இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அரசர் காலத்தில் புறா மூலமாகவும், பின் தபால், அஞ்சல் மூலமாகவும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் தகவல்களை பரிமாறிக்கொள்ள தொலைப்பேசி, அலைப்பேசி என பல புதிய கண்டுபிடிப்புகள் வர தொடங்கின. தற்போது நவீனமயமாதலின் காரணமாக தகவல் பரிமாற்றம் புதுப்புது செயலிகளை கொண்டே இயக்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன்கள் வர தொடங்கிய காலத்தில் செல்போன் மூலம் SMS,MMS,Mail என புதிய தொழில்நுட்ப வசதிகள் வந்தது. தகவல்களை பரிமாறிக்கொள்ள இந்த வசதி எளிதாக இருந்தாலும், இதைவிட இன்னும் எளிதாக எப்படி தகவல்களை பரிமாறலாம்? என்று யோசித்து கொண்டிருக்கும்போது அதிரடியாய் களத்தில் இறங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த செயலி வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்பின் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது அனைவருக்கும் மிக எளிதாக மாறிவிட்டது. படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் பயன்படுத்தும் வண்ணம் வளர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை கொண்டு வருவதால் பயன்படுத்த மிகவும் எளிதாகிவிட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை உருவாக்கியவர் யார்?
ஜேன் கௌம் !!
ஜேன் கௌம் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஒரு ஏழைக் குடும்பத்தில் உக்ரைனில் பிறந்தார். உக்ரைனில் தண்ணீருக்கு கூட கடும் பஞ்சமாக இருந்ததால் 1992ஆம் ஆண்டு ஜேன் கௌம்-க்கு 16 வயது இருக்கும்போது தனது தாயுடன் உக்ரைனிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறினார்.
ஜேன் கௌம் புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாத நிலையில் பள்ளியில் சேர்ந்தார். வறுமையின் காரணமாக உக்ரைனிலிருந்து கொண்டு வந்த பழைய நோட்டு புத்தகங்களையே படிக்க பயன்படுத்திக் கொண்டார்.
மேலும் சாப்பாட்டிற்காக அவரும், அவருடைய தாயும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்றார்கள். ஜேன் கௌம் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள புத்தக கடைகளில் Computer Networking புத்தகங்களை வாங்கி படித்தார்.
வறுமையின் காரணமாக ஜேன் கௌம், கடைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்தார். அவரது தாய், குழந்தைகளை பாதுகாக்கும் வீட்டு வேலையை செய்தார். இதன்மூலம் வறுமையில் இருந்த இவரது குடும்பம் நடுநிலைக்கு வந்தது.
ஜேன் கௌம் வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்கொண்டிருந்த நிலையில் அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ஒரு பேரிடியாக இருந்தது. இது அவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இருந்தும் மனம் தளராத ஜேன் கௌம் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடனும் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தார்.
அடுத்த இரண்டு வருடத்தில் கடுமையாக உழைத்து கம்ப்யூட்டர் நெட்வெர்க்கில் கற்றுக்கொள்ளவேண்டிய எல்லாவற்றையும் கற்று கொண்டார்.
பின் எர்னஸ்ட் அண்ட் யங் என்னும் நிறுவனத்திற்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.
YAHOO-வில் ஜேன் கௌம்-ன் பயணம் :
1997ஆம் ஆண்டு YAHOO நிறுவனம் ஜான் கௌமை உள்கட்டமைப்பு பணியாளராக வேலைக்கு அமர்த்தியது. அதன்பின் ஜான் கௌம் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு Yahoo -வில் இணைந்தார்.
சின்ன சின்ன சந்தோஷங்கள் அவரது வாழ்க்கையில் நிறைந்து கொண்டிருந்த நேரத்தில் 2000ஆம் ஆண்டு அவரது தாய் புற்றுநோயை வெல்ல முடியாமல் உயிரிழந்தார். இது ஜேன் கௌமிற்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. அதன்பின் அவர் தனிமையில் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர், பிரையன்; ஆக்டன். இவர் ஜேன் கௌமை தனிமையிலிருந்து விடுபட உதவி, அவரது மனநிலையை வேறு திசைக்கு மாற்றினார்.
பிரையன் ஆக்டன் :
பிரையன் ஆக்டன் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பட்டம் பெற்றவர். 'ஆப்பிள்" நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996-ல் 'Yahoo" நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
எர்னஸ்ட் அண்ட் யங் குழுமத்தில் பணியாற்றிய போது, ஜேன் கௌம்-பிரையன் ஆக்டன் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். Yahoo குழுமத்தில் இருவரும் ஒன்பது வருடங்கள் பணிபுரிந்தனர். அப்போது அவர்கள் நிறைய விஷயங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொண்டனர்.
பின் ஒரு கட்டத்தில் இருவரும் Yahoo குழுமத்திலிருந்து விலகி தென் அமெரிக்காவில் ஓராண்டு பயணம் செய்தார்கள். முகநூல் குழுமத்தில் பணியில் இணைய இருவரும் விண்ணப்பம் அனுப்பினார்கள். ஆனால், விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.
அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் ஜேன் கௌம் ஐபோன் ஒன்றை வாங்கினார். அந்த ஐபோனில் App Store-ல் நிறைய புதுப்புது செயலிகள் வெளிவருவதை கவனித்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை உருவானது. அந்நிகழ்ச்சி வாட்ஸ்அப் தொடங்குவதற்கான எண்ணத்தையும், திட்டத்தையும் வகுக்க ஏதுவாக அமைந்தது.
அவரது யோசனை ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும் அவருடைய செயலிக்கு மூன்று விதிகளை வகுத்தார்.
இந்த செயலி விளம்பரங்களை எடுத்துக்கொள்ளாது.
ஒரு சிறந்த திருப்திகரமான அனுபவமாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களின் தனி சுதந்திரத்தை மதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இதுவே இவரின் தாரக மந்திரமாக இருந்தது.
நட்பை பரிமாறிக்கொள்ளும் சாளரமான வாட்ஸ்அப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.
தனது அனுபவங்களை கொண்டு 2009ஆம் ஆண்டு ஜேன் கௌம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து தங்களது வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போட்டு, ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்".
வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது?
தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு 'வாட்ஸ்அப்" என்று ஜேன் கௌம் தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் 'அப்புறம் என்ன?" என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009ஆம் ஆண்டு அன்று வாட்ஸ்அப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கௌம்; தொடங்கினார்.
வேலை தொடங்கி நன்றாக போய்கொண்டிருந்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் திடீரென Crashes ஏற்பட்டதை உணர்ந்தனர். இந்த சிக்கல் வெகுநாட்களுக்கு நீடித்ததால் இருவருக்கும் மன அழுத்தம் உண்டானது. ஜேன் கௌம்; ஒரு கட்டத்தில் இந்த செயலி வேலைக்கு ஆகாது என Drop செய்ய போவதாக கூறினார்;. ஆனால், பிரையன் ஆக்டன், ஜேன் கௌம்-க்கு அறிவுரைக் கூறி ஊக்கப்படுத்தினார்.
சிறிது காலத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் மூலமாக இவர்களுக்கு ஒரு உதவி கிடைத்தது. வாட்ஸ்அப்-ன் அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இருப்பினும் வாட்ஸ்அப்பிற்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லாதது ஒரு பிரச்சனையாக இருந்தது. அப்போது ஜேன் கௌம், பிரையன் ஆக்டனிடம் உதவிக்கேட்டார்.
பிரையன் ஆக்டன் தனது யாகூ நண்பர்களிடம் கேட்டு 2,50,000 அமெரிக்கன் டாலர் நிதியை பெற்றுத்தந்தார். இதனால் பிரையன் ஆக்டனுக்கு வாட்ஸ்அப்-ல் இணை நிறுவனர் பதவி கிடைத்தது. அன்றிலிருந்து வாட்ஸ்அப்-ன் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியது.
வாட்ஸ்அப் குறுகிய காலத்தில் உலக மக்களிடையே விரைவாகப் பயன்பாட்டுக்கு வந்தது. அனைவரும் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஸ்மார்ட்போன் என்றாலே வாட்ஸ்அப் இருக்கும் என்ற நிலை உருவானது. வாட்ஸ்அப் ஒரு நல்ல செயலியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியது. இந்நிலையில் இவர்களது நிறுவனத்தில் 55 வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். ஆனாலும், இவர்கள் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தனர்.
வாட்ஸ்அப்பின் வளர்ச்சியை பெருநிறுவனங்கள் அனைத்தும் கவனிக்க ஆரம்பித்தன. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கிணங்க எந்த முகநூலில் இவர்கள் நிராகரிக்கப்பட்டார்களோ அதே நிறுவனம் இவர்களை கவனித்து, வாட்ஸ்அப்பின் வளர்ச்சியில் பங்கு கொள்ள நினைத்தது.
வாட்ஸ்அப்-ஐ முகநூல் கையகப்படுத்தியது :
பிப்ரவரி 2014ல் வாட்ஸ்அப் பங்குகளை விலைக்கு வாங்குவதாக முகநூல் அறிவித்தது. இது உலக டெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய கையகப்படுத்துதலாக இருந்தது. 19 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு வாட்ஸ்அப்-ஐ விலைக்கு வாங்கியது, முகநூல் நிறுவனம். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் குழுவில் ஓர் குழு உறுப்பினராக ஜேன் கௌமிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஜேன் கௌம் பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும், தனது தாயும் சிறுவயதில் வறுமையுடன் வாழ்ந்து உணவுக்காக வரிசையில் நின்ற இடத்தில் தான் கையெழுத்திட்டார். அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பை அதிகாரப்பூர்வமாக முகநூலுக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்றும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கௌமும், பிரையன் ஆக்டனும் தான்.
ஜேன் கௌம், வாட்ஸ்அப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். பிரையன் ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இவர்களது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸ்அப்பை இந்த உயரத்திற்கு வளர்த்திருக்கிறது.
எந்த இடத்தில் நாம் நிராகரிக்கப்படுகிறோமோ அதே இடத்திலிருந்து தான் நமக்கான ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது.
நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுவோமேயானால் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக