ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகையில் ரூ.1.23 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அனைத்துப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒரே வரி - ஒரே நாடு - ஒரே சந்தை என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜிஎஸ்டியால் மாநிலங்கள் சந்திக்கும் இழப்புக்கு குறிப்பிடத்தகுந்த இழப்பீடு ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
முதற்கட்ட இழப்பீட்டுக்கான கால வரம்பு 2022 ஜூன் 30ஆம் தேதி நிறைவடையும் நிலையில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்று மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்திய மாநிலங்களுக்கு 2022 ஜூன் மாத நிறைவில், வரவேண்டிய இழப்பீட்டுத் தொகையில் ரூ.1.23 லட்சம் வரையில் குறைபாடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை குறைவாகவே கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் மாநிலங்கள் மற்ற மூலங்கள் வாயிலாகத் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் அல்லது தங்களது செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இல்லையென்றால் மாநிலங்களுக்குக் கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருவாயில் பின்னடைவு ஏற்பட்டு வருவதாலேயே அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தியதிலிருந்து ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் இலக்கு கடினமாகவே இருந்து வருகிறது. வருவாய் இழப்பால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் பஞ்சாப், ஒடிசா, கோவா, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக