கலிங்கம் காண்போம் - பகுதி 43 - பரவசமூட்டும் பயணத்தொடர்
கொனாரக் கோவிலின் எதிரே செல்லும் நீண்ட கடைத்தெருவில் நடந்தேன். திரும்பிப் பார்த்தபொழுது கறுப்புக் கலையணியாக அந்தக்கோவில் தெரிந்தது. நான் பிறந்து நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் இங்கே வந்து சேர முடிந்திருக்கிறது. பின்னொருநாளில் இவ்வாறு ஒருவன் வந்தடைவான் என்றே பன்னூற்றாண்டுகள் முன்பே தோன்றித் திகழ்ந்திருக்கிறது அக்கோவில். இஞ்ஞாலத்தில் தோன்றிய ஒவ்வொன்றுக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் வழியால்தான் ஒன்றும் ஒன்றும் பார்த்துக்கொள்கின்றன. ஈவதைப் பெற்றுக்கொள்கின்றன.
திரும்பி வந்து முதுகுப் பைகளை ஒப்படைத்துச் சென்ற கடைக்காரரை அணுகினோம். அன்னாரிடம் தந்து சென்ற பைகளை எடுத்துக்கொண்டு அதற்கீடான சிறு பணம் தர முனைந்தோம். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். எவ்வளவோ முயன்றும் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதற்கீடாக அவர் கடையிலேயே ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ள முன்வந்தும் அவர் அப்படியெல்லாம் வாங்கத் தேவையில்லை என்றார். எதிரிலே ஒருவர் எதையும் வாங்க மறுக்கிறார். இவற்றுக்கிடையில் பின்னாடியே நச்சரித்தபடியே வந்து நின்ற கூடை வணிகர் எங்கள் உரையாடலைப் பார்த்தபடி திகைத்து நின்றார். “லோக பரோபாகார்யம்” என்று கடைக்காரரை வாழ்த்தினார். ஒடிய மாநிலத்தின் பெயரைத் தங்கத்தில் எழுதித் தாங்கிப் பிடித்தவர்போல் அவர் எனக்குத் தென்பட்டார். இதற்கும் மேல் அக்கடைக்காரரை வற்புறுத்தல் தகாதென்று தோன்றியதால் அவரை வணங்கி விடைபெற்றோம்.
கடற்கரை ஊர்களில் உலவ நேர்ந்தால் அங்கே தவறாமல் செய்ய வேண்டிய செயல் இளநீர் குடித்தலாம். தென்னை மரங்கள் நீர்க்கரையில் வளர்பவை. ஆறோ கடலோ அருகிலிருந்தால் அம்மரங்கள் செழித்துயர்ந்து வளரும். அந்நிலத்தின் முழுவளத்தை உறிஞ்சியெடுத்து உள்வாங்கி இளநீரில் தொகுத்துத் தரும். இளநீரில் கலந்திருப்பது அம்மண்ணின் சுவையேயன்றி வேறில்லை.
நான் இதுவரை குடித்த இளநீரிலேயே திருவனந்தபுரத்துக் கோவளக் கடற்கரையில் குடித்த இளநீரைத்தான் உயர்வினும் உயர்வு என்பேன். நீரின் சுவையில் தித்திப்பும் நறுமணமும் திகட்டுமளவுக்குக் கலந்திருந்தன. ஓர் இளநீரோடு என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மேலும் இரண்டு இளநீர்களைச் சீவச் சொல்லிக் குடித்தேன்.
கொனாரக் கடற்கரை மண்ணின் நீர்ச்சுவையையும் அறிய வேண்டுமே. கோவில் தெரு முடிந்ததும் இருந்த முச்சந்தியில் வரிசை வரிசையாக இளநீர்க் கடைகள் தென்பட்டன. அவற்றில் ஒன்றை நாடி இளநீரைச் சீவச் சொன்னேன். நன்கு பருத்திருந்த அக்காய்கள் நீர்க்கோளால் ததும்பின. மூச்சு வாங்குமளவுக்கு ஒன்றைக் குடித்ததும் வயிறு நிறைந்துவிட்டது. நீரின் சுவையும் அருமை. கோவளத்து இளநீர்ச் சுவையைத் தாண்டவில்லை என்றாலும் பழுதில்லை. நீர்முகந்து ததும்பிய வயிற்றோடு கொனாரக் பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம்.
பேருந்து நிலையம் என்றால் நம்மூர்ப் பேருந்து நிலையங்களைப் போல ஊர்களுக்கு ஒன்றாய் வகிட்டுப்பள்ளத்தோடு முறையாய்க் கட்டப்பட்ட தனியிடமன்று. செம்மண் திடலில் நம்மூர்ச் சிற்றுந்துகளைப் போன்ற தனியார் உந்துகள் தமக்குப் பிடித்த கோணங்களில் நின்றுகொண்டிருக்கின்றன. பூரிக்கும் புவனேசுவரத்துக்குமான பேருந்துகள் சில நிற்கின்றன. இரண்டில் ஒன்றைத் தேர்ந்து ஏறிக்கொள்ள வேண்டும். நிலையத்திற்கே சென்று ஏறினால் அமர்வதற்கு இடம் கிடைக்கும். நிலையம் செல்ல மாட்டீர்கள் என்றால் பேருந்தில் எள்விழ இடமிருக்காது. நின்றபடி நசுங்கிக்கொண்டு செல்ல வேண்டும்.
பேருந்து நிலையத்தருகே முளைகட்டிய தானியங்களால் ஆன சிற்றுண்டியை விற்றார்கள். கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயிறு, வெங்காயம், வெள்ளரி, மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றின் கூட்டு. அள்ளித் தின்பதற்குப் பச்சைப் பனையோலைத் துணுக்கு. ஒன்றை வாங்கியுண்டேன். அமுதச்சுவை அஃது. இளநீரும் தானியச் சிற்றுணவும் வயிற்றுப் பசியைப் போக்கடித்தன. கொனாரக்கின் என்னொருநாளின் பொன்மாலை இவ்வாறாகக் கழிந்தது.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக