Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 64


  சிவபெருமானின் அமைதியை புரிந்துக்கொள்ள இயலாமல் சிவகணங்களும், தேவர்களும் அமைதி கொண்டனர். ஏனெனில், நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும் எதிர்செயல் உண்டு என்பதை அறிந்தவராயிற்றே.

அந்தப்புறத்தின் வெளியே இருந்த அமைதியை கண்ட தேவியின் தோழிகள் வாசலுக்கு வந்து கணனை தேடினார்கள். ஆனால், அவர்கள் அங்கு கண்டது சிரம் இல்லாமல் இருக்கும் கணனின் உடலைத் தான். மேலும், அங்கு சிவகணங்களும் நின்று கொண்டிருந்தன.

இவையனைத்தையும் கண்ட தோழிகள் தேவியிடம் விரைவாக சென்று இச்செய்தியினை கூறினார்கள். தேவி நம் கணன் இறந்து விட்டான் என்றும், தேவர்கள் அனைவரும் சேர்ந்து மும்மூர்த்திகளுடன் இணைந்து கணனை கொன்று விட்டனர் என்றும் பதற்றத்துடன் கூறினார்கள்.

இதைக்கேட்ட தேவி நான் கணனுக்கு துணையாக இருக்க இரு சக்திகளை அனுப்பினேன். அவை எங்கே என கேட்டார். அதற்கு தோழிகள் தேவியிடம் அச்சக்திகள் அனைத்தையும் திருமால் தனது சக்ராயுதத்தால் அழித்து விட்டார் என்று கூறினார்கள்.

நீர் கூறவில்லை எனில், நானே அறிவேன் எனக் கூறி தன்னுடைய ஞானப்பார்வையால் காலத்தை பின்னோக்கி கடந்து சென்று நிகழ்ந்த அனைத்தையும் பார்வதி தேவி கண்டார்.

தன் கணவரும் கணனின் தந்தையுமான சிவபெருமான் தனது கரங்களில் இருந்த சூலாயுதத்தால் கொன்றார் என்பதனை பார்வதி தேவி தெரிந்து கொண்டார். இதைக் கண்டதும் கோபத்தின் எல்லையற்ற நிலைக்கு பார்வதி தேவி சென்றார்.

தன் மைந்தன் இறந்ததையும், யாரால் கொல்லப்பட்டார் என்பதனையும் அறிந்த பார்வதி தேவி தம் கணனின் இறப்பிற்கு காரணமாக இருந்த அனைத்து தேவர்களும் அழியட்டும் எனக் கூறி தன்னிடமிருந்த கோப வடிவத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான சக்திகளை உருவாக்கினார்.

பார்வதி தேவி கோப வடிவத்துடன் உருவாக்கிய சக்திகள் தேவியிடம், நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டனர். தேவியின் கோப வடிவங்களான துர்க்கை, சண்டி, சந்திர காண்டா மற்றும் கூஷ்மாண்டா போன்ற சக்திகளை கண்டதும் நாரதர் இனி என்ன நிகழுமோ என எண்ணி நாராயணா... நாராயணா... என சொல்லி அவ்விடம் விட்டு மறைந்தார்.

அப்போது பார்வதி தேவி அச்சக்திகளுக்கு இக்கணம் முதல் தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் என அனைவரையும் அழித்து விட வேண்டும் என்றும், என் மகன் இல்லாத இந்த பிரபஞ்சம் யாவும் அழிய மகா பிரளயத்தை தோற்றுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பார்வதி தேவியின் ஆணையை ஏற்ற சக்திகள் வாயிலில் இருந்த தேவர்களை நெருங்கி அவர்களை அடித்து அவர்களை துன்புறுத்தி கொல்லத் தொடங்கின. தேவர்கள் மட்டும் அல்லாமல் எம்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிர்கள் மற்றும் அசுரர்கள் என அனைத்தையும் அழிக்க தொடங்கின. ஏனெனில், சிவனின் சரி பாதியை கொண்டவர் பார்வதி தேவி.

எம்பெருமானான சிவபெருமான் காலன் எனில் தேவி பார்வதி காளி ஆவார்கள். இச்சக்திகளிடம் சிக்கிக்கொண்ட தேவர்களையும், சிவகணங்களையும் தவிர மற்றவர்கள் சிவபெருமானிடம் சரண் அடைந்தனர்.

அவ்வேளையில் நாரதர் அங்கு தோன்றி தான் கண்ட காட்சிகளை எடுத்துக் கூறினார். பரம்பொருளே சர்வேஸ்வரா!! தேவியின் கோபம் குறையவில்லை எனில் இந்த பிரபஞ்சமே அழியக்கூடிய மகா பிரளயமே தோன்றிவிடக்கூடும் எனக் கூறி மும்மூர்த்திகளிடம் பணிந்து நின்றார்.

எம்பெருமானே தேவர்களாகிய நாங்கள் கணனை எதிர்த்த செய்தியை அறிந்த தேவி, மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். கணன் தேவர்கள் மூலம் இறந்தார் என்பதனை அறிந்த உமையாம்பிகையின் கோபம் கட்டுக்கடங்காமல் எல்லையை தாண்டி விட்டது. சர்வேஸ்வரா இனி தாங்கள் தான் தேவியின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த முழு பிரபஞ்சமே அழியும் நிலை நேரிடும் எனக் கூறி பணிந்தனர் உயிர் பிழைத்த தேவர்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக