விவேக் நிதானமான குரலில் பேச்சைத் தொடர்ந்தான்.
"ஸாரி.... ஸார்.... சட்டத்துக்கு முன்னாடி எப்படி எல்லாரும் சமமோ அதே
மாதிரி என்னோட பிஸ்டலுக்கு முன்னாடியும் எல்லோரும் சமம்.....
இப்ப நேரா மீனலோசனி வீட்டிலிருந்துதான் வர்றோம். அவங்க கொடுத்த
ஆனா அதுக்கு முன்னாடியே உங்க மேல எனக்கு ஒரு சின்ன சந்தேகம்
வந்தது. இந்த கேஸ் ஆரம்பிச்ச நாளிலிருந்து நீங்க நாலைஞ்சு தடவை
போன் பண்ணி எனக்கு ஏதோ உதவி பண்ற மாதிரி பேசினீங்க.
அந்த ஜெயவேல் மேல் கரிசனம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டீங்க.
அவனை என்கெளண்டர் பண்ண சதி நடக்கிறதாய் சொன்னீங்க.
இது எல்லாமே எனக்கு கொஞ்சம் அதிகப்படியாய் தெரிஞ்சுது... உடனே
நான் ரிடையர்ட் போலீஸ் ஆபீஸர் கோகுல்நாத்துக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.
அனுப்பி உங்களை கண்காணிக்கச் சொன்னேன். உங்க செல்போன்
பேச்சுக்களை சைபர் க்ரைம் மூலமாய் மானிட்டரிங் பண்ணச்
சொன்னேன்."
தியோடர் வியர்த்து வழிந்து கொண்டே விவேக்கைப் பார்க்க அவன்
பிஸ்டலை அழுத்திப் பிடித்தபடி பேச்சைத் தொடர்ந்தான். "உங்க
செல்போனை மானிட்டர் பண்ணிப் பார்த்த போது நீங்க கடந்த ரெண்டு
நாட்களில் மட்டும் எட்டுத் தடவை மும்பைக்கும் டெல்லிக்கும்
பேசியிருக்கீங்க. அந்த செல்போன் நம்பர்களுக்கு உரிமையானவர்கள்
எல்லாம் பெரிய பணக்காரர்கள். அந்த பணக்காரர்களிடம் நீங்க
ஹிந்தியிலும், மராத்தியிலும் பேசியிருக்கீங்க. அந்த பேச்சை யாரும்
முழுமையாய் புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு சங்கேத வார்த்தைகள்.
உங்ககிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்கு. அந்த தப்புக்கும் சுடர்கொடி,
திலீபன் மரணங்களுக்கும் பார்வைக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு
இருக்குங்கிறது மட்டும் எங்களுக்கு புரிஞ்சது. ஆனா அதுக்கான
வெளிப்படை ஆதாரங்கள் எதுவுமே கோகுல்நாத்துக்குக் கிடைக்கவில்லை.
ஆனாம் நானும் விஷ்ணுவும் ஃபாதர் ஞானகடாட்சத்தைப் பார்க்கப்
போனபோதுதான் வளையோசை பத்திரிக்கை ஆசிரியர் மீனலோசனியின்
தம்பி ரஞ்சித்குமார் ஒரு சைக்யாட்ரிஸ்ட் என்கிற விஷயமும், அவர்
கடந்த ஒருவார காலமாய் தலைமறைவாய் இருக்கிற விஷயம்
தெரிஞ்சுது." தியோடர் இப்போது உச்சபட்ச வியர்வையில் இருந்தார்.
முகம் நிமிர திராணியில்லாமல் கவிழ்ந்தே இருந்தது. விவேக் சில
விநாடிகள் அமைதியாய் இருந்து விட்டு பேச்சைத் தொடர்ந்தான்.
"மீனலோசனியிடம் ரஞ்சித்குமாரைப் பற்றி விசாரிக்கப் போகத்தான் ஒரு
முக்கியமான விஷயம் வெளியே வந்தது. போன ஆகஸ்ட் மாசம் 10-ஆம்
தேதி தரமணியில் இருக்கிற 'லிட்டில் ப்ளவர்' மண்டபத்தில் உங்க
மகளின் கல்யாண வரவேற்பு நடந்தது. அந்த ஆடி மாசத்துல நடந்த ஒரே
ஒரு கல்யாண வரவேற்பு வைபவம் உங்களோடது மட்டும்தான். அந்த
கல்யாணத்துக்கு எனக்கும் கோகுல்நாத்துக்கும் நீங்க அழைப்பிதழ்
அனுப்பியிருந்தீங்க. ஸோ நானும் அவரும் அந்த ரிசப்ஷனுக்கு வந்து
இருந்தோம். நீங்களும் எங்களைப் பார்த்ததும் ரொம்பவும்
சந்தோஷப்பட்டீங்க.... ஆனா நான் ஆச்சர்யப்பட்டேன்." தியோடரின் முகம்
குழப்பத்தோடு நிமிர விவேக் புன்முறுவலோடு பேச ஆரம்பித்தான்.
"எதுக்காக அந்த ஆச்சர்யம்ன்னு கேட்கறீங்களா? கல்யாண வரவேற்புக்கு
வடநாட்டில் இருந்து சில பணக்காரர்களும், தொழிலதிபர்களும்
வந்திருந்ததும், நீங்க அவங்களை விழுந்து விழுந்து உபசரிச்சதும்தான்.
அந்த சமயத்துல எனக்கு அது ஆச்சர்யமாய் இருந்தாலும் எந்த ஒரு
சந்தேகமும் உங்க பேர்ல வரலை ஸார். காரணம் நீங்க டி.ஜி.பி.யின்
பிரதான செயலாளர் அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கிறது நியாயம்தான்
நினைச்சேன். ஆனா இப்பத்தான் தெரியுது. அது எவ்வளவு பெரிய
விவகாரம்ன்னு."
தியோடர் ஈனஸ்வரக் குரலில் குறுக்கிட்டார். "விவேக்... நீங்க நினைக்கிற
மாதிரி இந்த விவகாரத்துக்கு நான் முழுகாரணம் இல்லை. நான் ஒரு
அம்பு மட்டுமே.." "சரி எய்த நபர் யாரு ?" "அதுவும் எனக்குத் தெரியாது.
ஆனா எய்த நபர்க்கும் எனக்கும் இடையே மீடியேட்டர்களை எனக்குத்
தெரியும்." "மீடியேட்டர்கள்ன்னா போன மாசம் நடந்த உங்க மகளுடைய
திருமண வரவேற்பில் கலந்து கிட்ட அந்த வடநாட்டு
பணக்காரர்கள்தானே....?" "ஆமா...!" "சரி.... இது எதுமாதிரியான
விவகாரம்ன்னு சொல்ல முடியுமா....?" தியோடர் சில விநாடிகள்
மெளனமாய் இருந்து விட்டு கம்மிப் போன குரலில் பேச ஆரம்பித்தார்.
"சிறு வயதிலேயே கொலை குற்றத்தைப் பண்ணிட்டு கூர்நோக்கு இல்லம்
என்கிற சீர்திருத்தப் பள்ளிகளுக்கு வரும் சிறுவர்களை அந்த
இல்லத்திலிருந்து தப்பிக்க வெச்சு, கடத்திக் கொண்டு போய் ஒரு
இடத்துல தங்க வெச்சு ஆறு மாத காலம் ஒரு விதமான மெடிக்கல்
ட்ரீட்மெண்ட் குடுத்து மூளைச் சலவை செய்வது முதல் கட்டம்." "சரி,
ரெண்டாவது கட்டம்?" "அந்த சிறுவர்களை வட மாநிலத்தில் முக்கியமான
நகரங்களுக்கு அனுப்பி வெச்சு, அங்கே இருக்கிற கூலிப்படை ஆட்களிடம்
சேர்ப்பிக்கணும்." "மூணாவது கட்டம் என்னான்னு நான் சொல்றேன். அந்த
கூலிப்படை ஆட்களைத் தொடர்பு கொள்கிற பெரிய பெரிய பணக்காரர்கள்
தங்களுக்கு வேண்டாத பணக்காரர்களின் வாரிசுகளை மூளைச்சலவை
செய்யப்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்தி கொலை செய்வதும், அதுக்குக்
கூலியாய் பெரிய தொகையை வாங்கிக் கொள்வதும்தான்.... இல்லையா
ஸார்?" விஷ்ணு குறுக்கிட்டு கேட்டான். "இந்த விவாகரத்துல உங்களுக்கு
பேமெண்ட் எப்படி தியோடர் ஸார்?" "அது.... அது.... வந்து...." "தொப்பல்
தொப்பலாய் நனைஞ்சுட்டீங்க ஸார். இனிமே எந்த ஒரு விஷயத்தையும்
மறைக்க முயற்சி பண்ணாதீங்க. அப்புறம் நிறைய பொய் பேச வேண்டி
வரும்." தியோடர் அனலாய் பெருமூச்சொன்றை விட்டார். "இனிமேல்
பொய் பேசி என்ன பிரயோஜனம். எல்லா உண்மைகளையும் நான்
சொல்லிடறேன்." "ம்.... சொல்லுங்க.." "ஒரு பையனுக்கு ஒரு கோடி
ரூபாய் கொடுத்தாங்க. அதுல 50 லட்சம் எனக்கும் மீதி அம்பது லட்சம்
சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார்க்கும்....!" விவேக் கையில் இருந்த
பிஸ்டல் தியோடரின் நெற்றிப் பொட்டை பலமாய் அழுத்தியது. "சரி.....
இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். சுடர்கொடியை வேளச்சேரி
ரயில்வே ஸ்டேஷனிலும், அவளுடைய அண்ணன் திலீபனை வீட்டில்
தூக்கில் தொங்க வைத்தும் கொலை செய்தது யாரு....?"
"மும்பையிலிருந்து வந்த 'மானேஷ்' என்கிற கூலிப்படை ஆள்.
கண்ணிமைக்கிற நேரத்துல வெட்டிட்டு அடுத்த சில விநாடிகளுக்குள்ளே
அந்த இடத்தை விட்டு காணாமே போயிடறதுல கெட்டிக்காரன்.
கூர்நோக்கு இல்லத்தில் நடைபெறுகிற இந்த கடத்தல் விவகாரத்தையும்,
மூளைச் சலவை பிரச்சனையையும் மையமாய் வைத்து சுடர்கொடி
'கோணல் கோடுகள்' என்கிற தலைப்பில் வளையோசை பத்திரிக்கையில்
ஒரு கட்டுரை எழுதப் போவதாய் எனக்குத் தகவல் கிடைத்தது." "இந்தத்
தகவலை உங்களுக்கு கொடுத்தது யாரு?" "டாக்டர் ரஞ்சித்குமார்"
"சரி....அப்புறம் ?" "நான் உடனே இந்தத் தகவலை மும்பையில் இருக்கிற
என்னோட மீடியேட்டர்களுக்கு அனுப்பினேன். அவங்க உடனே சுடர்
கொடியைத் தீர்த்துக்கட்ட மானேஷை சென்னைக்கு அனுப்பிட்டாங்க....!"
"கட்டுரை எழுதவிருந்த சுடர்கொடியைக் கொல்றதுதான் அந்த
மீடியேட்டர்களின் நோக்கம்?" "ஆமா..." "சுடர்கொடியோட அண்ணன் மேல்
என்ன கோபம்?" "ஒரு கோபமும் இல்லை. சுடர்கொடியை மட்டும்
கொலை பண்ணினால் போலீஸாரோட விசாரணைக் கோணம் ஒரே
திசையில்தான் பயணிக்கும். அப்படி பயணம் செஞ்சா கொலைக்கான
உண்மையான காரணம் பிடிபட வாய்ப்பு அதிகமாய் இருந்தது. அந்த
கோணத்தை டைவர்ட் பண்ணத்தான் திலீபனையும் அந்த மானேஷ்
முடிச்சான். உண்மையிலேயே அண்ணன் தங்கையாய் இருந்த சுடர்கொடி
திலீபன் உறவை கொச்சைப்படுத்தத்தான் சுடர்கொடியோட வீட்டின்
படுக்கையறையில் கருத்தடை சாதனங்களை மானேஷ் மறைச்சு
வெச்சான்." "ஆனா நீங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை. அதுக்கு
மாறாய் போலீஸ் விசாரணை இருந்தது. காரணம் ஜெபமாலை."
"ஜெபமாலை உங்களுக்கு உதவ வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாய்
இருந்தது. அவளையும் வெட்டி சாய்க்க மானேஷ் முயற்சி பண்ணினான்.
ஆனா அதுக்குள்ளே லாட்ஜ் பேரர் கிருஷ்ணன் ஜெபமாலை மேல் இருந்த
வேற ஒரு கோபம் காரணமாய் அவளுக்கு குளிர்பானத்துல விஷத்தைக் கலந்து கொடுத்துட்டான். ஜெபமாலை உயிர் உயிர் பிழைக்க மாட்டான்னு
நினைச்சோம். ஆனா உயிர் பிழைச்சுட்டா. அவ சுய உணர்வற்ற
நிலைமைக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்டே விஷயத்தை சொல்ல
விரும்பி முடியாமே மூணு முக்கியமான வார்த்தைகளை மட்டும்
சொல்லிட்டு மயக்க நிலைக்குப் போயிட்டா. நீங்களும் விஷ்ணுவும் அந்த
மூணு வார்த்தைகளை வெச்சுகிட்டு விசாரணை ஆரம்பிச்சீங்க. உங்களால
என்னை ஸ்மெல் பண்ண முடியாதுன்னு நினைச்சு கொஞ்சம்
அலட்சியமாய் இருந்துட்டேன். விளைவு....? என்னை நெருங்கிட்டீங்க..."
"இதுவரைக்கும் எத்தனை சிறுவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு
இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?" "ஒன்பது பேர்" "அதுல எத்தனை
பேர் இப்போ உயிரோடு இருக்காங்க?" "ரெண்டு பேர்" "யார் யாரு?"
"நாமக்கல்லைச் சேர்ந்த மாரியப்பன், வந்தவாசியைச் சேர்ந்த பாண்டியன்
இந்த ரெண்டு பேரும் கொல்கத்தாவில் இருக்காங்க." "யார்கிட்டே?" "சரத்
சட்டர்ஜி என்கிற ஒர் பெரிய பணக்காரர் பொறுப்பில் இருக்காங்க. அவர்
தன்னோட எதிரிகளை தொழில் அதிபர்களை தீர்த்துக்கட்ட சரியான
நேரத்தை எதிர்பார்த்து காத்திட்டிருக்கார்." "அவரோட அட்ரஸ் தெரியுமா?"
"தெரியும்...." "கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் தெளிந்த நீரோடை மாதிரி
பதில் சொன்ன உங்களுக்கு என்னோட நன்றி ஸார். கடைசியாய் ஒரே
ஒரு கேள்வி.... டாக்டர் ரஞ்சித் குமார் சையாட்ரிஸ்ட் ஒரு வாரமாய்
ஊர்ல இல்லை. இப்ப அவர் எந்த ஊர்ல தலைமறைவாய் இருக்கார்?"
தியோடர் மெளனமாய் இருந்தார். விவேக் பிஸ்டலை அழுத்தினான்.
"என்ன ஸார்... கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?" "ரஞ்சித்குமார்
தலைமறைவாக இல்லை" "பின்னே?" "தரைக்குக் கீழே இருக்கிறார்"
"எனக்குப் புரியலை..." "சுடர்கொடியோட இந்த விவகாரத்துல ரஞ்சித்குமார்
பிரச்சனை பண்ணினதால மானேஷ் அவரைத் தீர்த்துக்கட்டி உடம்பை
நாலு துண்டாய் வெட்டி ஈச்சம்பாக்கம் சவுக்குத் தோப்புக்குள்ளே திசைக்கு
ஒரு துண்டாய் புதைச்சுட்டான்..." "மானேஷ் வாழ்க" என்றான் விஷ்ணு.
- முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக