Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 ஜனவரி, 2019

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது Part 4- Profit Margin


How to select a good share - OPM, NPM
இந்த பதிவை ஆரம்பிக்கும்  முன்பு, முந்தைய பதிவில் சொன்ன முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே திரும்பவும் பதிவு செய்ய வேண்டும் - "பங்குகளை வாங்கும்  போது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக  நினைக்காமல்,நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண  வேண்டும்". இந்த எண்ணம் இருந்தால் தான் வாங்கபோகும் பங்கை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து வாங்க மிகுந்த ஈடுபாடு இருக்கும்.
இப்போது இந்த பதிவிற்கான தலைப்பிற்கு வருவோம். இந்த தலைப்பில் நாம் பார்க்க இருப்பது ஒரு நிறுவனத்தின் பல்வேறு வகையான லாப குறியீடுகளை எவ்வாறு அலசுவது என்பது பற்றி. ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு லாப குறியீடுகள் யாவை? 1. செயல்பாட்டு லாபம் (Operating Profit or EBIT ) 2. வரிக்கு முந்தைய லாபம் (Profit Before Tax) 3. நிகர லாபம் (Profit After Tax)
செயல்பாட்டு லாபம் (Operating Profit or EBIT) - ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தை கணக்கிட, அந்த நிறுவனத்தின் வியாபாரம் மூலமாக ஒரு நிதியாண்டில் கிடைத்த வருவாயில்  (Revenue through sale of goods) இருந்து, அந்த நிறுவனத்தின் மொத்த செலவுகளை கழிக்க வேண்டும். செயல்பாட்டு லாபம் என்பது வரி, வட்டிக்கு முந்தைய லாபம். உதாரணமாக, குமரன் டிராவல்ஸ் என்ற ஒரு நிறுவனத்தின் லாப நட்ட கணக்கை பார்ப்போம்: ஒரு ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் (Total Revenue) : Rs 60 லட்சம்  ஒரு ஆண்டில் பெட்ரோல் / டீசல் செலவு (Operational Expense) : Rs 20 லட்சம்  ஊழியர் சம்பளம் (Employee Expenses) : Rs 10 லட்சம்  தேய்மான செலவு (Depreciation) : Rs 5 லட்சம்  தொலைபேசி செலவு = Rs 0.5 லட்சம்  செயல்பாட்டு லாபம் = மொத்த வருவாய் - மொத்த செலவு = (60 - (20+10+5+0.5)) = 24.5 லட்சம்.
வரிக்கு முந்தைய லாபம் (Profit Before Tax) - ஒரு நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபத்தை கணக்கிட, அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தில் (Operating Profit ) இருந்து, அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்கு கொடுக்கும் வட்டியை கழிக்க வேண்டும். நம்முடைய உதாரணமான, குமரன் டிராவல்ஸ், Rs 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக வைத்துக்கொள்வோம். எனவே, ஒரு ஆண்டிற்கான வட்டி (15%​) = 1.5 லட்சம்  ஆக, வரிக்கு முந்தைய லாபம் = செயல்பாட்டு லாபம் - நிறுவனம் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி = 24.5 - 1.5 = 23 லட்சம்.
நிகர லாபம் (Profit After Tax) - ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை அறிய, அந்நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபத்திலிருந்து (Profit Before Tax ), அந்த நிறுவனம் அரசிற்கு கொடுக்க வேண்டிய வரியினை கணக்கிட்டு, கழிக்க வேண்டும். நம்முடைய உதாரணமான குமரன் டிராவல்சின்  வரிக்கு முந்தைய லாபம் = 23 லட்சம்.  
23 லட்சத்திற்கான வருமான வரி = 7.1 லட்சம்
எனவே, நிகர லாபம் = வரிக்கு முந்தைய லாபம் - வருமான வரி = 23 - 7.1 = 15.9 லட்சம்.

ஒரு நிறுவனத்தின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ள மேற்குறிப்பிட்ட லாபகுறியீடுகளை ஆராய வேண்டும். மேற்கூறிய லாப குறியீடுகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டு செல்ல வேண்டும். இது தான் நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ந்து வருவதையும், லாபகரமாக இயங்குவதையும் உறுதி செய்யும் வழிமுறை. கூடுதலாக, மேற்கூறிய லாபங்கள், நிறுவனத்தின் மொத்த வருவாயில் எவ்வளவு பங்கு என்பதையும் கணக்கிட்டு நிறுவனத்தின் நிர்வாகம் பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இரண்டு வகையான விகிதங்கள் பரவலாக கணக்கிடப்படுகின்றன.
1. செயல்பாட்டு  லாப விகிதம் (Operating Profit Margin or OPM)
2. நிகர லாப விகிதம் (Net Profit Margin or NPM)

செயல்பாட்டு லாப விகிதம் (OPM) : ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தை அதனுடைய மொத்த வருவாயினால் வகுத்தால் கிடைப்பது, செயல்பாட்டு லாப விகிதமாகும். நம்முடைய உதாரணத்தில்,
குமரன் டிரவல்சின் மொத்த வருவாய்: 60 லட்சம்.
செயல்பாட்டு லாபம்: 24.5 லட்சம்.
ஆகவே, செயல்பாட்டு  லாப விகிதம் (Operating Profit Margin or OPM) = (செயல்பாட்டு லாபம் / மொத்த வருவாய்) * 100 = (24.5 / 60) * 100 = 40.8 %. அதாவது, குமரன் டிராவல்ஸ் 100 ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றால், 40.8 ரூபாய் அந்த நிறுவனத்தின் செய்லபாட்டின் மூலம் கிடைக்கும் லாபம். இந்த செயல்பாட்டு லாப விகிதம் (OPM) ஒவ்வொரு ஆண்டும் அதே அளவு இருக்க வேண்டும் அல்லது உயர வேண்டும். அப்படி இருந்தால் அந்நிறுவனம், செலவை கட்டுக்குள் வைத்திருக்கிறது அல்லது செலவை குறைத்திருக்கிறது என்பதை காட்டுகிறது; இது நிறுவனத்தை நிர்வகிப்பவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாறாக, கடந்த சில வருடங்களை விட, OPM குறைந்து கொண்டு வந்தால், நிறுவனத்தின் செலவு அதிகமாகி வருவதை குறிக்கும். இது நிர்வாக திறமையின்மையையோ அல்லது நிறுவனம் இயங்க தேவையான மூல பொருட்களின் (Raw materials) விலை உயர்வையோ கட்டுகிறது.

நிகர லாப விகிதம் (NPM): ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை (Profit After Tax or Net Profit) அதனுடைய மொத்த வருவாயினால் வகுத்தால் கிடைப்பது, நிகர லாப விகிதமாகும். நம்முடைய உதாரணத்தில்,
குமரன் டிரவல்சின் மொத்த வருவாய்: 60 லட்சம்.
செயல்பாட்டு லாபம்: 15.9 லட்சம்.
ஆகவே, நிகர லாப விகிதம் = (நிகர லாபம் / மொத்த வருவாய்)*100 = (60 / 15.9) * 100 = 26.5 %
அதாவது, குமரன் டிராவல்ஸ் 100 ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றால், 26.5 ரூபாய் அந்த நிறுவனத்தின் செய்லபாட்டின் மூலம் கிடைக்கும் லாபம். இந்த செயல்பாட்டு லாப விகிதம் (NPM) ஒவ்வொரு ஆண்டும் அதே அளவு இருக்க வேண்டும் அல்லது உயர வேண்டும். அப்படி இருந்தால் அந்நிறுவனம், செலவு, வட்டியை  கட்டுக்குள் வைத்திருக்கிறது அல்லது செலவு, வட்டியை குறைத்திருக்கிறது என்பதை காட்டுகிறது; இது நிறுவனத்தை நிர்வகிப்பவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாறாக, கடந்த சில வருடங்களை விட, NPM குறைந்து கொண்டு வந்தால், நிறுவனத்தின் செலவு, நிறுவனம் கட்டும் வட்டி  அதிகமாகி வருவதை குறிக்கும். இது நிர்வாக திறமையின்மையையோ அல்லது நிறுவனம் இயங்க தேவையான மூல பொருட்களின் (Raw materials) விலை உயர்வையோ அல்லது வட்டி விகித உயர்வையோ கட்டுகிறது.

இந்த பதிவில் பார்த்தது போல, ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டுமாயின், அந்த நிறுவனத்தின் அனைத்து வகையான லாபங்களும், கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிதியாண்டில், உயர்ந்திருக்க வேண்டும். அதே போல, இதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, நாம் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் OPM மற்றும் NPM உயர்வாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான், நாம் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் நிர்வாகம் திறமையானவர்களின் கைகளில் உள்ளதை உறுதிப்படுத்த முடியும்.





மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக