ஒருவரை நாம் திட்டும்போது, மூதேவியே
என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும்,
தென்னிந்தியாவில் ஒரு காலத்தில், மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி
வழிபாட்டிற்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.
தேவிகளின் தோற்றம் :
புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும்
பாற்கடலைக் கடையும்போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே
மூத்த தேவி என்றும், அதன்பிறகு வெளிப்பட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீ
தேவியாகிய லட்சுமி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லட்சுமிக்கு முன் தோன்றியவள்
என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இதுதான் பின் நாளில் மூதேவி
என்று மாறிவிட்டது என்கிறார்கள்.
அவளுடைய தோற்றத்தைப் பொறுத்த வரையில், ஆகம
நூல்களின் படி மூத்த தேவி, அகோரமான மற்றும் அவலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும்,
காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றனர்.
மூத்த தேவி (மூதேவி) யின் வசிப்பிடம்
:
துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல்,
அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத
மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த
இடங்களாகும்.
மூதேவி நம் வீட்டில் தங்காமல் இருக்க
என்ன செய்ய வேண்டும்?
நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு
தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை,
கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
நடைமுறையில் பின்பற்ற வேண்டியவை :
குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற
வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். குளிக்கும்போது, எடுத்தவுடன் தலைக்கு
நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி, பிறகு உடலில் ஊற்றிக்கொண்டு
கடைசியாகத்தான் தலையில் நீரை ஊற்ற வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்து
கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்க
வேண்டும்.
ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது, நம்
உடலில் வந்து அமர்வதற்கு மகாலட்சுமியும், அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர்
போட்டி போட்டு கொண்டு வாசலில் காத்துக்கொண்டு நிற்பார்களாம். நாம் குளித்து
முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி.
முடிவில் அக்காதான் முதலில் சென்று உட்கார வேண்டும் என்கிற நியதிப்படி, நாம்
குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து
அமர்வாள். அதனால், நம் புத்தி வேலை செய்யாது.
ஆகவே, முதலில் முதுகை துடைக்க வேண்டும்.
அப்போதுதான் மூதேவி முதுகில் அமர்வாள். அடுத்தது நம் முகத்தை துடைக்கும்போது
மகாலட்சுமி வந்து முகத்தில் அமர்வாள். எனவே நம் முகம் தெளிவாகவும், சென்ற
இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்து கொண்டால்
மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாக்கி விடுவாள்.
எனவே
மேற்கூறியவாறு நாம் குளித்ததும் முதலில் முகத்தை துடைக்காமல் புத்திசாலித்தனமாக
முதுகை துடைத்து பின் முகத்தை துடைப்போமானால் ஸ்ரீதேவியின் அருள் நமக்கு நிச்சயம்
கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக