இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
புகழ்பெரும்
சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது
தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப்
போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை
முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த மரியாதை கொண்டு
இருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர்
தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு
வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும்
அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.
இத்தகைய
அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் என்னும்
பாண்டிய மன்னனின் முதலமைச்சராக அரசகருமம் செய்தார். பாண்டியமன்னன் சமண
சமயத்தவனாகவும் குடிகளெல்லாம் அவன் வழியினராகவும் நின்ற போதும் பெருமானம் உடையவராக
அவர் சைவத்தின் வழி நின்றார்.
இவ்வாறு
சிவநெறியினராய் அரசகருமம் பார்க்கும் நாளில் சிவநெறி விளக்கும் திருஞானசம்பந்தர்
பாண்டி நாட்டிற்கு அருகே திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியைக் கேள்வியுற்றார்.
இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அளவிலேயே அவரை நேரிற் கண்டு அடிபணிந்தது போல்
ஆனந்தமடைந்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தொடிருந்த
பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி
சொல்வதற்கென அனுப்பி வைத்தார். சம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும்
செய்தி எட்டும் முன்னமே நன்னிமித்தங்கள் பல தோன்ற ‘இவை சண்பை அரசு வரும் நற்குறி’
எனத் தெளிந்தார். எழுந்தருளும் செய்தி கேட்டதும் பாண்டிமாதேவியார் சென்று அவர்
பணிப்பினைப் பெற்று வரவெதிர்கொள்ளச் சென்றார். செல்லும் அவர் தம் எதிரே
புண்ணியத்தின் படையெழுச்சி போன்றும் அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக்
கண்டார். பரமசமய கோளரி வந்தான் எனும் முத்துச்சின்ன ஓசை செவிநின்ற அமுதமென அவரை
விம்மிதமுறச் செய்து கண்வழியூடாகவும், செவிவழியூடாகவும் உளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே
கைகள் சிரமிசை ஏறிக்குவிய அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார். பின் எழுந்து
நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார். ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து
வந்த தொண்டர் குழாம், பாண்டிய முதல் மந்திரிப் பாங்குடன் வந்த அவரைப் பணிந்தபோதும்
அவர் எழாதவகையைக் கண்டு சிவபுரச் செல்வரிடம் சென்று கூறினார். சிவஞானச் செல்வரும்
முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் அணைத்தெடுத்தார். அவர் தம்
அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் கைதொழுது நின்றார். அப்பொழுது ஆளுடைய
பிள்ளையார். இம்மதுரவாக்கின் போற்றினால் மீண்டும் வீழ்ந்து வணங்கி நின்று.
“சென்ற
காலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்று
எழுந்தருளப்பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருடையோம்
நன்றியினால்
நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ்வேந்தனும் உய்ந்து
வென்றிகொள்
திரு நீற்றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம்"
எனப்
போற்றினார். ஆளுடைய பிள்ளையாரோடு கூடிச்சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை
வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப்பெருமானைத் திருமடத்தில் உறையச் செய்து,
அவருக்கும் பரிசனத்தார்க்கும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது.
இவற்றையெல்லாம் செவ்வனே செய்தாரெனினும், தீயவை புரியும் சமணரால் தீங்கேதும் நேருமோ
என அஞ்சினார். அவ்வாறு தீதேதும் நிகழின் உயிர் துறப்பதே தக்கதென்ற துணிவும்
கொண்டார். அவர் அஞ்சிய வண்ணமே சமணர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த மடத்திற்குத்
தீவைத்த செய்தி அவரை மனம் பதைபதைக்கச் செய்தது. ஆயினும் பிள்ளையார்க்குத்
தீங்கேதும் நிகழாதது குறித்து ஆறுதல் அடைந்தார். அமணர் மடத்திற்கு வைத்த தீ
மறைச்சிறுவன் ஆணையால் மன்னனை வெப்பு நோயாய் வருத்திய வேளையில் அதற்குரிய தீர்வு
திருஞானசம்பந்தரேயென மதியுரை கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி
திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிமாதேவியாரையும் அவரையும் பணித்தான்.
பணிப்பின்படி பாண்டிமாதேவியார் சிவிகையில் வர குதிரையேறிச் சென்ற குலச்சிறையார்
சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற
ஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே அமண்கொடியோனின் கொடுந்தொழில் நினைத்து
கண்ணருவி பாய கைகுவித்திறைஞ்சி திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றிய
கைவிடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தர் 'ஒன்றுக்கும் அஞ்சாதீர்' என்று
அபயமளித்தார். அபயமளித்த அவர் சிவிகையில் ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச்
சென்று அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார். அவர் அமணர்களுடன் புரிந்த
சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் யாவினும் அமைச்சராம் பாங்குடன் ஒழுகினார்.
புனல்வாதத்தின் போது எதிரேறிச் சென்ற திருப்பாசுர ஏட்டை குதிரையேறிச் சென்று
ஏடகத்தில் எடுத்துத் தலைமிசை ஏறிவந்தார். வாதில் தோற்ற அமணரையெல்லாம் அவர்
உடன்பட்டவாறே கழுவிலேற்றி முறை செய்யுமாறு அரசன் பணிக்க அப் பணிப்பின்படியே
எண்ணாயிரம் அமணரைக் கழுவில் ஏற்றினார்.
திருநீறணிந்த
பாண்டிய மன்னனுடன் பாண்டிமாதேவியாருடனும் பரசமய கோளரியாரை அழைத்துச் சென்று ஆலவாய்
அண்ணலைப் போற்றுதல் செய்தார். சிவம் வளர்க்கும் செம்மலர் ஆலவாயில் அமர்ந்திருந்த
நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார். காழியர்
பெருமானைப் பாண்டிநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று ஈற்றில்
தம் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார். சீகாழி மன்னர்
சோழநாட்டிக்குப் புறப்படத் திருவுளம் பற்றிய போது அவரோடு கூடிச்செல்வதே
குலச்சிறையாரின் ஆசையாக இருந்தது. சிவபுரச் செல்வரோ "இங்கு சிவநெறி
போற்றியிருங்கள்" என்று பணித்தார். அவர் பணி வழியொழுகும் கருத்தால் பாண்டி
நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசகருமம் செய்து இறுதியில் ஆலவாய் இறைவனின்
அருட்தாள் சேர்ந்தார். இதுவே குலச்சிறை நாயனார் அவர்களின் வரலாறு ஆகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக