சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள வடக்குக்
கடற்கரை காவல் நிலையத்திலிருந்து விசாரணைக் கைதி அருண் என்பவர் கைவிலங்கோடு நேற்று
எஸ்கேப் ஆனார். அவர் எங்கு சென்றார் என்று வடக்குக் கடற்கரை காவல் நிலைய போலீஸார்
விசாரித்தனர்.
கைதி தப்பியது
எப்படி என்றும் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்டமாக சிசிடிவி கேமரா பதிவுகளை
போலீஸார் ஆய்வு செய்து அருணை தேடினர். தப்பியோடிய அருண், மீண்டும் போலீஸாரின்
பிடியில் சிக்கியுள்ளார். இந்த முறை அவரைக் கூடுதல் கவனத்தோடு போலீஸார்
கண்காணித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மண்ணடி பகுதியில்
பிளாட்பாரத்தில் தங்கியிருப்பவர் அருண் (25). இவருக்கு குடும்பம் எதுவும்
கிடையாது. அநாதையான அருண், கிடைத்த வேலைகளைச் செய்து இரவில் பிளாட்பாரத்தில் தங்கி
தூங்குவது வாடிக்கை.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அருணுடன்
பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சிறுமியிடம் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருணை கையும் களவுமாகப் பிளாட்பாரத்தில்
தங்கியிருந்தவர்கள் பிடித்து வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அருணிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வேலையில் போலீஸார்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அருணை காவல் நிலையத்தில் உள்ள சிறையில்
அடைக்காமல் (அறை) கைவிலங்கோடு வெளியில் உட்கார வைத்திருந்துள்ளனர். அப்போது
போலீஸாரை ஏமாற்றிவிட்டு கைவிலங்கோடு அருண் தப்பியுள்ளார்.
காவல் நிலையத்தின் முன்பகுதியில் எப்போதும் மக்கள்
நடமாட்டம் இருக்கும். அதோடு பாதுகாப்புக்காக போலீஸாரும் இருப்பார்கள். இதனால்
காவல் நிலையத்தின் பின்பக்கம் வழியாக அருண் தப்பியுள்ளார். ஒல்லியான உடம்பைக்
கொண்ட அருண், காவல் நிலைய பின்பக்கத்தில் உள்ள ஓட்டை வழியாகத் தப்பிச் சென்றது
தெரியவந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அருணை மீண்டும் கைது
செய்துள்ளோம் என்றனர்.
இந்தநிலையில்அருண், நேற்றிரவு மண்ணடியில் வழக்கமாகப்
படுத்து தூங்கும் பிளாட்பாரத்துக்கு வந்துள்ளார். அவரைப் பார்த்த பொதுமக்கள்,
உடனடியாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச்
சென்ற போலீஸார், அருணைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.ஒல்லியான
உடம்பைக் கொண்ட அருண், காவல் நிலைய பின்பக்கத்தில் உள்ள ஓட்டை வழியாக தப்பிச்
சென்றது தெரியவந்துள்ளது.
அருண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும் காவல்
நிலையத்திலிருந்து தப்பி ஓடியது தொடர்பாகவும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவல் நிலையத்திலிருந்து அருண் தப்பியதுபோல சுனாமி நகரைச் சேர்ந்த அசோக் (20)
என்பவரும் காவல் நிலையத்திலிருந்து தப்பியுள்ளார்.
அவரை போலீஸார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அருண்,
சிக்கிய பிறகே வடக்கு கடற்கரை போலீஸார் நிம்மதியடைந்துள்ளனர். அருண் தப்பியது
குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு வடக்குக் கடற்கரை காவல் நிலைய போலீஸார்
அளித்துள்ள விளக்கத்தில், விசாரணைக் கைதி அருணை பாதுகாப்போடு வைத்திருந்தோம்.
சிறுநீர் கழிக்க வெளியில் சென்றவர், கைவிலங்கோடு தப்பியுள்ளார்.
காவல் நிலையத்தின் பின்பக்கத்தில்
உள்ள ஓட்டை வழியாகத்தான் அவர் எஸ்கேப் ஆகியுள்ளார் என்று கூறியுள்ளனர். இருப்பினும்
கைதி பாதுகாப்பில் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று போலீஸார் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக