அமெரிக்காவுக்கு
மட்டுமே இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு இலட்சம் டேட்டா சயின்ஸ் பொறியாளர்கள்
தேவைப்படுவார்கள் என்கிறது மெக்கன்சி ஆய்வு. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில்
நுட்ப உலகை வசீகரிக்கப் போகும் வேலை இந்த தகவல் அறிவியல் தான் கூகிள் நிறுவன தலைமை
பொருளாதார அதிகாரி ஹான் வாரியன். தகவல் அறிவியல் எனும் துறை இப்போதே பெரும்பாலான நிறுவனங்களின்
முதுகெலும்பாகத் தான் இருக்கிறது. அப்படி வசீகரிக்கும் நிறுவனங்களில் மூன்று
நிறுவனங்களைப் பற்றி நாம் கடைசியில் பார்ப்போம் !
‘இந்த தகவலை எல்லாம் வெச்சு என்ன செய்ய
போறோம்” என்கிற மனநிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது.
எந்த தகவலை வைத்தும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் சிந்தனை உருவாகிவிட்டது.
தகவல் என்பது பொன்முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டது. தகவல் என்பது பணம் காய்க்கும்
மரமாகிவிட்டது. அதனால் தான் எல்லா மென்பொருட்களும், நிறுவனங்களும் தகவல்
சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. அது பல வேளைகளில் தனி மனித சுதந்திரத்துக்கு
வேட்டு வைப்பதாகவும் அமைந்து விடுகிறது என்பது தனிக்கதை.
எனவே இப்போதெல்லாம் நிறுவனங்கள் தங்கள்
அடிப்படை சிந்தனையாக எழுதிக் கொள்ளும் விஷயம் இது தான், “தகவல்கள் எல்லாமே ஏதோ ஒரு
வகையில் தேவையானவை”. ஒரு தகவலை சாதாரணமான ஒரு எண்ணாகவோ, எழுத்தாகவோ பார்க்காமல்
அதன் பின்னணியில் இயங்குகின்ற விஷயங்களை ஊகித்து அறிவதிலும், கணித்து
கண்டுபிடிப்பதிலும் இருக்கிறது தகவல் அறிவியலின் முதல் வெற்றி.
தகவல்களுக்கு எடை உண்டு ! தகவல்கள்
காற்றைப் போல அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாலும் அதை சரியான வகையில்
கட்டுப்படுத்தி கட்டி வைப்பவர்களுக்கு அது செல்வத்தை அள்ளித் தருகிறது.
காற்றிலிருந்தும் தகவலை சேகரிப்பது தகவல் அறிவியலின் தேவை. அதாவது, யாருக்கும்
தேவையில்லை என நினைக்கும் விஷயங்கள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையே ஒட்டு
மொத்தமாய்ப் புரட்டிப் போட முடியும்.
இப்போது இன்னொரு சிந்தனை வேண்டும்.
“நம்மிடம் இருக்கின்ற பிரச்சினை இன்னது.. இதை எப்படி நம்மிடம் இருக்கின்ற தகவலோடு
இணைத்து முடிச்சுப் போடுவது ? இதற்குத் தான் மென்பொருட்களும், அல்காரிதங்களும்
உதவிக்கு வருகின்றன. ஆனால் ஒரு சாதாரண நபராக ஒரு பிரச்சினையையும், அதை எப்படி
இந்தத் தகவல் தீர்த்து வைக்கலாம் எனும் சிந்தனையும் இருக்க வேண்டியது அவசியம்.
இப்போது அடுத்த நிலை ! தகவலைப் புரிந்து
கொண்டாயிற்று. அதை எப்படி பிரச்சினையோடு இணைத்து முடிவை நோக்கி நகர்வது என்பதையும்
அறிந்தாயிற்று. அதைச் செயல்படுத்தக்கூடிய கட்டமைப்பு நிறுவனத்துக்கு இருக்கிறதா ?
என்பதைப் பார்க்க வேண்டும். வண்டி நுழையாத தெருவுக்குள் வீட்டை கட்டி வைத்தால்,
பென்ஸ் கார் வாங்கினாலும் பயனில்லை அல்லவா ? எனவே செயல்படுத்தப் பட வேண்டிய
கட்டமைப்பை உருவாக்குவதும், சரியான நேரத்தில் அதை செயல்படுத்துவதும் அவசியம்.
எதிர்காலத்தில் இந்த தகவல் அறிவியல்
என்பது , ‘ரியல் டைம் டேட்டா’ அதாவது தகவல்கள் வர வர அதை வைத்து ஆட்டோமெடிக்காக
அலசி முடிவுகள் எடுக்கும் முறை வந்து விடும். இப்போதைக்கு இருக்கின்ற தகவல்களைக்
குவித்து, அதை அலசி தான் முடிவுகளை எடுக்கிறோம். அதன் பின் வருகின்ற அதிகபடியான
தகவல்கள் ஆட்டோமெடிக்காக பயன்படுத்தப்படும் சூழல் உருவாகும்.
இப்போது தகவல் அறிவியல் துறையில்
கோலோச்சிக் கொண்டிருக்கும் டாப் 3 நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. கூகிள் !
நம்மை ரகசியக் கண் கொண்டு பார்த்துக்
கொண்டே இருக்கும் நிறுவனம் என நீங்கள் கூகிளை சொல்லலாம். ஜிமெயிலில் நீங்கள்
அனுப்புகின்ற ஒவ்வொரு மெயிலும் வாசிக்கப்படலாம், பிக் டேட்டா அனாலிசிஸ்
செய்யப்படலாம், அந்தத் தகவல்களை பிஸினஸ் தேவைக்காய் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, நீங்கள் ஒரு விமான டிக்கெட்
புக் செய்கிறீர்கள். அதை கூகிள் மெயிலுக்கு அனுப்புகிறீர்கள் என வைத்துக்
கொள்ளுங்கள். அது அந்தத் தகவல்களையெல்லாம் படித்து விட்டு, அங்கே அந்த நாளில்
உங்களுக்கு ஹோட்டல் வேண்டுமா, கார் வேண்டுமா, வேறு ஏதாவது வசதிகள் வேண்டுமா என
டிஜிடல் நச்சரிப்பை ஆரம்பிக்கும்.
எதற்கெடுத்தாலும் நாம் கூகிளைத் தான்
அழைத்து, ‘தேடுதல்’ செய்கிறோம் இல்லையா ? அந்த தகவல்களெல்லாம் அவர்களுடைய சர்வரைக்
கடந்து தான் செல்கின்றன. அவற்றில் எவையெல்லாம் தேவைப்படுமோ அவற்றையெல்லாம் கூகிள்
சேமித்துக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால், தனது நிறுவனத்தில் பணிசெய்யும்
ஊழியர்களுக்கு என்ன கொடுத்தால் குஷியாவார்கள் என்பதையும் இந்த தகவல் அறிவியல்
கண்டறிந்து சொல்கிறது.
நீங்கள் யூடியூபில் பார்க்கின்ற
வீடியோக்கள் அடிப்படையில் உங்களுக்கு புதிய வீடியோக்களை அறிமுகம் செய்கிறது.
அதன்பின் இப்படிப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் வேறென்ன பார்க்கலாம் என்பதைக்
கணிக்கிறது. எத்தனை முறை பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை எடை போடுகிறது.
எந்த நேரத்தில் எந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் என்ன குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை
அல்காரிதம் மூலம் சேமிக்கிறது. அதன் அடிப்படையில் விளம்பரங்களோ, வசீகரங்களோ தந்து
வலையில் வீழ்த்துகிறது.
2. அமேசான் !
அமேசான் நிறுவனத்தைப் பற்றி
சொல்லவேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்த எல்லோருக்குமே அந்த அனுபவம் நிச்சயம்
இருக்கும். ஒரு பொருளை வாங்க அந்தத் தளத்துக்குப் போனாலே உங்களை வரவேற்று
உங்களுக்குத் தேவையானவற்றைத் தந்து உங்களை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.
உங்களுடைய தேடுதல் பேட்டர்ன், உங்களுடைய
பர்சேஸ் பேட்டர்ன் போன்றவற்றையெல்லாம் வைத்து நீங்கள் ஒரு பொருளை வாங்குவீர்களா,
மாட்டீர்களா என்பதை அது கணிக்கும். உங்களுடைய வாங்கும் திறமைக்குத் தக்க பொருட்களை
மட்டுமே அது உங்களுக்கு பரிந்துரை செய்யும். மாருதி கார் வாங்கும் அளவுக்கு வசதி
மட்டுமே உடையவர்களுக்கு அது ஆடி காரை பரிந்துரை செய்யாது. அந்த அளவுக்கு அதை
அறிவுசார் மென்பொருளாய் மாறியிருக்கிறது. அதன் காரணஅது ம் ஆர்டிபிஷியல்
இன்டலிஜென்ஸ் கலந்த பிக் டேட்டா என்பதில் சந்தேகமில்லை.
அது இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள்
ஒரு பொருளை வாங்குவீர்களா இல்லையா என்பதைக் கணித்து, வாங்குவீர்கள் என
மென்பொருளின் அல்காரிதம் சொன்னால் அந்தப் பொருளை அடுத்திருக்கும் ஒரு கடைக்கோ,
கோடவுனுக்கோ அது அனுப்பவும் செய்கிறது. இப்படி தனது வளர்ச்சியின் முதுகெலும்பாய்
தகவல் அறிவியலைத் தான் கட்டி வைத்திருக்கிறது.
3, ஃபேஸ் புக் !
பேஸ்புக் தகவல் அறிவியலில் ஒரு மிகப்பெரிய
உயரத்தை எட்டிய கம்பெனி. இந்த நிறுவனத்தின் பாசிடிவ் விஷயம் என்னவென்றால்,
அவர்களிடம் எக்கச்சக்க தகவல்கள் இருக்கின்றன என்பது தான். ஒன்றிரண்டு அல்ல,
அவர்களிடம் சுமார் 220 கோடி பேருடைய தகவல்கள் இருக்கின்றன. எல்லாமே தனிப்பட்ட
தகவல்கள். இவற்றை வைத்துக் கொண்டு உங்களுடைய தேவைகளையெல்லாம் அது அறிந்து கொள்ளும்.
அப்படியே உங்களோடு தொடர்பில்
இருப்பவர்களைப் பார்த்து, யாரையெல்லாம் வசீகரிக்கலாம். என்னென்ன பொருட்களை
விற்கலாம். என்பதையெல்லாம் கணக்கு போடும். விளம்பரங்களின் மூலம் மிகப்பெரிய
லாபத்தை அடைகின்ற நிறுவனங்களில் ஒன்று பேஸ்புக் என்பதில் சந்தேகமேயில்லை.
இவையெல்லாம் நமக்குத் தெரிந்த பெரிய
கம்பெனிகள். அதற்காக அவை மட்டும் தான் இந்த தகவல் அறிவியல் துறையில் கோலோச்சும்
நிறுவனங்கள் என்பதில்லை. சின்னச் சின்ன நிறுவனங்கள் கூட தகவல் அறிவியலை தங்களுடைய
பிஸினஸ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றன.
“சரி பண்றவன் பண்ணிட்டு போறான்”, என
நிறுவனங்கள் அலட்சியமாய் இருந்து விடவும் முடியாது. பொம்மலாட்டக் குதிரையை ரேஸ்
டிராக்கில் விட்டது போல ஆபத்தாகிவிடும். விரைவிலேயே பிஸினஸை மூட்டை கட்டி வைப்பதைத்
தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்.
தகவல் அறிவியலின் சிந்தனை கொஞ்சம்
பழையதாய் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பம் அதை மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச்
சென்றிருக்கிறது. அதனால் தான் இன்றைக்கு தகவல் அறிவியல் பொறியாளர்களின் தேவை
முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு எகிறியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக