கூத்தனூர் சரஸ்வதி கோவில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும்.
கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது.
தல வரலாறு :
சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும், சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர்.
இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.
அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.
சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.
தலச் சிறப்பு :
தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோவிலாகும்.
சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார்.
இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் 'கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோவிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது.
பிராத்தனை :
பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு.
கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக