Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜனவரி, 2020

முதற் பகைவன்! (முதல் பாகம் : புது வெள்ளம்)


க்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்து கொண்டு உறுமிய ஆந்தையை பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

'அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்தி விட்டது! வெட்டுடா அதை!" என்றான் ஒருவன்.

'வேண்டாம் உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்கு பத்திரப்படுத்தி வையுங்கள்! நம் பகைவர்களை கூண்டோடு ஒழிப்பதற்கு கூராக்கி வையுங்கள்! ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல. அவை நம் சிநேகிதர்கள்! மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன!" என்றான் ரவிதாஸன் என்பவன்.

அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெல்ல மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாப்புறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவெளியிருந்தது. மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாக சாய்ந்துக் கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.

'தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும் வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்கு குறைவில்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில் வெளியில் தெரியாதபடி இரகசியத்தை பேணும் சக்தி வேண்டும்! நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்கு போக வேண்டும். இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்கு தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால் இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான்! அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா? உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?" என்றான் ரவிதாஸன்.

'நான் போகிறேன்!" 'நான் தான் போவேன்!" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.

'யார் போகிறது என்பதை அடுத்த முறை கூடி தீர்மானிக்கலாம்! அதுவரைக்கும் இங்கே செய்யவேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன!" என்றான் ரவிதாஸன்.

'ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது?" என்று ஒருவன் கேட்டான்.

'கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம். நெடுகிலும் பகைவர்கள். ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால், சேதுவுக்கு சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்?"

'எனக்கு தெரியும்," 'எனக்கும் தெரியும்" என்ற குரல்கள் எழுந்தன.

'முதலில், இலங்கை மன்னன் மகிந்தனை கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்க வேண்டும். ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்கவேண்டும். ஆ! நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே? யாராவது அவனை இன்றைக்கு பார்த்தீர்களா?"

'இதோ வந்துகொண்டிருக்கிறேன்!" என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா! இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது!

புதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் மரத்துக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிடக் கரையில் அரச மரத்தடியில் சந்தித்துப் பேசியவர்கள் தான் என்று தெரிந்துகொண்டான்.

புது மனிதர்களை கண்டதும் ரவிதாஸன், 'வாருங்கள்! வாருங்கள்! ஒரு வேளை ஏதாவது உங்களுக்கு ஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன். எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்?" என்றான்.

'கொள்ளிடக் கரையோடு வந்தோம். வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது!" என்றான் சோமன் சாம்பவன்.

'புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தை சாதித்துவிட முடியும்?" என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களின் ஒருவன்.

'அப்படிச் சொல்லாதே, அப்பனே! சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது! ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள். அவற்றோடு சண்டையிட்டு சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங் கூட்டமாக வருகின்றன. ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால் தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது. இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா?"

'அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம்! கூண்டோடு நாசம் செய்வோம்!" என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.

'இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்!" என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.

சோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ஆ! ஒரு பக்கம் புலி! இன்னொரு பக்கம் பனை! என்று சொன்னான்.

'சோழனுடைய பொன். பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன? நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே?" என்றான் ரவிதாஸன்.

'ஆம். கொண்டு வந்திருக்கிறார். கேளுங்கள்! அவரே சொல்லுவார்!" என்றான்.


இடும்பன்காரி சொல்லத் தொடங்கினான், 'தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவு தான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையரும், வணங்காமுடி முனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்கு சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள்.

சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லை என்றும் அதிகநாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாக சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தக தேவர் இதற்கு சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். 'அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்" என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடுபல்லக்கின் திரையை திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தக தேவர் வெளிவந்தார்! பட்டம் கட்டிக் கொள்ள தமக்கு சம்மதம் என்று அவர் தெரிவித்தார்..."

'இப்படிப் பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடிசூட்டப் போகிறார்களாம்! நன்றாய் சூட்டட்டும். எல்லாம் நாம் எதிர்ப்பார்த்தபடியே தான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா? இடும்பன்காரி! மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படி தெரிந்துகொண்டீர்? இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்ந்தது?" என்று கேட்டான் ரவிதாஸன்.

'நடு ராத்திரியில் அவர்கள் சபை கூடிய போது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக்கொள்ள என்னை காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்துகொண்டே என் காதுகளையும் கண்களையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்."

'அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா?"

'தெரிந்தது. அந்த நள்ளிரவு கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்து கொண்டிருந்தான்!"

'ஆஹா! அவன் யார்?"

'முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்..."

'ஆகா! அவன் தானா? அவனை நீர் என்ன செய்தீர்? சம்புவரையரிடம் பிடித்துக்கொடுக்கவில்லையா?"

'இல்லை. ஒரு வேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்துவிட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்."

'பெரிய பிசகு செய்துவிட்டீர். அவன் நம்மவன் அல்ல. கட்டையாய் குட்டையாய் இருப்பான். சண்டைக்காரன். பெயர் திருமலையப்பன். 'ஆழ்வார்க்கடியான்" என்று சொல்லிக் கொள்வான்."

'அவனே தான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்டேன். அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது."

'அதை எப்படி அறிந்தீர்?"

'நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூலையில் படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக் கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய் நின்றேன். என்னையும் வரச்சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வட கரையோடு திரும்பிவிட்டார். என்னைத் தென்கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டு திரும்பும்படி சொன்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால் தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது."

'சரிதான், சரிதான்! அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்?"

'கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சினேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்கு சிறிது சந்தேகம் உதித்தது. அவனும் நம்மை சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காக காத்துக் கொண்டிருந்ததாக தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையை செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்துகொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்..."

'நீர் செய்தது பெரும் பிசகு! முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையை செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள். நம்முடைய காரியம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது! இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன் தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக் கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கையில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியை திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்கு சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்து தள்ளிக் கொன்றுவிடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றை கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படி கொன்றுவிடுங்கள்! துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்!..."

'ரவிதாஸரே! நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் யார்?"

'யாரா? அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்!"

'யாருடைய ஒற்றன்?"

'எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன். இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன் என்றான்."

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/9OpM94

20. முதற் பகைவன்!
ரவிதாஸன், பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்.

'ஆகா! அப்படியா? சிவபக்தியில் மூழ்கி, ஆலய திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்கு ஒற்றன் எதற்கு?"

'அதெல்லாம் பொய். இதற்கு முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வெளி வேஷமோ, அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசு அல்லவா? அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்?"

'ரவிதாஸரே! அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ?"

'குடந்தையில் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவதுபோல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது. போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்."

'அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்?"

'இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்கு பயம்! அவனை கண்ட இடத்திலே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!"

இதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது. உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது.

போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்கு தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு 'நச்" சென்று தும்மினான்.

அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது. காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது. ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த சதிகாரர்களுக்கு சிறிது கேட்டு விட்டது.

'அந்த மருத மரத்துக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தை கொண்டு போய் என்னவென்று பார்" என்றான் ரவிதாஸன்.

சுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வெளிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு! இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப்போகிறது. அப்புறம் என்ன நடக்கும்? தப்பிப் பிழைத்தால் புனர் ஜன்மந்தான்!

திருமலையப்பனின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது? தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்று முற்றும் பார்த்தான். வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான். அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக்கிளையில் ஒரு ராட்சத வெளவால் தலைகீழாக தொங்கி தவம் செய்துகொண்டிருந்தது! உடனே ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வெளவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டான்.

சுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வெளவாலை அவன் முகத்தின் மீது எறிந்தான். சுளுந்து கீழே விழுந்து வெளிச்சம் மங்கியது. வெளவாலின் இறக்கையால் முகத்தில் அடிப்பட்டவன், 'ஏ! ஏ! என்ன! என்ன?" என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ஓட்டம் பிடித்தான். அடுத்த கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.

பலர் சேர்ந்து, 'என்ன? என்ன?" என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வெளவால் தன்னை தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக