இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
இயற்பகையார் 63 நாயன்மார்களுள் ஒருவர்
ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை
வர்ணிக்கிறது. இவர் சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால்
புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத்
திறத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம்
குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது
கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்து வந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர்
பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான் தூய திருநீறு
பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது
வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு,
முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார்.
வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது
உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு
இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார்,
என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற்
சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அதுகேட்ட
வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன் எனச் சொன்னார்’.
நாயனார் முன்னை விட மகிழ்ச்சியடைந்து
‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி,
விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி, ‘பெண்ணே! இன்று
உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார். அதுகேட்ட மனனவியார்,
மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய
நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி
எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லித் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார்.
இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை
வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர்
சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.
மறை முனிவர் விரும்பிய வண்ணம்,
மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும்
யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார். வேதியராகிய வந்த இறைவன்,
‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும்,
இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார். அதுகேட்ட
இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது
எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது
பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும்
தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து
அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாராது
சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை
மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு
போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே
நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை
விட்டுப்போ’ எனக் கூறினர். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப் போன்று மாதினைப்
பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல்
அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு
தேறுதல் கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே
ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று
அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு
இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம்
பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை
வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்
மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு
எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த
நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு
முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட
இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து
அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும்
தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து
ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித்
திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக்
கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை
சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று
கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து
திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார்.
மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு
நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என
அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்;
வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’.
என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக்
கொள்ளுவதற்கு அவ்விடத்தை விட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக்
காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்
மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார்;
எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார்.
அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு
மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து
மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய
இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற
நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர்
தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து
இன்புற்றனர். ஆக, இதுவே இயற்பகை நாயனார் அவர்களின் வரலாறாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக