வந்தியத்தேவன் தனக்கு உணர்வு வந்து கண்ணைத் திறந்து பார்த்தபோது, தன் கண்முன்னே பல்லாயிரம் தீபச் சுடர்கள் மின்னுவதைக் கண்டான். எந்தக் கோவிலிலே இவ்வளவு அலங்காரமாக லட்சதீபம் ஏற்றியிருக்கிறார்கள் என்று வியந்தான். பின்னர், அவை தீபங்கள் அல்லவென்றும் வானத்தில் சுடர்விடும் நட்சத்திரங்கள் என்றும் உணர்ந்தான். படகில் தான் அண்ணாந்து படுத்திருப்பதையும் தன் இடுப்பைச் சுற்றி ஈரத்துணியின் மீது கயிறு ஒன்று கட்டியிருப்பதையும் அறிந்தான். ஜிலுஜிலுவென்று குளிர்ந்த காற்று அவன் உடல் மீது பட்டு அவனுக்கு எல்லையற்ற சுகத்தையும் அமைதியையும் அளித்தது. அமைதியான கடலில் எழுந்த ஓங்கார நாதம் அவன் உள்ளத்தில் அபூர்வமான சாந்தியை உண்டாக்கியது.
அந்த நாதத்தினிடையே ஒரு கீதமும் கேட்டது. அது என்ன கீதம்? அதை அவன் இதற்கு முன் எங்கே, எப்பொழுது கேட்டிருக்கிறான்?
'வாரிதியும் அடங்கி நிற்க
மாருதமும் தவழ்ந்து வர
காரிகையென் உள்ளந்தனிலே
காற்று சுழன் றடிப்பதுமேன்?
அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?"
ஆகா! அந்த விசித்திரமான பெண்! பூங்குழலி! சற்று நிமிர்ந்து உட்கார்ந்து எதிரே பார்த்தான். ஆம், அவள்தான்! படகு தள்ளிக் கொண்டிருக்கிறாள்! அந்தச் சோக கீதத்தைப் பாடிக்கொண்டு படகு வலிக்கிறாள்! காரிருளிலே ஒரு மின்னல் மின்னிப் பல பொருள்களை ஒருநொடிப் பொழுதில் காட்டிவிடுவது போல முன்னிரவில் நடந்ததெல்லாம் வந்தியத்தேவனுக்குப் பளிச்சென்று ஞாபகம் வந்தது. அதாவது, அவன் கடலில் தத்தளித்தபோது பூங்குழலியும் கடலில் குதித்து அவனை நோக்கி வந்தது வரையிலேதான். பிறகு நடந்தது ஒன்றும் அவனுக்கு நினைவில் இல்லை. தன்னை அந்தப் பெண் காப்பாற்றிப் படகில் ஏற்றியிருக்க வேண்டும். படகு அசையும்போதுதான் மீண்டும் கடலில் விழுந்து விடாமலிருப்பதற்காக இடுப்பில் கயிற்றைச் சுற்றிப் படகின் குறுக்குக் கட்டையில் சேர்த்துக் கட்டியிருக்கிறாள். கயிறு உடம்பின் தோலில் பட்டு வலிக்காதபடி அரை ஆடையின் மீது சுற்றிக் கட்டியிருக்கிறாள். இடுப்புத்துணியைச் சுற்றியிருந்த அரைச் சுருளை வந்தியத்தேவன் தொட்டுப் பார்த்துக் கொண்டன். பணமும் ஓலையும் பத்திரமாயிருக்கக் கண்டான்.
'ஆகா! இந்தப் பெண்மீது தான் சந்தேகங் கொண்டது எவ்வளவு பெரிய தவறு! வேறு விதமான துர்நோக்கம் இவளுக்கு இருந்தால் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லையே? கை சளைத்து உணர்விழந்த தன்னைக் கடலிலிருந்து படகில் ஏற்றுவதற்கு இவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்? எப்படித்தான் தன்னந்தனியாகச் செய்தாளோ? அபூர்வமான நங்கை இவள்!"
'இதோ அவள் எழுந்திருக்கிறாளே, ஏன்? தான் விழித்து விட்டதைப் பார்த்து விட்டுத்தான் தன்னை நெருங்கி வருகிறாளோ? வந்து என்ன செய்யப் போகிறாள்? இல்லை! இல்லை! வேறு ஏதோ செய்கிறாள். ஆகா! பாய்மரத்தில் பாயைக் கட்டப் போகிறாள்! எவ்வளவு கடினமான வேலை! அதுவும் தன்னந்தனியாகச் செய்வது?"
'பூங்குழலி! பூங்குழலி!"
'ஓகோ! விழித்துக் கொண்டு விட்டாயா?"
'என் கட்டை அவிழ்த்து விடு! நானும் உனக்கு உதவி செய்கிறேன்" என்றான்.
பூங்குழலி 'நீ சும்மா இருந்தால் போதும் அதுவே பெரிய உதவி. கயிற்றை அவிழ்க்க வேண்டுமென்றால் நீயே அவிழ்த்துக் கொள்ளலாம். ஆனால் மறுபடியும் கடலில் குதித்துவிடாதே!"
வந்தியத்தேவன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுக்கொண்டான்.
பூங்குழலி பாய் மரத்தைத் தூக்கி நிறுத்தினாள். அதில் பாயை விரித்துப் பறக்க விட்டாள்! படகு இப்போது உல்லாசமாகச் சென்றது. விரைவாகவும் சென்றது.
'சமுத்திரகுமாரி!"
'ஏன்?"
'தாகமாயிருக்கிறது!"
'உப்புத்தண்ணீர் குடித்திருக்கிறாய் அல்லவா? தாகமெடுக்காமல் என்ன செய்யும்?"
சுரைக் குடுக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு சமுத்திரகுமாரி வந்தியத்தேவன் அருகில் வந்தாள்.
'உனக்குச் சாப்பாடு கூடக் கொண்டு வந்தேன். நீ கடலில் குதித்த போது அதுவும் விழுந்துவிட்டது! நல்ல வேளையாக இந்தச் சுரைக் குடுக்கை தப்பிப் பிழைத்தது."
இப்படிச் சொல்லிக் கொண்டே சுரைக் குடுக்கையை மூடியிருந்த தக்கையை எடுத்து விட்டுக் கொடுத்தாள். வந்தியத்தேவன் அதை வாங்கித் தண்ணீர் குடித்தான்.
தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, 'உன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டு விட்டேன். அதற்காக வருத்தப்படுகிறேன்" என்றான்.
'அது ஒன்றும் பாதமில்லை. நீ யாரோ? நான் யாரோ? பொழுது விடிந்தால் பிரிந்துவிடப் போகிறோம்."
'இப்போது நேரம் என்ன?"
'வானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள். சப்த ரிஷிமண்டலத்தைப் பார்!" என்றாள் பூங்குழலி.
வந்தியத்தேவன் வட திசையில் அடிவானத்தைப் பார்த்தான். அவன் படகு ஏறும்போது பார்த்ததற்கு இப்போது சப்த ரிஷிகள் இடம் மாறிப் பாதி வட்டம் வந்திருந்தார்கள். அந்த அருந்ததி நட்சத்திரம் வசிஷ்டருடன் எப்படி ஓட்டிக் கொண்டே வருகிறது! அதிசயந்தான்! துருவ நட்சத்திரம் மட்டும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. வானவெளியும் மூலைக் கடலும் சேரும் அந்த இடத்தில் துருவ நட்சத்திரம் யுக யுகமாக நிலைத்து நின்று வருகிறது! எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டு வருகிறது. துருவ நட்சத்திரம்! அதை யாருக்கோ உதாரணமாகச் சொன்னார்களே? யார் சொன்னது? யாரைச் சொன்னது? ஞாபகம் வருகிறது. குடந்தை சோதிடர் சொன்னார். இளவரசர் அருள்மொழிவர்மருக்கு வடதுருவத்தை உதாரணமாகச் சொன்னார். இளவரசரைப் பார்க்கும் பேறு நமக்கு உண்மையிலேயே கிடைக்கப் போகிறதா? இந்தப் பெண்ணின் உதவியினால் கிடைக்க போகிறதா?
பூங்குழலி தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
'நேரம் என்னவென்று தெரிந்ததா? மூன்றாம் ஜாமத்தில் பாதி நடக்கிறது. காற்றுத் திரும்பி விட்டது. பொழுது விடிய நாகத்தீவுக்குப் போய்விடுவோம்" என்றாள்.
'நாகத் தீவா?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.
'ஆமாம். இலங்கையின் வடபகுதி ஓரத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நாகத் தீவு. அதில் இறங்கினால் மறுபடியும் கடலைக் கடக்கும் அவசியமில்லாமல் கரை வழியாகவே இலங்கைத் தீவை அடைந்து விடலாம்..." என்றாள்.
வந்தியத்தேவன், 'என்னை இறக்கிவிட்ட பிறகு நீ என்ன செய்வாய்?..."
'என்னை பற்றி உனக்கு என்ன கவலை?" என்றாள் பூங்குழலி.
'எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தாய் அல்லவா? உன்னிடம் நான் நன்றி செலுத்த வேண்டாமா? என்னிடம் ஏதோ பிரதி உபகாரம் கேட்கப் போவதாகச் சொன்னாயே, அது என்ன?" என்றான்.
'அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டு விட்டேன். உன்னிடம் ஒன்றும் நான் கேட்கப் போவதில்லை. நீ நன்றி இல்லாதவன்."
அவள் அவ்விதம் குற்றம் சாட்டுவதற்குக் காரணம் உண்டு என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு தடவை அரைச்சுருளைத் தடவிப் பார்த்துக்கொண்டு ஓலை இருக்கிறது என்று உறுதி பெற்றான்.
'சமுத்திரகுமாரி! நேற்று முன் இரவில் உன்னைச் சந்தேகித்து நடந்து கொண்டதை நினைத்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதற்காக என்னை மன்னித்துவிடு!"
'ஆகட்டும். நீயும் அதை மறந்துவிடு! நடக்க வேண்டியதைப் பற்றி யோசி! இலங்கையில் உன்னை நான் இறக்கிவிட்ட பிறகு என்ன செய்வாய்? இளவரசர் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?"
'இந்தக் கடலைக் கடப்பதற்கு எனக்கு உதவி செய்த கடவுள் அதற்கும் உதவி செய்வார்!"
'கடவுளிடம் உனக்கு மிக்க நம்பிக்கை போலிருக்கிறது. நம்மைப் போன்ற அற்ப மனிதர்களின் காரியங்களில் கடவுள் சிரத்தை கொள்கிறார் என்று நினைக்கிறாயா?"
'அவ்வளவு தூரம் நான் தத்துவ விசாரணை செய்ததில்லை. ஏதாவது கஷ்டமோ, அபாயமோ நேர்ந்தால் கடவுளைப் பிரார்த்திப்பேன். கடவுளும் சமயத்தில் உதவி செய்வார். இந்தக் கடலில் எனக்குப் படகு தள்ளுவதற்காக கடவுள் உன்னை அனுப்பி வைத்தார் அல்லவா?"
'அவ்வளவு கர்வம் உனக்கு வேண்டாம். நான் உனக்காகப் படகு தள்ள வரவில்லை. என்னை உனக்கு உதவி செய்யும்படி கடவுள் கனவிலே சொல்லி அனுப்பவும் இல்லை..."
பின் எதற்காக நேற்று என்னைத் தப்புவித்தாய்? எதற்காக இப்போது படகு தள்ளிக்கொண்டு வருகிறாய்!
அதைப்பற்றி நீ கேட்க வேண்டாம். அது என் சொந்த விஷயம்.
வந்தியத்தேவன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. தன்னுடைய வீர சௌந்தரிய வடிவழகைக் கண்டு தன் பேரில் இப்பெண் மோகங்கொண்டு விட்டாளோ என்று நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவளுடைய பேச்சும் நடவடிக்கைகளும் அம்மாதிரி எண்ண இடம் தரவில்லை. வேறு ஏதோ மர்மமான காரணம் இருக்கிறது. இவளுடைய வாயைப் பிடுங்கி அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
'ஒரு விஷயத்தை நினைத்தால் கொஞ்சம் எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது..." என்றான்.
அது என்ன? உனக்குக் கூடவா கவலையாயிருக்கிறது?
இலங்கையில் காடும் மலையும் அதிகம் என்று சொல்லுகிறார்கள்.
'இலங்கையில் பாதிக்கு மேலே காடும் மலையுந்தான்."
'காட்டு மிருகங்கள் அங்கே அதிகம் என்று சொல்கிறார்கள்"
'காட்டு யானைகள் மந்தை மந்தையாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். சில சமயம் காடுகளுக்கு வெளியிலும் யானைக் கூட்டம் வந்துவிடும்."
'இலங்கையில் உள்ளவர்கள் காட்டுமிராண்டி மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றான்.
'அது முழுப் பொய்."
'அப்படியானால் சரி. நீ சொன்னால் உண்மையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட காட்டுப் பிரதேசத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்."
'அது ஒன்றும் கஷ்டமில்லையென்று சற்று முன் சொன்னாயே?"
'ஆமாம். சொன்னேன். சூரியன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியுமென்று முதலில் நினைத்தேன்."
'இப்போது ஏன் வேறு விதமாக நினைக்கிறாய்?"
'சூரியனை மேகங்கள் மறைத்திருக்கலாம். அல்லது கடலுக்கடியில் சென்றிருக்கலாம்."
பூங்குழலி, 'இந்தச் சூரியனை எந்த மேகமும், கடலும் மறைத்து விட முடியாது. பொன்னியின் செல்வரை மறைக்க முயலும் மேகமும் ஒளி பெறும். கடலும் ஜொலிக்கும்!"
இளவரசரைப் பற்றிப் பேசும்போது இவளுடைய உற்சாகம் எப்படிப் பொங்குகிறது? சோழநாட்டுப் பிரஜைகள் பலரையும் போல இந்தப் பெண்ணும் அவரைத் தெய்வமாகக் கருதுகிறாள்! அருள்மொழி வர்மரிடம் அப்படிப்பட்ட வசீகர சக்தி என்ன இருக்கும்? இவ்விதம் மனதில் எண்ணிக்கொண்டு, 'அப்படியானால் இலங்கையில் இளவரசரைத் கண்டுபிடிப்பது கஷ்டமில்லையென்றா சொல்கிறாய்?" என்றான்.
சோழ சைன்யம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனால், இளவரசர் இருக்கும் இடம் தானே தெரிகிறது.
அது எப்படி? இலங்கையில் பாதி அளவு சோழ சைன்யம் பரவி இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே?
ஆமாம். மாதோட்டத்திலிருந்து புலஸ்திய நகரம் வரையில் சோழர் படை பரவியிருக்கிறது என்றுதான் நானும் கேள்விப்பட்டேன்...
பின்னே? அவ்வளவு பெரிய பிரதேசத்தில் இளவரசர் எங்கே இருக்கிறாரோ? காட்டு வழிகளில் தேடிச்சென்று அவரைக் கண்டுபிடிக்க அதிக நாள் ஆகலாம். இந்த ஓலையை உடனே அவரிடம் நான் சேர்ப்பித்தாக வேண்டும். நீ தான் ஓலையைப் பார்த்துவிட்டாயே? எவ்வளவு அவசரம் என்று உனக்குத் தெரிந்திருக்குமே?
சமுத்திரகுமாரி இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்.
'இளவரசர் இருக்குமிடம் நிச்சயமாகத் தெரிந்தால் வீண் அலைச்சல் அலையாமல் அவர் இருக்குமிடத்துக்கு நேரே போய்விடலாம்" என்றான் வந்தியத்தேவன்.
'அதற்கு ஒரு வழி இருக்கிறது" என்றாள் பூங்குழலி.
'இருக்கும் என்று நம்பித்தான் உன்னைக் கேட்டேன்."
காலையில் நாகத் தீவில் உன்னை இறக்கி விடுவதாகச் சொன்னேன் அல்லவா?
'ஆமாம்!"
'நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது."
'தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே!"
'பயப்படாதே! ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்த பகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாராம். அதனால் போதத் தீவு என்று பெயர் வந்தது."
'பின்னால் அது 'பூதத் தீவு" என்று ஆகி விட்டதாக்கும்."
'ஆமாம்! 'பூதத் தீவு" என்ற பெயரைக் கேட்டே உன்னைப்போல் பலர் பயங்கரமடைந்தார்கள். பிறகு அந்தத் தீவுக்குச் சாதாரணமாக யாரும் போவதில்லை. பூதத்துக்குப் பயப்படாதவர்கள்தான் போவார்கள்."
'அதாவது உன்னைப் போன்ற தைரியசாலிகள். கொள்ளிவாய்ப் பிசாசுக்குப் பயப்படாதவள் அல்லவா நீ? சரி. பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய்?"
'பூதத் தீவின் கரையில் ஒரு நாழிகை நேரம் நீ தாமதித்தால் பொன்னியின் செல்வர் இப்போது இலங்கையில் எங்கே இருக்கிறார் என்று விசாரித்துச் சொல்வேன்..."
'பூதத் தீவில் யாரை விசாரிப்பாய்...?"
'பூதத் தீவில் ஒரு பூதம் இருக்கிறது. அதை விசாரிப்பேன்.."
'அந்தப் பூதத்தை எனக்கும் காட்டுவாயல்லவா?"
'அதுதான் முடியாது. நீ என்னைத் தொடர்ந்து தீவுக்குள் வரக்கூடாது. கரையில் படகைப் பார்த்துக்கொண்டு காத்திருப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்தால் நான் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்வேன்."
'சரி, அப்படியே ஆகட்டும்!" என்றான் வல்லவரையன்.
காற்று சுகமாக அடித்தது. பாய் மரத்தின் உதவியினால் படகு விர்ரென்று கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. கடலின் ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது.
வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. விழிப்பு நிலையிலிருந்து உறக்க நிலைக்கு இலேசாக நழுவிச் சென்றான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக