| ॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ அத காதஷோ அத்யாய:। விஷ்வரூபதர்ஷந யோகம்(வாழ்க்கையின் மறுப்பக்கம்) |
| அர்ஜுன உவாச। |
| மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்। யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ அயம் விகதோ மம॥ 11.1 ॥ |
அர்ஜுனன் கூறினான்: மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.
| பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா। த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்॥ 11.2 ॥ |
தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.
| ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர। த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம॥ 11.3 ॥ |
பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.
| மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ। யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்॥ 11.4 ॥ |
எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.
| ஸ்ரீபகவாநுவாச। |
| பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ அத ஸஹஸ்ரஷ:। நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச॥ 11.5 ॥ |
அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.
| பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்விநௌ மருதஸ்ததா। பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத॥ 11.6 ॥ |
அர்ஜுனா ! ஆதித்தர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அசுவினிகள், மருத்துகள் என்று பலரையும் பார். இது வரை காணாத பல ஆச்சர்யங்களையும் பார்.
| இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்। மம தேஹே குடாகேஷ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி॥ 11.7 ॥ |
தூக்கத்தை வென்றவனே ! அசைவதும் அசையாததுமாகிய உலகம் முழுவதையும் இன்னும் வேறு எதையெல்லாம் பார்க்க விரும்பினாயோ அவையெல்லாம் எனது இந்த உடம்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை இப்போது பார்.
| ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா। திவ்யம் ததாமி தே சக்ஷு: பஷ்ய மே யோகமைஷ்வரம்॥ 11.8 ॥ |
உனது இந்த கண்ணினால் என்னை பார்க்க இயலாது.எனவே உனக்கு தெய்வீக கண்ணை தருகிறேன். எனது யோக சக்தி மகிமையை பார்.
| ஸம்ஜய உவாச। |
| ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி:। தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்॥ 11.9 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: மன்னா ! மகா யோகேசுவரராகிய கிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, மேலான தமது தெய்வீக வடிவை அர்ஜுனனுக்கு காட்டினார்.
| அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்। அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்॥ 11.10 ॥ |
அந்த வடிவம் எண்ணற்ற முகங்களும் கண்களும் உடையது. பல அதிசிய காட்சிகள் நிறைந்தது. பல தெய்வீக ஆபரணங்கள் அணிந்து தெய்வீகமான பல ஆயுதங்கள் ஏந்தியது.
| திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்। ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்॥ 11.11 ॥ |
அந்த வடிவம் அழகிய மாலைகளும் ஆடைகளும் அணிந்தது. சிறந்த வாசனை திரவியங்கள் பூசியது. பெரும் வியப்பை ஊட்டுவது. ஒளியுடன் பிரகாசிப்பது. எல்லையற்றது. எங்கும் முகம் உடையது.
| திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா। யதி பா: ஸத்ருஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:॥ 11.12 ॥ |
ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் ஆகாயத்தில் உதித்தால் அது பரம்பொருளின் ஒளிக்கு சமமாக இருக்கும்.
| தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா। அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா॥ 11.13 ॥ |
பலவிதமாக தோன்றுகின்ற பிரபஞ்சம் முழுவதும் அந்த தேவதேவனுடைய உடம்பில் ஒன்று சேர்ந்திருப்பதை அர்ஜுனன் அப்போது கண்டான்.
| தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநம்ஜய:। ப்ரணம்ய ஷிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத॥ 11.14 ॥ |
உடனே அர்ஜுனன் வியப்புடனும், மயிர்சிலிர்ப்புடனும் அந்த தேவனை தலையால் வணங்கி கூப்பிய கைகளுடன் கூறலானான்.
| அர்ஜுன உவாச। |
| பஷ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்। ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்தம் க்ருஷீம்ஷ்ச ஸர்வாநுரகாம்ஷ்ச திவ்யாந்॥ 11.15 ॥ |
அர்ஜுனன் கூறினான்: எம்பெருமானே ! உனது திருமேனியில் எல்லா தேவர்களையும், பல்வேறு உயிரினங்களையும், தாமரையில் வீற்றியிருக்கின்ற பிரம்மாவையும், சிவனையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.
| அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பஷ்யாமி த்வாம் ஸர்வதோ அநந்தரூபம்। நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப॥ 11.16 ॥ |
உலகின் தலைவனே ! எண்ணற்ற கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் உடைய உனது எல்லையற்ற வடிவத்தை எங்கும் காண்கிறேன். உலக வடிவினனே ! உனது முடிவையோ நடுவையோ ஆரம்பத்தையோ காணமுடியவில்லை.
| கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்। பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்॥ 11.17 ॥ |
மகுடம் தரித்து கதை தாங்கி சக்கரம் ஏந்திய பேரொளி பிழம்பான எங்கும் பிரகாசிக்கின்ற கண்ணால் காண முடியாத சுடர் விடுகின்ற நெருப்பு போலவும் சூரியனை போலவும் ஒளிர்கின்ற அளவிட்டு அறியமுடியாத உன்னை எங்கும் காண்கின்றேன்.
| த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்। த்வமவ்யய: ஷாஷ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே॥ 11.18 ॥ |
நீ அழிவற்றவன், மேலானவன், அறியபடவேண்டியவன். இந்த பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம் நீ. நீ மாறாதவன். தர்மத்தின் நிலையான காவலன். என்றென்றும் இருப்பவன் . நீயே இறைவன் என்பதை நான் உணர்கிறேன்.
| அநாதிமத்யாந்தமநந்தவீர்யம் அநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்। பஷ்யாமி த்வாம் தீப்தஹுதாஷவக்த்ரம் ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்॥ 11.19 ॥ |
நீ ஆதி, நடு, முடிவு இல்லாதவன், எல்லையற்ற ஆற்றல் உடையவன், எண்ணற்ற கைகள் உடையவன், சந்திர சூரியர்களை கண்களாக கொண்டவன், சுடர் விடுகின்ற அக்னி போல் முகம் உடையவன், தேஜசால் இந்த பிரபஞ்சத்தை எரிப்பவனாக உன்னை நான் காண்கின்றேன்.
| த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா:। த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்॥ 11.20 ॥ |
பரம்பொருளே ! விண்ணும் மண்ணும் இடைவெளியும் எல்லா திசைகளும் உன் ஒருவனாலேயே வியப்பிக்கபட்டுள்ளது. உனது இந்த உக்கிரமான அற்புத உருவை கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
| அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி। ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:॥ 11.21 ॥ |
தேவர்கள் உன்னில் பிரவேசிக்கிறார்கள். சிலர் பயத்தால் கைகூப்பி உன்னை புகழ்கிறார்கள். வாழ்க என்று கூறி முனிவர்களும் சித்தர்களும் உன்னை அழகிய துதிகளால் போற்றுகிறார்கள்.
| ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விஷ்வேஷ்விநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச। கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே॥ 11.22 ॥ |
ருத்திரர்கள், ஆதித்தர்கள், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினிகள், மருத்துக்கள், ஊஷ்மபர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் எல்லோரும் திகைப்புடன் உன்னை பார்க்கிறார்கள்.
| ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்। பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்॥ 11.23 ॥ |
பெரிய கைகளை உடையவனே ! பல முகங்கள், கண்கள், கைகள், தொடைகள், பாதங்கள், வயிறுகள், பயமுறுத்துகின்ற வளைந்த பல பற்கள் என்று காட்சியளிக்கின்ற உனது பெரிய உருவத்தை கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
| நப:ஸ்ப்ருஷம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிஷாலநேத்ரம்। த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ॥ 11.24 ॥ |
மகாவிஷ்ணுவே ! பல நிறங்களுடன் வானை தொடுவது போல் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய , கனல் வீசும் பெரிய கண்களை கொண்ட உன்னை கண்டு என் மனம் நடுங்குகிறது. தைரியமும் மன அமைதியும் என்னை விட்டு அகல்கின்றன.
| தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி। திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.25 ॥ |
தேவாதிதேவா ! பயமுறுத்துகின்ற கோரபற்கள் உடையதும் பிரளயகால அக்னிக்கு ஒப்பானதுமான உனது முகங்களை கண்டதும் என் மனம் நிலைகுலைந்து விட்டது. எனக்கு திசைகள் தெரியவில்லை, உலகிற்கு ஆதாரமாணவனே ! அருள் புரிவாய்.
| அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:। பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:॥ 11.26 ॥ வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி। கேசித்விலக்நா தஷநாந்தரேஷு ஸம்த்ருஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:॥ 11.27 ॥ |
இதோ திருதராஷ்டிரரின் பிள்ளைகள், மன்னர்கள் கூட்டம், பீஷ்மர், துரோணர், கர்ணன், நம்மவர்களுள் முக்கிய வீரர்கள் என்று அனைவரும் பயங்கரமான வளைந்த பற்கள் உடைய உனது வாய்களில் பரபரப்பாக புகுகிறார்கள். சிலர் தூளாக்கப்பட்ட தலைகளுடன் பல் இடுக்குகளில் அகப்பட்டு கிடக்கிறார்கள் .
| யதா நதீநாம் பஹவோ அம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி। ததா தவாமீ நரலோகவீரா விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி॥ 11.28 ॥ |
நதிகளின் வேகம் மிக்க பல பிரவாகங்கள் எவ்வாறு கடலை நோக்கி பாய்கின்றனவோ, அவ்வாறே இந்த வீரர்களும் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்கின்ற உனது வாய்களில் புகுகிறார்கள்.
| யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா விஷந்தி நாஷாய ஸம்ருத்தவேகா:। ததைவ நாஷாய விஷந்தி லோகா: தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:॥ 11.29 ॥ |
விட்டிற்பூச்சிகள் அழிவதர்க்காக எவ்வாறு, சுடர் விட்டெரியும் தீயில் வெகு வேகமாக பாய்கின்றனவோ அவ்வாறே இந்த மனிதர்களும் அழிவதற்க்காகவே உனது வாய்களுள் மிகுந்த வேகத்துடன் புகுகிறார்கள்.
| லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தாத் லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:। தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ॥ 11.30 ॥ |
திருமாலே ! சூழ்ந்துள்ள எல்லா உலகங்களையும் பிரகாசிக்கின்ற வாய்களால் விழுங்கி ருசி பார்கிறாய் நீ. உனது உக்கிரமான ஒளி எல்லா உலகையும் பிரகாசத்தால் நிரப்பியபடி எரிகிறது.
| ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ நமோ அஸ்து தே தேவவர ப்ரஸீத। விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்॥ 11.31 ॥ |
பயங்கர உருவுடைய நீ யார் என்று எனக்கு சொல்வாய். உன்னை வணங்குகிறேன். உனது செயல்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. தேவர் தலைவா ! அருள் புரிக. முதல்வனாகிய உன்னை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
| காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:। க்ருதே அபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யே அவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:॥ 11.32 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். இங்கே உலகங்களை அழிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரிட்டு கொல்லாவிட்டலும் எதிராளிகளின் படையில் யாரும் மிஞ்ச போவதில்லை.
| தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்। மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்॥ 11.33 ॥ |
இடது கையால் கூட அம்பு எய்பவனே ! எழுந்திரு, புகழ் பெரு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த அரசை அனுபவி. இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ கருவியாக மட்டும் இரு.
| த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்। மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மாவ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்॥ 11.34 ॥ |
என்னால் கொல்லப்பட்டுவிட்ட துரோணர் , பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே. போரில் எதிரிகளை வெல்வாய். போர் செய்.
| ஸம்ஜய உவாச। |
| ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ। நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய॥ 11.35 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்டு அர்ஜுனன் நடுங்கியவனாய் கை கூப்பி, நமஸ்கரித்து, பயத்துடன் வணங்கி, வாய்குளறி அவரிடம் சொன்னேன்.
| அர்ஜுன உவாச। |
| ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச। ரக்ஷாம்ஸி பீதாநி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:॥ 11.36 ॥ |
கிருஷ்ணா ! உனது மகிமையால் உலகம் மகிழ்கிறது.ஆனந்தம் அடைகிறது. ராட்சஷர்கள் பயந்து திசைகள் தோறும் ஓடுகிறார்கள். சித்தர்கள் அனைவரும் வணங்குகிறார்கள். இவையெல்லாம் உனக்கு பொருத்தமானதே.
| கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே। அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்॥ 11.37॥ |
பரம்பொருளே ! முடிவற்றவனே ! தேவர் தலைவனே, உலகின் ஆதாரமே, பிரம்மாவிற்கும் பெரியவனே, முதர்க்காரணமானவனே, தோன்றியதும் தோன்றாததும் அப்பாற்பட்டதுமான அழியா பொருள் நீயே, உன்னை ஏன் வணங்கமாட்டார்கள்.
| த்வமாதிதேவ: புருஷ: புராண: த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்। வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஷ்வமநந்தரூப॥ 11.38 ॥ |
நீ முழுமுதற்கடவுள், பழமைகளுக்கெல்லாம் பழமையானவன், பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம், எண்ணற்ற வடிவங்கள் உடையவன். அறிபவனும் அறியபடுபவனும் நீயே, மேலான நிலையாகவும் நீயே இருக்கிறாய், உலகம் உன்னாலேயே வியாப்பிக்கபட்டிருக்கிறது.
| வாயுர்யமோ அக்நிர்வருண: ஷஷாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச। நமோ நமஸ்தே அஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஷ்ச பூயோ அபி நமோ நமஸ்தே॥ 11.39 ॥ |
நீயே வாயு, எமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி மற்றும் முப்பாட்டனாக இருக்கிறாய். உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஆயிரம் முறை இன்னும் அதற்கு மேலும் உனக்கு நமஸ்காரங்கள்.
| நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோ அஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ। அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:॥ 11.40 ॥ |
எல்லமானவனே ! உனக்கு முன்னாலும் பின்னாலும் நமஸ்காரம், எல்லா பக்கத்திலும் நமஸ்காரம். நீ அளவற்ற ஆற்றலும், எல்லையற்ற பராகிரமும் உடையவன். நீ அனைத்திலும் நன்றாக வியாப்பித்திருக்கிறாய். அதனால் அனைத்துமாக இருக்கிறாய்.
| ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி। அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வா அபி॥ 11.41 ॥ யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரஷய்யாஸநபோஜநேஷு। ஏகோ அதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்॥ 11.42 ॥ |
அச்சுதா ! எல்லையற்றவனே ! உனது இந்த மகிமையை அறியாமல் நண்பன் என்று கருதி, கவனமின்றியோ, அன்பினாலோ, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, ஏ நண்பா என்று அலட்சியமாக உன்னை அழைத்திருக்கிறேன். விளையாட்டு நேரங்களிலோ, ஓய்வு வேலையிலோ, சும்மா இருக்கும் போதோ, சாப்பாட்டு வேலையிலோ, தனிமையிலோ, பிறர் காணுமாறோ அவ்வாறு உன்னை அவமதித்ததை எல்லாம் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
| பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்। ந த்வத்ஸமோ அஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அப்யப்ரதிமப்ரபாவ॥ 11.43 ॥ |
ஒப்பற்ற பெருமை உடையவனே ! அசைவதும் அசையாததும் நிறைந்த இந்த உலகின் தந்தை நீயே. பூஜிக்கதக்கவனும் மேலான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு சமமானவர் இல்லை. உன்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
| தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்। பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்॥ 11.44 ॥ |
தேவா ! இறைவனும் போற்றதக்கவனுமாகிய உன்முன் நான் கீழே விழுந்து வணங்குகிறேன். அருள்புரிய வேண்டும். மகனை தந்தையும், நண்பனை நண்பனும், காதலியை காதலனும் பொருத்து கொள்வதுபோல் என்னை பொருத்து அருள் மாறு வேண்டுகிறேன்.
| அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே। ததேவ மே தர்ஷய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.45 ॥ |
தேவா ! தேவர் தலைவா உலகின் இருப்பிடமானவனே ! முன்பு காணாததை கண்டு மகிழ்கிறேன். ஆனாலும் பயத்தால் என் மனம் நடுங்குகிறது. ( இனிமை ததும்பும் ) அந்த பழைய உருவத்தையே எனக்கு காட்ட வேண்டும், அருள் புரிக.
| கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ। தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே॥ 11.46 ॥ |
ஆயிரம் கைககள் உடையவனே, உலககெங்கும் நிறைந்த வடிவத்தை உடையவனே ! உன்னை முன் போலவே கிரீடம் தரித்தவனாக, கதை ஏன்தியவனாக, சக்கரத்தை கையில் தாங்கியவனாக நான் தரிசிக்க விரும்புகிறேன், நான்கு கைகள் உடைய அந்த உருவத்துடனேயே இருப்பாயாக.
| ஸ்ரீபகவாநுவாச। |
| மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்। தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்॥ 11.47 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளிமயமானதும் எங்கும் நிறைந்ததும், முடிவற்றதும், முதலில் இருந்ததுமான எனது மேலான உருவத்தை மகிழ்ச்சி காரணமாக நான் எனது யோக சக்தியில் உனக்கு காட்டினேன். உன்னை தவிர வேறு யாரும் இந்த முன்பு இதனை கண்டதில்லை.
| ந வேத யஜ்ஞாத்யயநைர்ந தாநை: ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:। ஏவம்ரூப: ஷக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர॥ 11.48 ॥ |
குரு குலத்து பெரு வீரனே ! இத்தகைய எனது விசுவ ரூபத்தை பூமியில் உன்னை தவிர வேறு யாரும் வேதங்களாலோ, யாகங்களாலோ, படிப்பாலோ, தானங்களாலோ, கிரியைகலாலோ தீவிர தவங்களாலோ காண இயலாது.
| மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்। வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய॥ 11.49 ॥ |
எனது கோரமான உருவத்தை பார்த்து உனக்கு பயமோ குழப்பமோ வேண்டும். பயம் நீங்கி மன மகிழ்ச்சியுடன் எனது பழைய உருவத்தை நன்றாக பார்.
| ஸம்ஜய உவாச। |
| இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய:। ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா॥ 11.50 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இப்படி சொல்லி சொந்த உருவத்தை மீண்டும் காட்டினார். அவ்வாறு பரம்பொருளாகிய கிருஷ்ணர் மீண்டும் இனிய வடிவம் தாங்கி, பயந்த அர்ஜுனனை தேற்றினார்.
| அர்ஜுன உவாச। |
| த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந। இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:॥ 11.51 ॥ |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனது இந்த இனிய மனித வடிவை பார்த்து இப்போது நான் மனத்தெளிவு பெற்று இயல்பான நிலையை அடைந்து இருக்கிறேன்.
| ஸ்ரீபகவாநுவாச। |
| ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் த்ருஷ்ட்வாநஸி யந்மம। தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண:॥ 11.52 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: எனது எந்த வடிவத்தை நீ கண்டிருக்கிறாயோ காண்பதற்கு அறியதான அதை எப்போதும் காண தேவர்களும் விரும்புகிறார்கள்.
| நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா। ஷக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா॥ 11.53 ॥ |
என்னை நீ எவ்வாறு கண்டிருக்கிறாயோ அவ்வாறு காண வேதங்களாலும் தவத்தாலும் தானங்களாலும் கூட முடியாது.
| பக்த்யா த்வநந்யயா ஷக்ய அஹமேவம்விதோ அர்ஜுன। ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரம்தப॥ 11.54 ॥ |
எதிரிகளை வாட்டுபவனே ! அர்ஜுனா ! ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்வாறு என்னை உள்ளபடி அறியவும் காணவும் அடையவும் முடியும்.
| மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:। நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ॥ 11.55 ॥ |
அர்ஜுனா ! எனக்காக வேலை செய்பவன், என்னை கதியாகவும் கொள்பவன், எனது பக்தன், பற்றற்றவன், எந்த உயிரையும் வெருக்காதவன் யாரோ அவன் என்னை அடைகிறான்.
| ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே விஷ்வரூபதர்ஷநயோகோ நாமைகாதஷோ அத்யாய:॥ 11 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விஷ்வரூபதர்ஷந யோகம்' எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக