Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 29 டிசம்பர், 2018

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது Part 2: EPS, ROCE

index



 
 
 
 
 
 
 
 
இந்த பதிவை ஆரம்பிக்கும்  முன்பு, முந்தைய பதிவில் சொன்ன முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே திரும்பவும் பதிவு செய்ய வேண்டும் - "பங்குகளை வாங்கும்  போது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக  நினைக்காமல்,நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண  வேண்டும்". இந்த எண்ணம் இருந்தால் தான் வாங்கபோகும் பங்கை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து வாங்க மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

சரி,இப்போது இந்த தலைப்பிற்கு வருவோம். முந்தைய தலைப்பில் சொன்னது  போல, ஒரு வளமான எதிர்காலம் உள்ள தொழில் துறைய  தேர்ந்தெடுத்த  பின்பு,  அடுத்து செய்ய வேண்டியது, அந்த துறையில், வருங்காலத்தில் நன்கு வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ள ஒரு நிறுவனத்தை தேர்வு  செய்வது. ஒரு துறை வளரக்கூடியது  என்றால், அந்த துறையில் பல நிறுவனங்கள்  ஈடுபட்டிருக்கும்.இந்த பல  நிறுவனங்களில், ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினம்  என்றாலும், அதனை  எளிதாக்குவதற்கு, அந்த நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வியாபார வளர்ச்சியை தெரிந்து கொள்ள சில காரணிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த  பதிவிலும், அடுத்த பதிவிலும் பார்ப்போம்.

  1. ஒரு பங்கின் மூலம் கடந்த நிதியாண்டில் கிடைத்த நிகர லாபம் (Earnings Per Share):

ஒரு நிறுவனம் ஒரு பங்கிற்கு எவ்வளவு ரூபாய் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ஈட்டியது என்பதை தெரிந்து  கொண்டால், அந்த நிறுவனம் எந்த அளவுக்கு லாபகரமான நிறுவனம் என்பதை அறிந்து  கொள்ளலாம். ஒரு பங்கிற்கான லாபத்தை ஏன் பார்க்க வேண்டும்? மொத்த லாபத்தை வைத்து ஏன் ஒரு நிறுவனத்தை எடை போட கூடாது என்ற கேள்வி உங்களில் எழும்.  ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை வைத்து அதனை அளவீடு செய்வதை  விட,ஒரு பங்கிற்கான லாபத்தை வைத்து அளவீடு  செய்யும்போது, அந்த நிறுவனத்தின் செல்யல்பாட்டை பற்றிய இன்னும் தெளிவான பார்வை  கிடைக்கும்.

ஒரு பங்கிற்கான லாபம்(EPS) = நிகர லாபம் (Profit After Tax ) / மொத்த பங்குகளின் எண்ணிக்கை (Total number  of shares )

ஒரு நிறுவனத்தின் காலாண்டு அல்லது முழு  நிதியாண்டிற்கான, நிகர லாபத்தை (Profit After Tax) தெரிந்து கொள்ள, BSE India ((http://www.bseindia.com/) வெப்சைட்டில், நிறுவனத்தின் 'Financials' பகுதியில், பார்க்கவும். அதே போல, மொத்த பங்குகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, BSE India ((http://www.bseindia.com/) வெப்சைட்டில், நிறுவனத்தின் 'Shareholding Pattern' பகுதியில், பார்க்கவும்.

உதாரணமாக, ராமு ஸ்டோர்ஸ், சோமு ஸ்டோர்ஸ் என்ற இரண்டு மளிகை கடைகள் இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.  ராமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 50,000 என்றும், சோமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 100,000 என்றும் வைத்துக்கொள்வோம். பொத்தம் பொதுவாக பார்த்தால், சோமு ஸ்டோர்ஸ் மிக லாபகரமான நிறுவனம் போல  தெரியலாம். ஆனால், அடுத்து வரும் கணக்கை பாருங்கள். அப்பொழுது இன்னும் தெளிவான பார்வை இந்த இரு நிறுவனங்களை பற்றி கிடைக்கும்

ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 10 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
சோமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 40 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
இப்போது, பங்கிற்கான லாபத்தை கணக்கிடும் போது, ராமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 50000 / 10 = Rs .5000
சோமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 100000 / 40 = Rs .2500

மொத்த லாபத்தை பார்க்கும்போது சோமு ஸ்டோர்ஸ்-ன் லாபம் இரட்டிப்பு போல தோன்றும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபத்தை பார்க்கும்போது ராமு ஸ்டோர்ஸ்-தான் சோமு ஸ்டோர்ஸ்-ஐ விட இரட்டிப்பு லாபத்தை வழங்கியுள்ளது. எனவே ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் உகந்த முதலீடு.

நாம் பார்த்த உதாரணம் போல, ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை மட்டும்  பார்க்கும்பொழுது, அந்த நிறுவனம் சிறப்பானதாக தோன்றும், ஆனால் அந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு ஈட்டிய லாபத்தை கணக்கிடும் போது தான் அதனுடைய உண்மையான  செயல்திறனும், நிர்வாகத்தின் திறமையும் நமக்கு தெரிய வரும். ஒரு நிறுவனத்தின் EPS பற்றி தெரிந்து கொள்ள, அந்த நிறுவனத்தை BSE இணைய தளத்தில் (http://www.bseindia.com/) தேடி, Financials பகுதியில், EPS -ஐ பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கினால் கிடைக்கும் லாபத்தின் அளவு (EPS) உயர உயர, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களின் நம்பிக்கை  உயரும். இதன் காரணமாக இந்த பங்கிற்கான தேவை (Demand) அதிகமாகும். Demand  அதிகமாகும்போது,இந்த பங்கின் விலையும் உயரும்.

2. மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE  -  Return On Capital Employed):
ஒரு நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள உதவும் அடுத்த குறியீடு, அந்த நிறுவனத்தின் லாபம், மொத்த முதலீட்டில் எவ்வளவு சதவீதம் என்ற ஒரு குறியீடு. இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது

மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE) = நிறுவனம் ஈட்டிய லாபம் / நிறுவத்தின் மூலதனம்.

உதரணமாக, பாபு ஹோட்டல், கோபு ஹோட்டல் என்ற இரண்டு உணவகம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
பாபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
கோபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
இரண்டு ஹோட்டல்களும் ஒரே அளவு லாபத்தை  ஈட்டியுள்ளன. எனவே இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தேடுக்க மேலும் விவரங்கள் தேவை. அந்த கூடுதல் விவரத்தை, கீழ்க்கண்டவாறு வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்திலிருந்து (ROCE) தெரிந்து  கொள்ளலாம்.
பாபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 100000 கடன் - ஆக மொத்தம் Rs 2 லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
கோபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 50000 கடன் - ஆக மொத்தம் Rs ஒன்றரை  லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
இப்போது, வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்தை பார்க்கும்பொழுது,
பாபு ஹோட்டல்: 50000/200000 = 25%
கோபு ஹோட்டல் : 50000/150000 = 33.33%
எனவே, 100 ரூபாய் முதலீட்டிற்கு 33.33 ரூபாய் வருமானம் பெற்றுத்தரும் கோபு ஹோட்டல்  தான், 100 ரூபாய் முதலீட்டிற்கு 25 ருபாய் வருமானம் பெற்று தரும் பாபு ஹோட்டலை விட சிறந்த நிறுவனம் மற்றும் நம்முடைய பணத்தை முதலீடு செய்ய உகந்த நிறுவனம்.
ஒரு நிறுவனத்தின், ROCE பற்றி தெரிந்து கொள்ள, http://www.screener.in/ என்ற இணைய தளத்தை உபயோகிக்கலாம்.

ஒரு நிறுவனத்தின் பங்கை தேர்வு செய்யும்போது, கடந்த சில ஆண்டுகளில் (அல்லது காலாண்டுகளில்), EPS மற்றும் ROCE எந்த அளவுக்கு உயர்ந்து வந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். மிக  முக்கியமாக, எதிர்காலத்தில் இதே அளவு உயர வாய்ப்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். எதிர்காலத்தை எப்படி கணிப்பது? எதிர்காலத்தை கண்டிப்பாக துல்லியமாக கணிக்க வாய்ப்பில்லை. அப்படி கணிக்க முடியும் என்றால், வாழ்க்கையிலும், வர்த்தகத்திலும் ஒரு சுவாரசியமே இருக்காது :)
ஆனால், கடந்த காலத்தில் போட்ட முதலீட்டை வைத்து நிறுவனம் ஈட்டிய வருமானத்தை  வைத்தும், நிறுவனத்தின் வியாபாரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளை வைத்தும் (உ.ம். - நிறுவனம் ஒரு புதிய பொருளை சந்தையில் அறிமுக படுத்த உள்ளது அல்லது புதிய கிளையை துவக்க உள்ளது), முந்தைய பதிவில் சொன்னது போல, அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழிலுக்கு வருங்காலத்தில் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் வைத்து, அந்த நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை ஓரளவு கணிக்க  வாய்ப்புள்ளது. அப்படி சரியாக கணிப்பவர்கள், சரியான பங்குகளை  வாங்கி, தங்களின் முதலீட்டை வளமாக்குவார்கள்.
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக