திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக்
கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை, நின்றால் உட்கார முடியவில்லை.
இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.
குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம்
கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப்
போகிறதா? என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.
குருவே! இதை இப்படியே விட்டால் ஒரு நாளைக்கு
உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்! என்று பயம் காட்டினான் மடையன். ஐயையோ!
என்று அலறிய பரமார்த்தர், இதற்கு என்ன செய்வது? என்று கேட்டார்.
சித்த வைத்தியர் யாரிடமாவது போனால் நிறைய
செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து லேகியம்
தயாரித்துத் தருகிறோம். தொப்பை கரைந்து விடும்! என்றான், முட்டாள். உடனே மூடன்,
பழைய ஓலைச் சுவடிகளை எடுத்துப் அதில் தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி
படித்துச் செடிகளை பறித்து வருகிறோம் என்றான்.
எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று
நினைத்த பரமார்த்தர், சீடர்களே! நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும்
விற்று விடலாம் என்று அனுப்பிவைத்தார்.
காட்டுக்குச்சென்ற சீடர்கள், தொப்பை கரைச்சான்
மூலிகை எது என்று தெரியாமல் இருந்தபோது அங்கு முனிவர் ஒருவர் தவம் செய்து
கொண்டிருந்தார். அவரைக் கண்ட மட்டி, அவரிடம் சென்று, முனிவரே! இந்தச் செடிகளில்
தொப்பை கரைச்சான் செடி எது என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.
கோபம் கொண்ட முனிவர், எந்தச் செடி நாறுகிறதோ,
அதுதான் நீ கேட்கும் செடி! என்று வேண்டுமென்றே! சொன்னார். இதை நம்பிய சீடர்கள்,
கண்ட கண்ட இலைகளையும் சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம்
பறித்து வந்தனர். இந்த இலைகளை மோந்த பரமார்த்தர், நன்றாக நாறுகிறது! எப்படியும்
என் தொப்பை கரைந்து விடும்! என்று மகிழ்ந்தார்
அதன்பின் சீடர்கள் இலைகளை அரைக்க
ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர்
பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்து. அடுப்பில் வைத்துக் காய்ச்சி, லேகியத்தை
உருண்டை பிடித்து, குருவிடம் உடனே இதைச் சாப்பிடுங்கள் என்றனர். பார்ப்பதற்குக்
கொழ கொழ என்றும் அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.
குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ
வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச்
சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! என்று கூறினான், மட்டி.
பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு
உருண்டைகள் விழுங்கினார். குருவின்! தொப்பை சீக்கிரம் கரைய வேண்டும்! என்று
இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.
பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக
லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், மற்றும் அந்நாட்டு
மன்னன் லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டு சாப்பிட்டனர்
சிறிது நேரம் ஆனதும், எல்லோருக்கும் வயிற்றைக்
கலக்கியது. ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே! என்று பரமார்த்தரும், மற்ற
தொப்பைக்காரர்களும் அலறியபடி எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு
ஓடினார்கள்.
மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர்
மீது கோபம் கொண்டார். இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச்
சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்! என்று ஆணையிட்டான்.
சிறையிலிருந்து தள்ளாடி வந்த குருவைக் கண்ட
சீடர்கள் முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது என்று
வியந்தனர். குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக்
கரைத்திருக்கிறது என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.
லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு
தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதனால்தான் இப்படி
ஆகிவிட்டேன்! என்றபடி பசிக்களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக