Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்- தமிழகத்தில் எந்தெந்த தேதிகளில் நடைபெறுகிறது!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பாண்டில் எந்தெந்த தேதிகளில் நடைபெறுகிறது என்று இங்கே அறிந்து கொள்ளலாம்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், நம் மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றவை.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மக்கள் திரண்டு வருவர். இதேபோல் திருச்சி, நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ஆம் தேதி தைப் பொங்கல் திருநாளில் நடைபெறுகிறது.
 
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போலவே அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து கமிட்டி உருவாக்கி போட்டிகள் நடத்த மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினத்தன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
அங்குள்ள வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், காளைகள் தேர்வு வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பாலமேடு ஜல்லிக்கட்டு குழு கூறியுள்ளது. வரும் 17ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
 
இதைக் காண தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிறப்பு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி, மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் உள்ளிட்ட இடங்கள் காண்பிக்கப்படும்.
இதுதொடர்பான விவரங்களை www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் கிராமத்தில் வரும் 18ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இம்முறை 200 காளைகள் கூடுதலாக களமிறக்க விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி கிராமத்தில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை கிராமத்தில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக