Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜனவரி, 2020

கங்காதேவி சந்தனுவை விட்டு பிரிதல்...!


டைசியாக சந்தனு-கங்காதேவிக்கு எட்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையையும் கங்கையில் வீசி விட்டால் என்ன செய்வதென்று பயந்த சந்தனு கங்காதேவியைப் பார்த்து, நீ யார்? எதற்காக இப்படி செய்கிறாய்? இந்தக் குழந்தையாவது கொல்லாமல் விட்டுவிடு என கூறினான். கங்காதேவி, மன்னா! நான் இந்த குழந்தையை கொல்லமாட்டேன். ஆனால், தாங்கள் என்னுடைய நிபந்தனைப் படி நடக்காமல், என்னை யார்? என்று கேட்டதால் இனி உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறினாள். நான் போகும் முன், நான் யார்? என்பதை தங்களிடம் கூறிவிட்டு செல்கிறேன். நான் ஜன்கு மகரிஷியின் மகள். என்னுடைய பெயர் கங்காதேவி. தேவர்களுக்கு உதவுவதற்காகவே, நான் தங்களின் மனைவியாக இருந்தேன். நமக்கு குழந்தைகளாக பிறந்தவர்கள் எல்லாம் புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். வசிஷ்டரின் சாபத்தால், மனிதர்களாக பிறந்தனர். தங்களை தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அவர்களும் வசிஷ்டரின் சாபத்திலிருந்து சாப விமோசனம் அடைந்தனர்.

எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான். இவனை மகனாகப் பெற்றதுடன் என்னுடைய கடமை முடிந்தது. தாங்கள், எனக்கு விடை தரவேண்டும் என்று கேட்டாள். கங்காதேவி கூறியதைக் கேட்ட சந்தனு, ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் எதற்காக சாபம் கொடுத்தார்? எட்டாவது மகனாக பிறந்திருக்கும் இந்த குழந்தை மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும்? இதற்கான காரணங்களை எனக்கு விளக்கமாக சொல் என்று கேட்டான். கங்கா தேவி, மன்னா! முனிவர்களில் சிறந்தவர் வசிஷ்டர். வசிஷ்டர், வருணனின் புதல்வர் ஆவார். வசிஷ்டர் மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவர் நந்தினி என்ற பசு ஒன்றை வைத்திருந்தார். ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும், அவரவர் மனைவியருடன் மேருமலைச் சாரலுக்கு வந்தனர். அப்போது பிரபாசன் என்ற வசுவின் மனைவி, வசிஷ்டரிடம் இருந்த பசுவான நந்தினியைக் கண்டு, அந்த பசு தனக்கு வேண்டும் என்று கேட்டாள்.

மனைவியின் விருப்பத்தை அறிந்த பிரபாசன், இந்த பசு வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது. இந்த பசு தெய்வத்தன்மை வாய்ந்தது. இந்த பசுவின் பாலைப் பருகும் மனிதர்கள் இளமையும், அழகும் குறையாமல், நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என்றான். இதைக் கேட்ட பிரபாசனின் மனைவி, தனக்கு மண்ணுலகில் ஜிதவதி என்று ஒரு தோழி இருப்பதாகவும், அவள் அழகும், இளமையும் குறையாமல் இருக்க, அவளுக்கு இந்த பசுவை அன்பளிப்பாக தர விரும்புவதாக கூறினாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன், மற்ற வசுக்களுடன் நந்தினி என்னும் காமதேனுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்து, தன் மனைவியிடம் கொடுத்தான். வசிஷ்டர், தன் தவத்தை முடித்துவிட்டு ஆசிரமத்திற்கு வந்தார். அப்பொழுது ஆசிரமத்தில் இருந்த பசுவும், கன்றுகுட்டியும் களவாடப்பட்டிருப்பதை கண்டு மிகவும் கோபங்கொண்டார். தன் பசுக்களை களவாடிச் சென்ற வசுக்கள் மனிதராக பிறக்க வேண்டும் சாபமிட்டார். இதை அறிந்த வசுக்கள் வசிஷ்டரிடம் பசுவையும், கன்றையும் கொடுத்துவிட்டு, எங்களை மன்னிக்க வேண்டும் என அவரின் காலில் விழுந்து வேண்டினர்.

அப்பொழுது வசிஷ்டர், என் பசுவும் கன்றும் களவாட காரணமாக இருந்த பிரபாசன் தவிர மற்றவர்கள் விரைவில் சாப விமோசனம் பெறுவர். ஆனால் பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான். அவன் பெண் இன்பத்தை துறந்து, சந்ததி இன்றி வாழ்வான். அவன் அனைவருக்கும் நன்மைகள் செய்து, பேரும், புகழும் பெற்று சாஸ்திரங்களில் வல்லவனாக திகழ்வான் என்று வசிஷ்டர் கூறினார் என கங்காதேவி கூறினாள். பிறகு கங்காதேவி, வசுக்களில் ஒருவரான பிரபாசனை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இவன் பெரிவன் ஆன பின் தங்களிடம் ஒப்படைக்கிறேன். தாங்கள் அழைக்கும்போது நான் வருவேன் எனக் கூறிவிட்டு சந்தனுக்கு விடைக் கொடுத்து மறைந்தாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக