வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல
அபாயங்களில் இருந்து தப்பி பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், பழையாறையை
பற்றி தெரிந்து கொள்வோம்.
நதிகளும் ஓடைகளும் தடாகங்களும்
கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்து
திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன.
இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில்
கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.
அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு
பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி
முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின்
ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின்
நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார்
கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை
வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன.
இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு
முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு
இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து
நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம்
கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது.
இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த
சேக்கிழார் பெருமான்,
'தேரின் மேவிய செழுமணி வீதிகள்
சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி
பழையாறை"
என்று வர்ணித்தார் என்றால், சுந்தர
சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாயிருந்திருக்கும் என்று ஊகித்துக்
கொள்ளலாம்.
சுந்தர சோழ சக்கரவர்த்தி நோய்ப்பட்டு
தஞ்சை மாநகர் சென்ற பிறகு வெளிநாடுகளிலிருந்து சிற்றரசர்களும் இராஜ தூதர்களும்
மந்திரிப் பிரதானிகளும் சேனாதிபதிகளும் இங்கு வருவது நின்று போயிற்று. அவர்களுடன்
வழக்கமாக வரும் பரிவாரங்களின் கூட்டமும் குறைந்து விட்டது. நாலு படை வீடுகளிலும்
வசித்த போர் வீரர்களில் பாதிப் பேர் இப்போது ஈழ நாட்டுப் போர்க்களங்களில் தமிழர்
வீரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் ஒரு பகுதியார் வடதிசை
எல்லையிலும் இன்னொரு பகுதியினர் மதுரையிலும் இருந்தார்கள். எனவே, படைவீட்டுப்
பகுதிகளில் இப்போது பெரும்பாலும் வயோதிகர்களும் பெண்மணிகளும் சிறுவர் சிறுமிகளுமே
காணப்பட்டார்கள்.
மழவர்பாடியில் வாழ்ந்து வந்த
வேளக்காரப் படையினர் தத்தம் குடும்பங்களோடு தஞ்சைக்குச் சென்று விட்டபடியால்,
நகரின் அப்பகுதியானது பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சென்று இருந்தது. இராஜாங்க
காரியங்களை நடத்தி வந்த அமைச்சர்கள், சாமந்தகர்கள், அதிகாரிகள் அனைவரும் தத்தம்
குடும்பத்தோடு தஞ்சைபுரிக்குச் சென்று விட்டார்கள். இப்படியெல்லாமிருந்த போதிலும்
பழையாறை வீதிகளில் கூட்டத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. இப்போது
அவ்வீதிகளில் பெரும்பாலும் ஆலய ஸ்தபதிகள், சிற்பக் கலைஞர்கள், சிவனடியார்கள்,
தேவார ஓதுவார்கள், அரண்மனை ஊழியர்கள், ஆலயப் பணியாளர்கள், கோயில்களில் சுவாமி
தரிசனம் செய்யவும் திருவிழாக் காட்சிகளைப் பார்க்கவும் வெளியூர்களிலிருந்து வரும்
ஜனங்கள் ஆகியோர் அதிகமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
இன்றைக்கு ஏதோ திருவிழா போலக் காண்கிறது.
வீதிகளில் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடவரும் பெண்டிரும் சிறுவர் சிறுமிகளும்
உலாவி வருகின்றனர். தெருமுனைகளில் ஆங்காங்கு ஜனங்கள் கும்பல் கூடி நிற்கின்றனர்.
அக்கும்பல்களுக்கு மத்தியில் ஏதேதோ வேடம் புனைந்தவர்கள் நின்று ஆடிப்
பாடுகிறார்களே! இவர்கள் கிருஷ்ணனைப் போலவும் கோபாலர்களைப் போலவும் அல்லவா வேடம்
புனைந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு கிருஷ்ணர் ஒரு மலையை
தூக்கிக் கொண்டு நிற்கிறாரே? அவரைத் தேவராஜனாகிய இந்திரன் வந்து வணங்குகிறானே?
இன்னொரு கூட்டத்தின் நடுவில் கிருஷ்ணனை நாலு முகங்கள் உள்ள பிரம்மதேவர் வந்து
தோத்திரித்து வணங்குகிறாரே! ஆகா! இப்போது தெரிகிறது இன்று கண்ணன் பிறந்த நாள்.
அந்த விழாவை தான் ஜனங்கள் இவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கங்கே
உறியடித் திருநாள் நடைபெறுகிறது மஞ்சள் நீரை வாரி இறைக்கிறார்கள்.
நந்திபுர விண்ணகரத்துப் பெருமாள்
கோவிலைச் சுற்றி இந்தத் திருவிழாக் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைப்பெறுகின்றன.
'கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்ணுக்கினியன கண்டேன்!"
என்று பாடுவது யார்? தெரிந்த
குரலாயிருக்கிறதே! இதோ நமது பழைய சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி அவரைச்
சுற்றிலும் ஒரு கும்பல் கூடுகிறது. சிலர் பக்தி சிரத்தையுடன் கேட்கிறார்கள். வேறு
சிலர் எகத்தாளம் பண்ணத் தொடங்குகிறார்கள். ஆழ்வார்க்கடியாரின் கைத் தடியினால்
யாருடைய தலைக்குச் சேதம் நேருமோ?
விண்ணகரக் கோயிலின் வாசலில் ஒரு
சலசலப்பு. வீதிப்புறத்தில் நிறுத்தியிருந்த ரதங்களும் பல்லக்குகளும் கோயில்
வாசலுக்கு வருகின்றன. கோயிலுக்குள்ளேயிருந்து மாதரசிகள் சிலர் வருகிறார்கள்.
இப்பெண்மணிகள் பெரிய குலத்துப் பெண்டிராகவே இருக்க வேண்டும்.
ஆம். ஆம்! பழையாறை அரண்மனைகளில்
வாழும் மகாராணிகளும் இளவரசிகளுந்தான் இவர்கள்.
எல்லாருக்கும் முதலில் 'பெரிய
பிராட்டி" என்று நாடு நகரமெல்லாம் போற்றும் செம்பியன் மாதேவி வருகிறார். இவர்
மழவரையர் குலப் புதல்வி. சிவஞானச் செல்வரான கண்டராதித்தரின் பட்ட மகிஷி. வயது
முதிர்ந்த விதவைக் கோலத்திலும் இவருடைய முகத்தில் எத்தகைய தேஜஸ் ஜொலிக்கிறது! அவருக்குப்
பின்னால் அரிஞ்சய சோழரின் பத்தினியான வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி
வருகிறார். ஆகா! இவருடைய அழகை என்னவென்று சொல்ல! இந்த முதிய பிராயத்திலும் இவர்
முகத்தில் இப்படிக் களை வீசுகிறதே! யௌவனப் பிராயத்தில் எப்படி இருந்திருப்பாரோ?
இவருடைய புதல்வராகிய சுந்தர சோழர் வனப்பு மிக்கவர் என்று பிரசித்தி
பெற்றிருப்பதில் வியப்பு என்ன? இவரைத் தொடர்ந்து சுந்தர சோழரின் மற்றொரு
பத்தினியான சேரமான் மகள் பராந்தகன் தேவி வருகிறார். இன்னும் பின்னால்,
வானுலகிலிருந்து நேரே இறங்கி வந்த தேவ கன்னிகையரையொத்த குந்தவைப் பிராட்டி, வானதி,
இன்னும் நாம் அரிசிலாற்றங்கரையில் பார்த்த அரசகுலப் பெண்கள் வருகிறார்கள்.
விஜயாலயன் காலத்திலிருந்து சோழ
வம்சத்தினர் சிவனையும், துர்க்கையையும் குலதெய்வமாக கொண்டு வழிபடுகிறவர்கள். ஆனால்
திருமாலிடமும் மற்ற சமயங்களிடமும் இவர்களுக்கு துவேஷம் என்பது கிடையாது. இன்று
கண்ணன் பிறந்த நாள் என்பதை முன்னிட்டுப் பெருமாள் கோவிலுக்கு வந்தார்கள் போலும்.
பெரியபிராட்டி செம்பியன் மாதேவி
பல்லக்கில் ஏறும் சமயத்தில் ஆழ்வார்க்கடியாருடைய பாடல் அவருடைய காதில் விழுந்தது.
அதற்காகவென்றே ஆழ்வார்க்கடியார் உரத்த சத்தம் போட்டுப் பாடினார் போலும். செம்பியன்
மாதேவி அவரைத் தம் அருகில் அழைத்து வரச் செய்தார்.
ஆழ்வார்க்கடியார் அடக்க ஒடுக்கத்துடன்
வந்து நின்றார்.
'திருமலை! சில நாட்களாக உன்னைக்
காணோமே? ஸ்தல யாத்திரை சென்றிருந்தாயோ?" என்று கேட்டார்.
'ஆம், தாயே! ஸ்தல யாத்திரை சென்றிருந்தேன்.
திருப்பதி, காஞ்சி, வீரநாராயணபுரம் முதலிய பல க்ஷேத்திரங்களை தரிசித்தேன். சென்ற
இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்!"
'அரண்மனைக்கு நாளைக்கு வந்து,
யாத்திரையில் கண்டு கேட்ட விந்தைகளைச் சொல்லு!"
'இல்லை, அம்மா! இன்றிரவு மறுபடியும்
நான் புறப்பட வேண்டும்."
'அப்படியானால் இன்று மாலையே
வந்துவிட்டுப் போ!"
'வருகிறேன் தாயே! தங்கள் சித்தம் என்
பாக்கியம்!"
பல்லக்குகள், ரதங்கள் எல்லாம்
புறப்பட்டு அரண்மனைக்கு விரைந்து சென்றன. குந்தவைப்பிராட்டி, ஆழ்வார்க்கடியாரை
சுட்டிக்காட்டி ஏதோ கூற, மற்ற அரசிளங்குமாரிகள் கலீர் என்று சிரித்தார்கள்.
சிரிப்புக்குக் காரணம் கண்டறிய ஆழ்வார்க்கடியார் அந்தப் பக்கத்தை நோக்கினார்.
குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின.
ஆழ்வார்க்கடியார் அச்செய்தியை அறிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைவணங்கினார்.
சோழ மாளிகைகளிலே செம்பியன் மாதேவி
வசித்த மாளிகை நடுநாயகமாக இருந்தது. அதன் சபா மண்டபத்தில் பொன்னால் செய்து
நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அந்தப் பெரு மூதாட்டி அமர்ந்திருந்தார்.
காரைக்காலம்மையார், திலகவதியார் முதலான பரம சிவ பக்தைகளின் வழித்தோன்றிய
அப்பெண்மணி வெண் பட்டாடை உடுத்தி, விபூதியும், ருத்ராட்ச மாலையும் தரித்து, வேறு
எவ்வித ஆபரணங்களும் பூணாமல், அளவற்ற செல்வங்களுக்கிடையில் - அஷ்ட ஐசுவரியங்களுக்கு
மத்தியில், வைராக்கிய சீலையாக வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.
தலையில் மணிமகுடமும் வேறு ஆபரணங்களும் அணியாதிருந்த போதிலும் அவருடைய கம்பீரத்
தோற்றமும், சுயம் பிரகாசமான முகமும் அரச குலத்தில் பிறந்து, அரச குலத்தில் புகுந்த
அரசர்க்கரசி என்பதை புலப்படுத்தின. சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை
பேரும் விதிவிலக்கின்றி இந்தப் பெரும் மூதாட்டியைத் தெய்வமாக மதித்துப் பாராட்டிக்
கொண்டாடி அவருடைய விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்லாமல் நடந்து வந்ததில் யாதொரு
வியப்பும் இல்லை என்றே நினைக்கத் தோன்றும்.
ஆயினும் அத்தகைய பயபக்தி மரியாதைக்கு
இப்போது ஒரு களங்கம் ஏற்பட்டிருந்தது. அந்தப் பெண்ணரசியின் புதல்வர் மதுராந்தகத்
தேவர் அன்னையின் கருத்துக்கு மாறாக, அவருடைய கட்டளையை மீறி, பழுவேட்டரையர்
குலத்தில் மணம் புரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி சோழ சிம்மாசனத்துக்கு அவர்
ஆசைப்படுகிறார் என்ற சேதியும் பராபரியாக வந்து செம்பியன் மாதேவியின் காதில் விழுந்து
அவருக்குச் சிறிது மனக் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
செம்பியன் மாதேவியின் அரண்மனை
முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின்
கோஷ்டியும் ஜேஜே என்று எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூர தூர தேசங்களிலிருந்து
சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவது
வழக்கம். சிவ பூஜைப் பிரசாதம் கொண்டு வரும் அர்ச்சகர்களின் கூட்டமும் அதிகமாகவே
இருக்கும்.
அன்றைக்குத் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்),
தென்குரங்காடுதுறை, திருமழபாடி முதலிய ஊர்களிலிருந்து சிற்பிகளும் சிவபக்தர்களும்
வந்து தத்தம் ஊர்களில் கோவில்களில் கருங்கல் திருப்பணி செய்வதற்கு மகாராணியின்
உதவியைக் கோரினார்கள். கோவில்களை எந்தெந்த ஊர்களில் என்ன முறையில் கட்ட உத்தேசம்
என்பதற்குச் சித்திரங்களும் பொம்மைக் கோவில்களும் கொண்டு வந்திருந்தார்கள்.
முதல் இரண்டு கோவில்களின்
திருப்பணியைச் செய்ய உதவி அளிப்பதாகச் சொல்லிவிட்டு, 'மழபாடியா? எந்த
மழபாடி?" என்று பெரிய பிராட்டி கேட்டார்.
'சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குரல்
கொடுத்து அழைத்துப் பாடல் பெற்றாரே, அந்தப் பெருமான் வீற்றிருக்கும்
மழபாடிதான்!" என்று அந்த ஊர்க்காரர் சொன்னார்.
'அது என்ன சம்பவம்?" என்று
மழவரையரின் செல்வி கேட்க, மழபாடிக்காரர் கூறினார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு
ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க
வேண்டியதாயிருந்தது. நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது,
'சுந்தரம்! என்னை மறந்தாயோ!" என்று ஒரு குரல் கேட்டது.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது
தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார். பக்கத்தில் இருந்த சீடர்களைப்
பார்த்து 'இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா?" என்று
கேட்டார்.
'ஆம், சுவாமி! அந்தக் கொன்னை
மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோவில் இருக்கிறது!" என்று
சீடர்கள் சொன்னார்கள்.
உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார்.
பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது.
சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார்.
அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு
அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார்.
'சுவாமி! தங்களை நான் மறந்து
விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை
நினைப்பேன்?" என்னும் கருத்து அமைத்து,
பொன்னார் மேனியனே! புலித் தோலை
அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை
அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே!
என்னே உன்னையல்லால் இனி யாரை
நினைக்கேனே?
என்று பாடினார். தாயே! இன்னும் அந்தக்
கோவில் சிறிய கோயிலாகக் கொன்னை மரங்களின் மறைவிலேயே இருக்கின்றது. அதற்குத்தான்
உடனே திருப்பணி ஆரம்பிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
'அப்படியே ஆகட்டும்!" என்றார்
செம்பியன் மாதேவி.
ஆழ்வார்க்கடியாரும் அவருடன்
இன்னொருவரும் சற்று முன்னால் வந்து நடந்ததையெல்லாம் கவனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக