மீனலோசனியின் வீட்டை விட்டு வெளியே வந்த விவேக்கும் விஷ்ணுவும் வேக நடை போட்டு கார்க்குள் நுழைந்தார்கள்.
விவேக் ட்ரைவிங் சீட்டை ஆக்ரமிக்க விஷ்ணு பக்கத்தில் உட்கார்ந்தான். கார் நகர்ந்ததும் பேச ஆரம்பித்தான்.
"பாஸ்"
"என்ன?"
"அந்த மீனலோசனியை நீங்க ரொம்பவும் சாஃப்ட்டா என்கொயர் பண்ணிட்டீங்க... இன்னும் கொஞ்சம் நெருக்கி அவங்களை கார்னர் பண்ணியிருந்தா மேலும் சில உண்மைகளை வாங்கியிருக்கலாம். அந்த அம்மாகிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்கு."
"இல்ல விஷ்ணு... அவங்க தப்பானவங்க இல்லை. மீனலோசனி பேசின வார்த்தைகளில் ஒன்று கூட பொய் கிடையாது."
"சரி .... டாக்டர் ரஞ்சித்குமார் கடந்த மாதம் பத்தாம் தேதி தரமணியில் இருக்கிற ஏதோ ஒரு கல்யாணத்துக்குப் போய் வைர நெக்லஸை ப்ரசண்ட் பண்ணியிருக்கார். அந்த நபர் யார்ங்கிறதை எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"
விவேக் காரின் வேகத்தை சிக்னலுக்காகக் குறைத்துக் கொண்டே கேட்டான்.
"நீயே பதில் சொல்லு....!"
"மொதல்ல அந்த பீட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம். இன்ஸ்பெக்டரை மீட் பண்றோம். தரமணி ஏரியாவில் எத்தனை கல்யாண மண்டபங்கள் இருக்குன்னு லிஸ்ட் எடுக்கிறோம். அப்புறம் போன மாசம் 10-ம் தேதி எந்தெந்த மண்டபங்களில் யார் யாரோட கல்யாணம் நடந்ததுன்னு விசாரணை பண்ணி அதுல யார் ரஞ்சித்குமார்க்கு ஃப்ரண்ட்ன்னு கண்டுபிடிச்சு....."
விவேக் குறுக்கிட்டான்.
"விஷ்ணு இவ்வளவு சாவகாசமாய் நாம விசாரணை பண்ணிட்டிருந்தா அந்த அப்பாவி ஜெயவேலுவை என்கவுன்டர் பண்றதிலிருந்து காப்பாத்த முடியாது."
"அப்படீன்னா வேற என்ன பண்ணப் போறோம் பாஸ்?"
"இப்ப நாம நேரடியாய் டாக்டர் ரஞ்சித்குமார் யாருடைய வீட்டு கல்யாணத்துக்குப் போனாரோ அவரையே பார்த்துடப் போறோம்."
"அவர் யார்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும் பாஸ் ?"
"நானும் கோகுல்நாத்தும் அந்த கல்யாணத்துக்குப் போயிருந்தோம்."
"எ...எ.... என்ன பாஸ் சொல்றீங்க?"
"விஷ்ணு ... போன மாசம் என்ன மாசம்?"
"ஆகஸ்ட்"
"ஆகஸ்ட் 10.ம் தேதின்னா தமிழ்ல என்ன மாசம் வரும்?"
"ஆடி மாசம்"
"யாராவது ஆடி மாசத்துல கல்யாணம் பண்ணுவாங்களா?"
"இந்துக்கள் பண்ண மாட்டாங்க... பாஸ்..."
"கரெக்ட்.... போன மாசம் அதாவது ஆடி மாசத்துல தரமணியில் இருக்கிற 'லிட்டில் ப்ளவர்' கல்யாண மண்டபத்தில் ஒரு கல்யாணம் வெகு விமரிசையாய் நடந்தது. அந்தக் கல்யாணத்துக்கான அழைப்பு எனக்கும் கோகுல்நாத்துக்கும் வந்து இருந்தது. நானும் அவரும் போனோம்.'
"பாஸ்... யூ மீன் அது கிறிஸ்தவ நண்பர் வீட்டு கல்யாணம்?"
"அதே அதே....!"
"யார் பாஸ் அது ?"
"அவர் வீட்டுக்குத்தான் போயிட்டிருக்கோம்"
"என்ன பாஸ்.... ஏதோ மாமனார் வீட்டுக்குப் போற மாதிரி சொல்றீங்க?"
"அந்த மாமனார் யார்ன்னு இன்னும் அரைமணி நேரத்துல உனக்குத் தெரியும்.."
"சொல்லு..."
"ஆக்டோபஸ் க்கு பத்து கை இருக்குன்னு சொல்லுவாங்க. அது மாதிரி...."
"அது மாதிரி?"
"உங்களுக்கு பத்து தலை. பாராட்டி பாராட்டியே டயர்ட் ஆயிட்டேன் பாஸ்"
'சிக்னலில் பச்சை கிடைத்ததும் யார் பறந்தது.'
கார் வேளச்சேரியைத் தாண்டி தில்லை கங்கா நகர்க்குள் மேஃப்ளவர் மரங்கள் அடர்ந்து பகுதிக்குள், நிசப்தமான தெருக்களில் நிதானமான வேகத்தில் பயணித்து, ஒரு குட்டி பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.
"பாஸ்... இது யார் வீடுன்னு தெரியலையே ....?"
விஷ்ணு முனகிக் கொண்டு விவேக்கை பின் தொடர்ந்து காரினின்றும் இறங்கினான்.
விவேக் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போய் காம்பெளண்ட் கேட்டின் மீது கையை வைத்து மெல்லத் தள்ளினான். அது சத்தம் இல்லாமல் உள்ளே போயிற்று. போர்டிகோவில் கார் ஒன்று 'கான்வாஸ்' போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்தது.
விவேக் வாசற்படிகளில் ஏறி அழைப்பு மணியின் பொத்தானின் மேல் கையை வைத்தான். வீட்டுக்குள் ஒரு பத்து விநாடி நேரத்துக்கு மியூஸிக் நோட் கேட்டு அடங்கியது.
இருவரும் மெளனமாய் காத்திருக்க கதவின் தாழ்ப்பாள் விலகியது.
தியோடர் நின்றிருந்தார்.
விவேக் மெலிதாய் புன்னகைத்து, "ஹலோ ஸார்," என்றான்.
தியோடர் சற்றே அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு, "விவேக்.... நீங்களா.... வாட்.... ஏ...... சர்ப்ரைஸ்.... உள்ளே வாங்க...," என்றார்.
"ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!"
"நத்திங்... உள்ளே வாங்க"
விவேக், விஷ்ணு இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். தியோடர் கேட்டார். "என்ன விவேக்.... சுடர் கொடியோட கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிஞ்சதா..?"
"குற்றவாளிக்குப் பக்கத்திலேயே வந்துட்டோம் ஸார்... பட் ஒரே ஒரு சந்தேகம்."
தியோடர் முகம் மாறினார்.
"வாட் டு யூ மீன்?"
"ரெண்டு பேர் மேல சந்தேகப்படறோம் ஸார். ஒருத்தர் நீங்க....! இன்னொருத்தர் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார்... இதுல யார்ன்னு சின்னதாய் ஒரு குழப்பம். அதைத் தெளிவுப்படுத்திக்கத்தான்...."
விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தியோடர் சட்டென்று பின்னுக்கு நகர்ந்து சுவரோட மேஜையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எடுக்க முயல....
விவேக் அதை ஒரு மைக்ரோ விநாடி நேரத்துக்குள் மோப்பம் பிடித்து இருந்த இடத்திலிருந்தே எம்பிக் குதித்து, ஒரு நேர்கோடாய் மாறி தியோடரை நோக்கி அந்தரத்தில் பயணித்து ஷு அணிந்த தனது வலது காலால் அவருடைய மார்பை மூர்க்கமாய் உதைத்தான்.
தியோடர் ஒரு துணி மூட்டையாய் மாறி எகிறிப் போய் ஃபிரிட்ஜ்க்குப் பக்கத்தில் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு விழுந்தார்.
"விஷ்ணு"
"பாஸ்"
"அந்த மேஜையோட இழுப்பறையில் என்ன இருக்குன்னு பாரு...?"
விவேக் பார்த்துவிட்டு மிரட்சியோடு சொன்னான்.
"பிஸ்டல் பாஸ் ! அதுவும் டேண்டம் மாடல்"
"அதை கையில் எடுத்துக்கோ.... தியோடர் ஸார்கிட்டே நான் இப்போ சின்னதாய் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப் போறேன். அவர் மறுபடியும் இப்படி ஏதாவது வில்லத்தனமாய் நடக்க முயற்சி செஞ்சா என்னோட உத்தரவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காதே. தயவு தாட்சண்யம் பார்க்காமே சுட்டுத் தள்ளிடு. நான் இப்போ என் ரிவால்வரோடு அவர்க்குப் பக்கத்துல போறேன்....!'
"அரசு கெஜட்ல போடாத குறையாய் ஒரு உத்தரவைப் போட்டுட்டீங்க பாஸ்.... இனிமேல் தியோடர் ஸாரோட தலைவிதி என்னோட கையில்...!"
விஷ்ணு அந்த டேண்டம் பிஸ்டலை கையில் எடுத்துக் கொள்ள், விவேக் தன் இடுப்பில் மறைவில் குடியிருந்த அந்த ஸ்பானிஷ் மேட் சின்னஞ்சிறு பிஸ்டலோடு தியோடரை நோக்கி நடந்து போய் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருந்த அவருடைய நெற்றிப் பொட்டில் வைத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக