படித்ததில் பிடித்தது
கழுகு தரை இறங்கிவிட்டது.
ஜேக் ஹிக்கென்ஸ் - தமிழில் கொரட்டூர் கே.என் ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன் பதிப்பகம்.
வரலாற்று நவீனம் (Historical Fiction), அதுவும் உலகப்போர் சமயம் நடந்தது அதுவும் தமிழில் என்பதால் இந்தப் புத்தகத்தை உடனே வாங்கினேன்.
Winston Churchil |
கண்ணதாசன் பதிப்பகத்தில் இப்படி சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது? எவ்வளவு பிரதிகள் விற்றது என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் நவீனங்கள், இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ ஹிட் ஆகிவிட்டால் அதனை எழுதிய எழுத்தாளர்கள் மிகப் பிரபலமடைவார்கள். அதோடு பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் . அவர்களின் நாவல் கண்டிப்பாக சினிமாவாகவும் வந்துவிடும். உதாரணத்திற்கு டேன் பிரவுனைச் சொல்லலாம்.
ஆனால் இந்தியாவில் சங்க காலத்திலிருந்து இதனைப் படிக்கும் உங்க காலம் வரைக்கும் இப்படி ஒருவரைக் கூட சொல்லமுடியாது. ஓரளவுக்கு புகழ் கிடைக்கலாம். ஆனால் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு கூட பெரும் பணம் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதி சம்பாதிப்பதை இங்கு நாநூறு புத்தகங்கள் எழுதினாலும் அதில் ஒரு சிறு சதவீதம் கூட அவர்கள் சம்பாதிக்க முடியாது. முழு நேர எழுத்தாளர் என்பது இப்போதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஏனென்றால் சுஜாதா போன்ற நட்சத்திர எழுத்தாளனின் புத்தகங்கள் கூட 2000 பிரதிகளுக்கு மேல் விற்காதாம்.
Jack Higgins |
இங்கு ஒரு சில நாவல்கள் எழுதிப் உலகப்புகழ்பெற்ற ஜேக் ஹிக்கின்ஸ் (Jack Higgins) எழுதிய "தி ஈகிள் ஹேஸ் லேன்டட்" (The Eagle has landed) என்ற புத்தகத்தை வெகுகாலத்திற்குப்பின் கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்கள். புகழ் பெற்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்து வெளியிட பதிப்புரிமைக்கு மிகவும் செலவாகும். இது மிகவும் பழையது என்பதால் ஒருவேளை சல்லிசாக கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
Hitler |
இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருந்தது. ஹிட்லர், ஹிம்லர்,கோயபல்ஸ், கனாரிஸ் ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்கிறார்கள். ஏதாவது செய்து தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற அழுத்தம். ஹிட்லர் எல்லோர் மேலும் எரிந்து விழ ஹிம்லர் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.
Himmler |
அதுதான் இங்கிலாந்துக்கு ஒரு தற்கொலைபாராசூட் படையை அனுப்பி வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொலை செய்வது அல்லது கடத்திக் கொண்டு வருவதுஎன்பது. ஏற்கனவே இந்த அதிரடிப் பாராசூட் படை இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியைக் கடத்திவந்திருந்தது.
இதற்கு மாஸ்டர் மைண்டாக மேக்ஸ் ரேடில் என்ற ஜெர்மானிய மேஜர் ஒருவர் செயல்பட்டு திட்டம் வகுக்கிறார். இதற்கிடையில் ஸ்டட்லி கான்ஸ்டபிள் என்ற பகுதிக்கு ஒரு சிறு ஓய்வுக்கு ரகசியமாக சர்ச்சில் வருகிறார் என்ற செய்தி ஒரு பெண் உளவாளி மூலமாகக் கிடைக்கிறது.
இங்கிலாந்தின் மேல் கோபங் கொண்ட டெவ்லின் என்ற ஒரு ஐரிஸ்காரர் முன்னே சென்று ஆயத்தங்கள் செய்யும் வேளையில் டாலி என்ற ஆங்கிலப் பெண்ணிடம் காதலில் விழுகிறார். கர்னல் ஸ்டைனர் என்றவரின் தலைமையில் பாராசூட் படை அந்த ஊரில் ரகசியமாக இங்கிலாந்தின் நட்பு நாடான போலந்து ராணுவத்தின் யூனிபார்மில் வந்து இறங்குகிறார்கள்.
அவர்கள் என்னமாதிரி திட்டமிட்டார்கள்? சரியான திட்டம்தானா? அவர்களின் முயற்சி எந்தளவுக்குப் பலித்தது என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும் அல்லது திரைப்படத்தையும் கண்டுபிடித்து பார்க்கலாம். இதே பெயரில் திரைப்படமும் வந்து கலக்கியது. 1977ல் இந்தப்படம் வந்தது. மைக்கல் கெய்ன் ஸ்டைனராகவும்,டோனால்ட் சதர் லேண்ட் டெவ்லினாகவும், ராபர்ட் குவாலி ரேடிலாகவும், டோனால்ட் பிளசன்ஸ் ஹெய்ன்ரிச் ஹிம்லராகவும் நடித்துள்ளார்கள். நெட்பிலிக்சில் இது இல்லை. நூலகம் போய்த் தேட வேண்டும்.
இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த முனைவர் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ் முடிந்தளவிற்கு முயன்றிருக்கிறார். ஆனாலும் சில அமெரிக்க அல்லது ஆங்கில லோக்கல் ஸ்லாங்களை அவர் சரியாக மொழிபெயர்க்கவில்லை. சில உரையாடல்களை அப்படியே (Literal) மொழி பெயர்க்கக் கூடாது. அதனை தமிழில் பேசினால் எப்படியிருக்கும் எனக்கற்பனை செய்து தமிழாக்கம் செய்வது அவசியம். ஆனால் கதையின் சுவாரசியம் உங்களை ஆட்கொண்டு மற்ற சிறு தவறுகளை மறக்கடிக்கிறது.
கண்ணதாசன் பதிப்பகத்தின் முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். இது போன்ற கிளாசிக் நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ, எவ்வளவு முயல்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது உலகப்போரில் நடந்த மறைக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நாவலை வரலாற்று ஆர்வலர்கள் படித்து மகிழலாம்.
முற்றும் .
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக