இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு முறை அவர் ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையிலிருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அவர் செய்ததை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சந்நியாசி என்ன செய்யப் போகிறார் என்பதை அறிவதற்காக அவரையே அச்சிறுவன் கவனித்தான். நீண்ட நேரத்திற்குப் பின் சந்நியாசி தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அருகில் சிறுவன் சென்று சுவாமி! நீங்கள் இது வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்றான்.
அதற்குத் துறவி, நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று தியானம் செய்தேன் எனக்கூறி அங்கிருந்து சென்றார். பின் சிறுவன், இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் என எண்ணினான்.
உடனே அந்த சிறுவனும் இறைவனை பார்க்க எண்ணி உடனடியாக ஆற்றில் நீராடி, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, இறைவனே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும் என்று, மனதிற்குள் திரும்பத் திரும்ப கூறினான்.
கள்ளம் கபடமில்லாத சிறுவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததால் கடவுளும் சிறுவன் முன் தோன்றினார். சிறுவன் அதற்கு முன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் இறைவனிடம், நீங்கள் யார்? என்று கேட்டான். நான்தான் இறைவன். நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய். அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி தருகிறேன் என்றார். ஆனால், சிறுவன் நீங்கள் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, இவர்தான் இறைவன்! என்று கூறினால்தான் நீங்கள் இறைவன் என்று நம்புவேன்! என்றான்.
என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா? என்று இறைவன் கேட்டார். இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். நான் அவரைத் தேடி இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்றான்.
அதற்கு இறைவனும், சரி என்றார். ஆனால், சிறுவன், இறைவனிடம் நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது என்று மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான்.
பிறகு சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடி துறவியை நெருங்கி, சுவாமி! நீங்கள் கூறியபடி நான் செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன் என்றார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. அதனால், அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு உள்ளேன்.
நீங்கள் வந்து அவர் இறைவனா, இல்லையா? எனச் சொல்லுங்கள் என்று கூறி அழைத்தான். அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் வந்தார். சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனை காட்டி துறவியிடம், பாருங்கள்! நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா? என்று கேட்டான்.
துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை. நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே! என்றார். அதற்குச் சிறுவன், நன்றாகப் பாருங்கள்!. இங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே! என்றான்.
துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை. அப்போது இறைவன், சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இத்துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை! என்றார்.
அதற்கு சிறுவன் இறைவனே, இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான், எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே இவருக்கும் நீங்கள் இப்போது தரிசனம் கொடுங்கள், எனக் கேட்டான். பின் சிறுவனின் பிரார்த்தனையை ஏற்று, இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக