இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜவுளி வியாபாரம் முதல் தொலைத்தொடர்பு வரை அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிரள வைத்து கொண்டிருப்பவர் முகேஷ் அம்பானி.
தனது தந்தையின் மூலம் இந்த துறைக்குள் காலடி எடுத்து வைத்தாலும் தற்போது இந்த சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக திகழ்பவர் இவர் தான்.
இவர் அறிமுகப்படுத்திய ஆஃபர்களால் மற்ற நிறுவனங்கள் நிலை தடுமாறியது. இந்தியாவிற்குள் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது இவரது நிறுவனம்.
இந்த நிறுவனம் அறிவித்த 1GB மற்றும் 1.5GB இலவச டேட்டாவால் தற்போது மொபைல் போன்கள் வைத்துள்ள அனைவரும் ஜியோ சிம்கார்டுகளே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால் அதிக பயனீட்டாளர்களை பெற்றது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான லாபத்தையும் ஈட்டியது இந்த நிறுவனம்.
இதுமட்டுமல்லாமல் பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என இவரது கைவசம் உள்ள நிறுவனங்கள் ஏராளம்.
'ரிலையன்ஸ்" என்கின்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் இவரின் பங்களிப்பு முக்கியமானது. இத்தனை நிறுவனங்களையும் தனது கைக்குள் அடக்கி வர்த்தக உலகின் மாபெரும் மனிதராக விளங்கக்கூடியவர் 'முகேஷ் அம்பானி".
'முகேஷ் அம்பானி" என்று அழைக்கப்படும் 'முகேஷ் திருபாய் அம்பானி" இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். இவர் 'இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்" எனப் போற்றப்படும் 'திருபாய் அம்பானியின்" மகன் ஆவார்.
இவர் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.
முகேஷ் அம்பானி, 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில், இந்தியாவின் 'வர்த்தக உலக ஜாம்பவான்" எனப் போற்றப்படும் திருபாய் அம்பானிக்கும், கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
முகேஷ் அம்பானி, தன்னுடைய கல்வியை மும்பையில் உள்ள ஹில் கிரேன்ஜ் உயர்நிலை பள்ளியில் தொடங்கினார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன்பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்காவிற்கு பயணமான முகேஷ் அம்பானி, கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980ல் தன்னுடைய படிப்பை கைவிட்டு இந்தியா திரும்பினார்.
வணிகத்தில் ஈடுபடக் காரணம் :
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி, பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாடா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால் தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் 1981ல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.
ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலில் இருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய முகேஷ் அம்பானி, 1981ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார்.
அப்பொழுது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரஸ்கிபாய் மெஸ்வானி, முகேஷ் அம்பானியின் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தார். முகேஷ் அம்பானி நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாளில் இருந்து தனது பங்களிப்பை வெகுவாக கொடுத்து வந்தார்.
நிறுவனம் நன்றாக போய் கொண்டிருந்த சமயத்தில் 1985ஆம் ஆண்டு ரஸ்கிபாய் மெஸ்வானி மறைந்தார். அதை தொடர்ந்து 1986ஆம் ஆண்டு திருபாய் அம்பானிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் முகேஷ் அம்பானியிடமும், அனில் அம்பானியிடமும் சென்றது.
இதன்பின் முகேஷ் அம்பானியின் பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸின் ஆரம்ப நிலையான நெசவு தொழிலில் இருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி, மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.
அம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார்.
உலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோ கெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் முகேஷ் அம்பானி உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்தார் முகேஷ் அம்பானி. ஆனால், திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஏற்பட்ட பக்கவாதத்தால் மறைந்தார்.
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறார் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அம்பானியின் குடும்பம் இரண்டாகப் பிரிந்தது.
திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் தலைமையின் கீழ் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்து கொடுக்கப்பட்டது.
அதன்பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு சுமார் 46 சதவீத வளர்ச்சியை அடைந்தது. 2018ஆம் ஆண்டில் இது 23 சதவீதமாகவும், சந்தை மதிப்பீடு 21 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்து 7.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக" ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், முகேஷ் அம்பானியின் பெயரைப் பட்டியலில் வெளியிட்டது.
அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து தற்பொழுது, இந்திய தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்கரவர்த்தியாக விளங்குகிறார்; முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானியின் அயராத உழைப்பும், அசரவைக்கும் நிர்வாகத்திறமையும்தான் இன்று ரிலையன்ஸ் நிறுவனம் இமயம் அளவிற்கு வளர்ந்து நிற்க காரணமாக அமைந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் திருமணம் :
முகேஷ் அம்பானி, நீத்தா அம்பானி என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.
யார் இந்த நீத்தா அம்பானி?
நீத்தா அம்பானி மும்பையில் புறநகர் பகுதியில் உள்ள ஓர் நடுத்தர குஜராத்திய குடும்பத்தில் பிறந்தவர். வணிகவியலில் பட்டம் பெற்ற இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார்.
மேலும், பரதநாட்டியம் கற்றுக்கொண்ட இவர் பல நாடுகளுக்கு சென்று நடனமாடுவார். அப்போது நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நீத்தாவை கண்ட முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி நீத்தாவை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.
அப்போது ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீத்தா திருமணத்திற்கு பிறகும் ஆசிரியர் பணியை தொடர்ந்தார்.
தற்போது மும்பையில் திருபாய் அம்பானி என்ற பள்ளியை நடத்தி வருவதோடு பள்ளி நிர்வாகியாகவும் உள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.
நீத்தா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையின் தலைவர் ஆவார். இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளுள் இவரும் ஒருவராவார். இந்தியன் ப்ரீமியர் லீக் துடுப்பாட்ட அணிகளுள் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் இவராவார். இவர் கலைப்பொருள் சேகரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
மேலும், இவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக இருந்த முதல் இந்திய பெண்மணி ஆவார்.
முகேஷ் அம்பானியின் ஜியோ..!!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தின் போது ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார், முகேஷ் அம்பானி.
சேவையினை அளிக்கத் தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி இலவச சிம், குரல் அழைப்புகள், தரவு என இந்திய டெலிகாம் துறையினையே 4ஜி சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ ஆட்டிப்படைத்தது.
ஜியோ சேவை வணிக ரீதியாகத் துவங்குவதற்கு முன்பே 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் லைப் பிராண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
பின்னர் மைஜியோ, ஜியோசாட், ஜியோ பிளே, ஜியோ ஆன் டிமேண்ட், ஜியோ பீட்ஸ், ஜிஓ மேக்ஸ், ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ், ஜியோ டிரைவ், ஜியோ ஜாயின், ஜியோ மனி மற்றும் ஜியோ செக்யூரிட்டி போன்ற செயலிகளையும் அறிமுகம் செய்தது.
அதன்பின் இறுதியாக செப்டம்பர் 1ம் தேதி ஜியோவின் இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு சேவைகள் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் வரை முதற்கட்டமாக இலவசமாக வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தரவு சேவைகளை அளித்து வந்த ஜியோ மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க மேலும் 3 மாதங்களுக்குத் தரவினை மட்டும் குறைத்து இலவசமாகச் சேவையினை வழங்கியது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜியோ நிறுவனம் பல மில்லியன் பயனர்களைப் பெற்று இருந்தது.
டிஜிட்டல் ஆக்ஸிஜன் :
முகேஷ் அம்பானி, ஜியோ சிம் கார்டுகளை அறிமுகப்படுத்திப் பேசியபோது கூறிய வார்த்தைகளில் மிக முக்கியமானது 'டிஜிட்டல் ஆக்ஸிஜன்".
உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது, காலத்திற்கேற்ப நாமும் மாற வேண்டும். நீங்கள் டிஜிட்டல் உலகில் இல்லையெனில், வாழ்க்கையில் பின்தங்க நேரிடும். வாழ்க்கையை வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே டிஜிட்டல் உலகில் டேட்டா மிக முக்கியம்.
டிஜிட்டல் உலகில் டேட்டாதான் ஆக்ஸிஜன். அதற்காகவே எங்களின் படைப்பாக உருவாகியுள்ளது ஜியோ என்று கூறினார்.
ரிலையன்ஸ் அறிமுகம் செய்த 4ஜி ரக போன் :
ரூ.0 விலையில் ஜியோ போன் கிடைக்கும் என்ற அதிரடி அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஜியோ போன் பெற விரும்புவோர் டெபாசிட்டாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த 4ஜி ரக போன் பெரும் வரவேற்பை பெற்றது.
மாதந்தோறும் ரூ.153 செலுத்தினால் போதும். போன்கால்கள், எஸ்எம்ஸ், இணைய வசதி, ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பல வசதிகள் இந்த போனில் இருந்தது.
ஜியோ போனின் சிறப்புகள் :
ஜியோ போனில், நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப்.எம் ரேடியோ, டார்ச் லைட், ஹெட்போன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, தொலைப்பேசி எண் சேகரிப்புகள், தொலைப்பேசி பதிவுகள், ஜியோ செயலிகள் போன்ற வசதிகளும் இதில் இருந்தன.
இதே போன்று ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ போன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ போன் கேபிள் டிவியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.
இதுபோன்ற ஏராளமான அதிரடி சலுகைகளும், சிறப்புகளும் கொண்டதாக இருந்தது இந்த ஸ்மார்ட்போன். எனவே, இதற்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவிற்கான ஸ்மார்ட் போன் :
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போன் இளம் இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான ஸ்மார்ட் போன் என்று ஜியோ இந்த போனிற்கு அடைமொழி சூட்டியுள்ளது.
ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவை :
முகேஷ் அம்பானி, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை இந்தியா முழுவதும் 1100 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 'ஜியோ ஜிகா ஃபைபர் மூலம் 600 டி.வி சேனல்களும், ஆயிரக்கணக்கான படங்களும், லட்சக்கணக்கான பாடல்களையும் கேட்க முடியும்".

மேலும் ஹங்காமா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம், ஜியோ போன் பயன்படுத்துவோர், தங்கள் பழைய போனை 501 ரூபாய்க்கு கொடுத்து அதற்கு பதிலாக புதிய போனை வாங்கிக் கொள்ளலாம்.
இதனால் 1,500 ரூபாய் என்று இருந்த ஜியோ போனின் விலை 501 ரூபாய்க்கு குறைக்கப்பட்டது. 'இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும், ஒவ்வொரு தாலுக்காக்களுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் எங்கள் சேவையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு" என்றார் முகேஷ் அம்பானி.
ஜியோ வாடிக்கையாளர்கள் :
பொது மக்களுக்கான சேவையை செப்டம்பர் 2016ல் ஜியோ துவங்கி வெறும் 2 வருடம் மட்டுமே ஆன நிலையில் இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் இந்தியாவில் தற்போது 50 கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் :
ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்த பிறகு நாடு முழுவதும் மறைமுகமாக 10 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும் :
2010 - ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் 'குளோபல் விஷன் விருது".
என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010ஆம் ஆண்டின் 'சிறந்த வர்த்தக தலைவர் விருது".
பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010ஆம் ஆண்டின் 'தொழிலதிபர் விருது".
2010 - பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் 'பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்".
அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் 'அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது" போன்ற பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!
கிரிக்கெட் ; மனதிற்கு பிடித்த விளையாட்டு?
ஐபில் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார். இந்த விஷயத்தை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அம்பானியின் பள்ளி நாட்களில் அவருக்கு பிடித்த விளையாட்டு எது தெரியுமா? - அது நமது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தான்.
அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் :
'வியாபாரம் என்பது ஒரு யுத்தம், அதில் வியாபாரிகள்தான் போராளிகள்" என்பது தான் தற்கால சந்தைகளின் நிலைப்பாடு. ஆனால், அதெல்லாம் வளர்ந்த பின்னர் தான், பள்ளி பருவத்தில் இல்லை என்பதற்கு அம்பானியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்கால வணிகத் தொழிலதிபர்களான ஆதி கோத்ரேஜ் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர்கள் முகேஷ் அம்பானியின் பள்ளி தோழர்கள் மற்றும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸூம் கூட.!
முகேஷ் அம்பானியின் அன்றாட பழக்கங்கள் :
தினமும் நடு ராத்திரி இரண்டு மணி வரை தனது பணியை செய்யும் முகேஷ் அம்பானி காலையில் 10.30 மணிக்கு எழுவதுதான் வழக்கம்.
இவர் தனது தந்தையை போலவே வெள்ளை சட்டையும், டார்க் கலரில் பேண்டும் அதிகம் அணிவார்.
தொலைதூரத்துக்கு வாக்கிங் போவது என்றால் முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடிக்கும்.
முகேஷ் அம்பானி வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்கள் விரும்பும் உணவை கேட்டறிந்து, அதை தன் கையாலேயே அவர்களுக்கு பரிமாறுவது அவரின் வழக்கம்.
விரும்பும் உணவு :
முகேஷ் அம்பானி சைவ உணவை மட்டுமே உண்ணும் பழக்கமுடையவர். பல இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளான சப்பாத்தி, சப்ஜி போன்றவற்றை தான் இவரும் விரும்பி உண்பார்.
சத்தமின்றி சாதிக்கும் திறன் :
முகேஷ் அம்பானியின் கைப்படாத வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைக்கு அவரின் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றே சான்றாகும்.
குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 6,68,000 பீப்பாய்கள் என்கிற கொள்ளளவு கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.
ஒரு குடும்பத்திற்கு 600 வேலையாட்கள் :
உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தக்காரர் முகேஷ் அம்பானி தான். மும்பையில் அமைந்துள்ள இவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவருடன் பணிபுரிபவர்கள் இவர் எந்த காரணத்திற்காகவும் கோபப்பட்டு யாரையும் திட்டி நாங்கள் பார்த்ததில்லை என்று கூறுகின்றனர்.
கார்மீது காதல் :
ஹாக்கியை நேசித்தது போலவே முகேஷ் அம்பானி, கார்களின் மீதும் காதல் கொண்டிருக்கிறார். இதுநாள் வரையிலாக, மொத்தம் 168 கார்களை அவர் சொந்தமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கார்களில் புல்லட் ப்ரூப் மற்றும் குண்டு வெடிப்பை தாக்குப்பிடிக்க கூடிய BMW 760LI காரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அம்பானியால் மட்டுமே முடியும்!
முகேஷ் அம்பானி, பால்கான் 900 என்கிற தனி விமானம் ஒன்றையும் கொண்டுள்ளார், அதில் ஒரே நேரத்தில் வெறும் 14 பயணிகள் மட்டுமே பறக்க முடியும். பால்கான் 900 விமானத்தின் இன்றைய மதிப்பு சுமார் 43.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது தவிர, முகேஷ் அம்பானியிடம் ஒரு ஏ-319 விமானமும் உள்ளது. இது 180 பயணிகளை சுமந்து பயணிக்கும் திறனை கொண்ட ஒரு விமானமாகும். இதன் மதிப்பு 230 கோடி ஆகும்.
இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்!
இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z-வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர் முகேஷ் அம்பானிதான்.
அம்பானியை நம்ப வேண்டாம்?
அம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்தியது. அறிமுகமான அடுத்த 30 நாட்களில் சத்தமில்லாமல் ஒரு விஷயம் நடந்தது அது என்னவென்று தெரியுமா.? இது ஏமாற்று வேலை... அம்பானியை நம்ப வேண்டாம் என்று சந்தேகப்பட்டுக் கொண்டே பெரும்பாலான இந்தியர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்குள் நுழைந்தனர். அதாவது அறிமுகமான ஒரே மாதத்திற்குள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஜியோ அடைந்தது.
அம்பானியின் சம்பளம் :
முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் ரூ.15 கோடி ஆகும். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% பங்களிப்பை ஆட்கொண்டுள்ளது.
ஆன்டிலியா :
ஆன்டிலியா என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வளாகமாகும். இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குனர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.
இது உலகின் மிக விலையுயர்ந்த வீடாக கருதப்படுகின்றது. இதனைப் பராமரிக்க மட்டும் 600 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
முகேஷ் அம்பானியின் மனைவி நீதாவின் விருப்பத்திற்கிணங்க அவர் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த தனிநபரின் வீடாக கருதப்படுகிறது.
ஆன்டிலியாவின் சிறப்பு :
இந்த வீட்டின் சிறப்பு என்னவென்றால் ரிக்டர் 8 அளவு கொண்ட நிலநடுக்கத்தை கூட தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அற்புதம் :
இதன் அற்புதம் என்னவென்றால் கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து செல்லும் கோபுரத்தை போல் மும்பை தொடுவானத்தில் காணப்படும். இந்த ஆன்டிலியா 50 மாடி கோபுரத்தை விட உயரமானது, இதில் 27 மாடிகள் உள்ளது.
வாழும் இடம் :
4,532 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது ஆன்டிலியா. இது தோராயமாக 49,000 சதுரடியாகும். இந்த வீட்டில் அம்பானி குடும்பத்தார் 5 பேர் வசிக்கிறார்கள்.
சகல வசதிகள் :
'ஆன்டிலியா" இல்லத்தில் சலூன், ஸ்பா, திரையரங்கு, ஸ்விம்மிங் பூல், யோகா, நடனம் என்று அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கிறது. வெயிலை தணிக்க ஸ்நோ ரூம் ஒன்றும் உள்ளது.
600 பணியாளர்கள் :
அம்பானி குடும்பத்தாருடன் சேர்ந்து இந்தச் சொகுசு மாளிகையைத் தினசரி பராமரிக்க 600 பணியாளர்கள் வசிக்கிறார்கள். இவர்களை வீட்டின் உரிமையாளர் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். இவர்கள் ஓய்வெடுக்கக் கட்டிடத்தில் தனியாக ஒரு அறை உள்ளது.
தனித்துவம் வாய்ந்தது :
ஒவ்வொரு தளத்திலும் பொதுவான அமைப்பை கொண்டுள்ள ஹோட்டல் அல்லது அபார்ட்மெண்ட்டை போல் அல்லாமல், ஆன்டிலியாவில் எந்த தளமும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டதில்லை, ஒரே மாதிரியான பொருட்களையும் பயன்படுத்தியதில்லை.
ஒன்பதாவது தளத்தில் உலோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் பன்னிரண்டாவது தளத்தில் அதனைப் பயன்படுத்தக்கூடாது. செய்ததையே செய்யாமல், நிலைத்தன்மையுடனான பல்வேறு பாணிகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட கட்டிடக்கலையின் உருவகமாக இந்தக் கட்டுமானம் இருக்க வேண்டும் என்பதே இதன் பின்னணி.
ஆடம்பரம் :
அனைத்து வகையிலும் ஆடம்பரத்தை அள்ளித்தெளிக்கும் ஆன்டிலியாவில், பல்வேறு தளங்களுக்கு சேவையளிக்க ஒன்பது லிஃப்ட்கள் உள்ளது. குடும்பத்தார், விருந்தாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி லிஃப்ட்கள் உள்ளது.
அம்பானி வீட்டில் ஸ்பாவுடன் கூடிய கிரிஸ்டல் சரவிளக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய பாரூம் உள்ளது. இந்த அறையில் உட்புறஃவெளிப்புற மதுபான அருந்தகம், ஓய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.
உட்புறத்தில் பனி உலகம் :
இந்தக் கட்டிடத்தில் தனி பனி உலகம் ஒன்றுள்ளது. இதனை ஐஸ் ரூம் என அழைக்கிறார்கள். குடும்பத்தாரும், விருந்தினர்களும் மும்பை வெயிலில் வதைபடும்போது இந்த அறையை பயன்படுத்துவார்கள்.
கார் நிறுத்தும் தளங்கள் :
ஆன்டிலியாவில் அம்பானி குடும்பத்தாரின் கார்களை நிறுத்த மட்டும் ஆறு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 7வது தளத்தில் தனியார் கார் சேவை மையம் உள்ளது.

வீட்டிற்கே ஹெலிகாப்டர் :
ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேட் உள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களுக்காக கட்டுப்பாடு மையத்தை கொண்டுள்ள ஏர் ஸ்பேஸ் தளமும் உள்ளது.
நீ என்ன பெரிய அம்பானியா? என கேட்குறவங்க இதை படிச்சு மலைச்சு போய் இருப்பாங்க...
அம்பானி இதுவரை சாதித்த சாதனைகள் வியத்தகு விஷயங்களே.... இனி வருங்காலத்தில் அம்பானியின் சாதனைகள் எத்தகைய மாற்றத்தை தரப்போகிறது... காத்திருந்து பார்ப்போம்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக