ஒரு நாட்டில் புத்தர் ஒருவர் இருந்தார்.
அவருக்கு மேளம் அடிப்பதில் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார். அவர் தன் கையில்
எப்போதும் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டுதான் இருப்பார். தன்னைத் தேடி வருபவர்கள்,
அவருக்கு பெரிய அளவில் காணிக்கை கொடுத்தால், அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை
அடித்துத் தானம் அளித்தவரின் பெருமையை அங்கே கூடியிருப்பவர்களின் முன்பாக சொல்லி
மகிழ்வார்.
அந்த நாட்டு மன்னனுக்கு அந்த புத்தரின்
செயல் பற்றிய தகவல் தெரிய வந்தது. இந்த நாட்டில், தானம் அளிப்பதில் தன்னை விட
உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேரவேண்டும் என்ற
எண்ணத்தில் யானைகளில் முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்கட்டிகள், பழம், உணவு
வகைகளை ஏற்றிக்கொண்டு அந்த புத்தரை காண சென்றார்.
அப்போது மன்னர் செல்லும் வழியில் ஒரு
மூதாட்டி வந்தார். அந்த மூதாட்டி மன்னரிடம்! மன்னரே, புத்தரைத் தரிசிப்பதற்காகப்
நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் கடுமையான பசியாக இருக்கிறது!
சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று வேண்டினார்.
உடனே அந்த மன்னன் அவரை நோக்கி, ஒரு
மாதுளம்பழத்தை வீசினார். சிறிது நேரத்தில், மன்னர் புத்தரின் இருப்பிடத்தை அடைந்து
தான் கொண்டு வந்த அனைத்தையும் தானமாகப் புத்தரிடம் செலுத்தினார். அந்த மன்னர், தன்
தானத்தின் அளவிற்குப் புத்தர் ஒரு அரைமணி நேரமாவது மேளம் அடித்து மகிழ்வார் என்று நினைத்தார்.
ஆனால் புத்தர் எழுந்திருக்கவே இல்லை.
அந்த சமயம் மன்னர் அதிர்ச்சியில்
உறைந்திருந்த நேரத்தில், அவரிடம் மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தார்.
புத்தரின் காலடியில் மன்னனிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம்பழத்தை சமர்ப்பித்தார்.
உடனே புத்தர் எழுந்து மகிழ்ச்சியுடன் தான் வைத்திருந்த மேளத்தை வேகமாக அடித்தார்.
அதைக்கண்ட மன்னனுக்குக் கடுமையான கோபம்
ஏற்பட்டது. உடனே மன்னர் புத்தரைப் பார்த்து, புத்தரே, இதென்ன அநியாயம்!
இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் அதிக காணிக்கை
கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே! இது உங்களுக்கு சரியாகப்படுகிறதா? என்று
கேட்டார்.
அதற்கு புத்தர், மன்னா, நீங்கள்
காணிக்கை அளித்ததன் நோக்கம் உங்கள் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற
உள்நோக்கத்திற்கானது. ஆனால் இந்த மூதாட்டியோ, உங்களிடம் இரவலாக பெற்ற பழத்தை, தனது
கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், தன்னுயிர் போனாலும் போகட்டும் என்று நினைத்து
என்னிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதனால் தானத்திலேயே உயர்ந்த தானம்,
தன்னுயிர் பிரியும் நிலை இருந்தாலும், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு
உதவுவதே! அந்த மகிழ்ச்சியில் தான் மேளத்தை அடித்தேன் என்றார். இதைக்கேட்ட மன்னர்
குனிந்த தலை நிமிரவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக