட்டோம்."
"என்ன உண்மை?"
"அதாவது ஜூவைனல் கேர் ஹோம் என்கிற கூர்நோக்கு இல்லத்திலிருந்து இளம் குற்றவாளிகளைத் தப்பிக்க வெச்சு அவங்களை கடத்துகிற ஒரு கும்பல் மூளைச் சலவை பண்ணி பல்வேறு விதமான சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிற உண்மைதான்."
"நீங்க சொல்றது எனக்குப் புரியலை...." என்று மீனலோசனி தன்னுடைய முக வியர்வையை சேலைத் தலைப்பில் ஒற்றிக் கொண்டே சொல்ல விவேக் விஷ்ணுவைப் பார்த்தான்.
"விஷ்ணு....! இது வரைக்கும் நடந்த எல்லா விபரங்களையும் மேடத்துக்கு சொல்லு....!"
விஷ்ணு தலையசைத்து விட்டு மீனலோசனியை ஏறிட்டு "மேடம்" என்று ஆரம்பித்து காலையில் இருந்து போன நிமிஷம் வரைக்கும் நடந்த எல்லா சம்பவங்களையும் நிதானமான குரலில் கோர்வையாய் சொல்லி முடித்தான்.
மீனலோசனி உன்னிப்பாய் செவிமடுத்துவிட்டு மெளனமானாள். விவேக் அவளுடைய முகபாவத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டான்.
"என்ன மேடம்.... அமைதியாயிட்டீங்க ?"
மீனலோசனி அனலாய் பெருமூச்சொன்றை விட்டாள்.
"நான் சந்தேகப்பட்டது சரிதான்."
"என்ன சந்தேகப்பட்டீங்க?"
"என்னோட தம்பி ரஞ்சித்குமார் கடந்த ஒரு வருஷ காலமாகவே இயல்பாய் இல்லை. வாரத்துக்கு ரெண்டு தடவையாவது என்னைப் பார்க்க வருவான். ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சினிமா, அரசியல், பத்திரிக்கைன்னு கலகலப்பாய் பேசிட்டு போவான். கொஞ்ச நாளாய் அவன் சரி இல்லை. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வந்து ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போறதோடு சரி, அந்த பத்து நிமிஷத்துக்குள்ளேயும் ஒரு நாலைஞ்சு போன் கால்ஸ் வந்துடும்"
"போன்ல யார் கூட பேசுவார்?"
"நான் நோட் பண்ணினது இல்லை.... அப்படியே போன் வந்தாலும் வெளியே எந்திரிச்சு போய் பேசிட்டு வருவான். பேசிட்டு வந்ததும் அவனுடைய முகம் இறுக்கத்துக்கு உட்பட்டிருக்கும். ரஞ்சித்குமார் இயல்பாய் இல்லை. அதுதவிர அடிக்கடி மும்பை, டெல்லி, புனேன்னு ஃப்ளைட்ல போயிட்டு வருவான். காரணம் கேட்டா மெடிக்கல் செமினார், டாக்டர்ஸ் மீட் ன்னு ஏதாவது காரணம் சொல்லுவான். அப்போ அவன் அப்படி நடந்துகிட்டதுக்கும், நீங்க இப்போ சொல்கிற விஷயங்களுக்கும் ஏதோ ஒரு 'டை-அப்' இருக்குன்னு நினைக்கிறேன்."
"பார்த்தீங்களா மேடம்.... உங்களுக்கே இப்போ ஒரு சந்தேகம் உங்க ப்ரதர் மேல ஏற்பட்டிருச்சு..."
"நோ.... நோ... மிஸ்டர் விவேக்... என்னோட தம்பி ரொம்பவும் நல்ல டைப்."
"மேடம்... நல்லவங்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாய் கெட்டவங்களாய் உருமாற வாய்ப்பு இருக்கு. ரஞ்சித்குமார் மேல எந்த ஒரு தப்பும் இல்லைன்னா அவர் ஏன் தலைமறைவாய் இருக்கணும்."
இட்ஸ் ஓ.கே.... இப்ப நான் என்ன பண்ணனும்..?"
"உங்க ப்ரதர் ரஞ்சித்குமார் பற்றி நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லணும்"
"ம்... கேளுங்க..."
"ரஞ்சித்குமார் கல்யாணம் பண்ணீக்கலைன்னு ஃபாதர் ஞானகடாட்சம் சொன்னார். அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொல்ல முடியுமா..?"
"காலேஜ் டேஸ்ல அவன் ஒரு பொண்ணை சின்சியராய் லவ் பண்ணியிருக்கான். ஆனா அந்தப் பெண் ஒரு கோடீஸ்வர இளைஞனை கல்யாணம் பண்ணிகிட்டு அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிட்டா. இவனால அவளை மறக்க முடியலை. வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கவும் விருப்பப்படலை... பணம்தானே அவளுக்கு பெரிசா போச்சு. நானும் கோடி கோடியாய் சம்பாதிச்சு நாம் யார்ங்கிறதை அவளுக்கு காட்டப் போறேன்னு கொஞ்சநாள் பொருமிட்டிருந்தான்.."
"சரி... ரஞ்சித்குமாருக்கு சுடர்கொடியைத் தெரியுமா?"
"ம்... தெரியும்.....சுடர்கொடி வளையோசையில் எழுதிய சில கட்டுரைகளைப் படிச்சுப் பாராட்டியிருக்கான்."
"அவர்க்கு நண்பர்கள் யாராவது?"
"அவனோட ஃப்ரண்ட்ஸ் யார் யார்ன்னு எனக்குத் தெரியாது... ஆனா போன மாசம் பத்தாம் தேதி ரஞ்சித் என்னைப் பார்க்க வந்து இருந்தப்ப கையில் ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் இருந்தது. அது ஒரு ஜுவல்லரி பாக்ஸ். அந்த பாக்ஸை எனக்குத் திறந்து காட்டினான். உள்ளே ஒரு வைர நெக்லஸ் டாலடித்தது. யார்க்கு இதை ப்ரசண்ட் பண்ணப் போறன்னு கேட்டேன்."
விவேக்கும் விஷ்ணுவும் நேர்கோடுகளாய் மாறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
"பேர் சொன்னாரா?"
"யார் பேரையோ சொல்லி அவங்க வீட்டு கல்யாணம்ன்னு சொன்னான். பேர் ஞாபகம் இல்லை. வந்த தேதி மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. காரணம் அன்னிக்கு எனக்கு பிறந்தநாள். எனக்குத்தான் அவன் ஏதாவது 'கிஃப்ட்' வாங்கிட்டு வந்து இருக்கானோன்னு மொதல்ல நினைச்சேன்."
"அவர் சொன்ன நண்பரோட பேரைக் கொஞ்சம் 'ரீமெம்பர் பண்ணிப் பாருங்க மேடம்.... யாரோட கல்யாணம்ன்னு கண்டிப்பா சொல்லியிருப்பார்."
சில விநாடிகள் மீனலோசனி யோசித்துவிட்டு தீர்க்கமாய் தலையாட்டினாள்.
"மிஸ்டர் விவேக்... எனக்கு சுத்தமாய் ஞாபகம் இல்லை."
"இட்ஸ்.... ஓகே.... கல்யாணம் எங்கே... எந்த மண்டபம்ன்னு சொன்னாரா?"
"மண்டபம் பேர்...?' மீனலோசனி யோசித்து விட்டு தலையாட்டினாள். "ஞாபகம் இல்லை.... ஏரியா ஞாபகம் இருக்கு"
"எந்த ஏரியா?"
"தரமணி"
"அது போதும் மேடம்..."
விவேக் எழுந்து கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக